Sivapuranam by Manickavasagar (44-48)

44. நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே

45. மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே

இரண்டு முக்கியமான சம்ஸ்கிருதச் சொற்கள் – ‘ஸம்ஸ்காரம்’, ‘ஸம்ஸாரம்’ என்பன.

நாம் ஆசையினால் செய்கின்ற எல்லாச் செயலும், அதன் விளைவினால் நம்மைப் பாதிக்கும். அது சுகமாகவும் இருக்கலாம். துக்கமாகவும் இருக்கலாம். அவற்றால் விளியும் பாதிப்புக்கள் உடனேயோ, அல்லது வேறொரு காலத்திலோ, வேறொரு பிறவியிலோகூட நமக்கு வரலாம்.  இதுவே கர்ம விதி.

அனுபவிக்கவேண்டிய வினைப்பளு பாக்கி இருக்கும் வரை, ஜீவன் அப்பாதிப்பினை ஏற்பதற்குத் தக்க உடலுடன் உலகில் பிறந்து கொண்டே இருக்கும்.  அவ்வாறு, பிறந்து உழலும் துயரமே ஸம்ஸாரம். ஸம்ஸாரத்துக் காரணமாய் இருக்கின்ற வினைப்பளுவாகிய வித்தே, ஸம்ஸ்காரம். ஸம்ஸ்காரம் என்பதற்குத் தமிழில் வினைப்பயன் அல்லது வினைப்பளு எனக் கொள்ளலாம்.   இதற்கு ‘வாசனா’  எனவும் ஒரு பெயர்.  மலரின் வாசனை எப்படி நுண்ணியமாக மலரைப் பற்றி இருக்கிறதோ, அதேபோல, வினைப்பளு எனும் வாசனை மனதைப் பற்றி இருக்கும்.

மாணிக்கவாசகர், இறைச் சேவை ஒன்றையே இடைவிடாமல் சிந்தித்து வருவதால், மனதின் வாசனை,  மிகவும் இனிமையாகிவிடுகிறது எனக் காட்டுகின்றார்.  அதனால், ஸம்ஸ்காரம் என்பது, ஸம்ஸாரம் எனும் பாதிப்பில் நம்மைத் தள்ளாமல், முக்தி எனும் விடுதலைக்கு வழிகாட்டுவதாக மாறிவிடும்.

மேலும், நமது சிந்தனைக்கும், சேவைக்கும் உடையவனான இறைவன், மிக அருகிலும், மிகத் தொலைவிலுமாக இருக்கின்ற பரமாத்மா. அவர் எல்லா இடத்திலும் நிரம்பியும், மாறிக் கொண்டிருக்கும் உலகங்களை எல்லாம் ஊடுருவிக் கொண்டு, மறை பொருளாகவும் இருக்கின்றார்.

46. கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்

47. சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று

பாலில் ஊடுருவியிருக்கும் நெய் கண்ணுக்குப் புலப்படாதது போலவே, சிந்தனைக்குள், ஆத்மா புலப்படாமல் இருக்கின்றது.

‘சிந்தனையில்’ என ஆசிரியர் சொல்லியிருந்தால், அது ஒருவர் மனதில், தம் விருப்பால் ஏற்கும் எண்ணம் எனப் பொருள் தரும்.  ஆனால் ‘சிந்தனையுள்’ எனச் சொல்லியிருப்பதன் பொருள்,   ‘எண்ணங்களுக்கும் ஆதாரமான உள் உணர்வு’ என்று அறிகிறோம்.  ஏனெனில் அந்தகரணமாகிய மனமும் ஒரு சடப் பொருளே.  மனதுக்கும் ஒளியினைத் தருகின்ற மறைவிடமே ‘சிந்தனையுள்’ எனக் காட்டப்பட்டது.  அப்படி மறைந்திருக்கும் இறைவனே,  மறைகள் உணர்த்தும் உண்மை.

48. பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்

சிந்தனையுள் விளங்கும் சிவனே பிறவிப் பிணியை நீக்கும் பெருமான்.

‘பிறப்பு அறுக்கும்’ என்றால், பிறவி என இனியும் தொடர்ந்து வரும் துயரை நீக்குதல் எனப் பொருள் வரும்.  அப்படியானால், இப்போது எடுத்திருக்கும் பிறவியின் நிலை என்ன?  முக்தி எனும் விடுதலை, இப்பிறவி இருக்கும் வரை பெறமுடியாது போய்விடுமே? அப்படியானால், இப்பிறவி வெறும் இழப்புத்தானா!

இல்லை!  இறைவன் கருணையற்றவனா என்ன!

‘பிறந்த பிறப்பு அறுக்கும்’ என மணிவாசகர் கூறியுள்ளதன் பொருள்,  இனி வரும் பிறவிகளை மட்டுமல்ல, இப்போது எடுத்த பிறவியிலிருந்தும் விடுதலை அளிப்பவன் இறைவன் என்பதுதான்.

வேதாந்தம், இவ்வுடலுடன் இவ்வுலகில் வாழும்போதே, சம்ஸாரம் எனும் துயரை விட்டவராக, முக்தி எனும் பேறினைப் பெற்றவராக, எவராலும் உயரமுடியும் எனக் காட்டுகின்றது.  இதுவே ‘ஜீவன் முக்தி’ எனப்படுவது. இது வேதாந்தம், மனிதர்களுக்கெல்லாம் மிகப் பெரிய நம்பிக்கையைக் கொடுக்கின்ற பேருண்மை.

உடலுடன் இவ்வுலகில் வாழும்போதே, ஜீவன் முக்தன், தானடைந்த பரஞானமாகிய தீயினால், தான் சுமந்திருக்கும் ‘ஸம்ஸ்காரம்’ எனும் வினைப் பளுவாகிய விதையினை வறுத்து விடுகின்றான்.  வறுத்த விதை முளைப்பதேது!  அதனால், ஸம்ஸாரமாகிய மரம் அவனுக்கு இல்லை.

இறைவனை வணங்கினாலும்,  இந்த உடலை விட்டுப் போன பிறகே, முக்தி எனும் முழுநிறைவை உணரமுடியும் என்று ஆகிவிட்டால், மனிதப் பிறவியின் பெருமை, முழுமையாகாது!

இவ்வுலகில், இவ்வுடலில் இருக்கும்போதே, முக்தி எனும் முழுநிறைவு பெறமுடியும் எனும் சத்தியமே, நம்மை எல்லாம் உற்சாகப்படுத்தி உயரச் செய்கின்ற தத்துவம்.  இதனையே, இவ்வரிகள் காட்டுகின்றன.

43. போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்

49. நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த

Share this Post

Leave a Comment