Sivapuranam by Manickavasagar (67-71)
67. ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
68. ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
69. நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
அவர்களும் கடவுளின் குழந்தைகள்தான். ஆனால், அவர்களின் உள்ளத்துள் ஒளிந்து கொண்டு, அவர்களுக்கும் அறிவொளி கொடுத்துக் கொண்டிருக்கும் இறையுணர்வை, அவர்களால் சிந்தனையுள் அனுபவிக்க முடிவதில்லை. அதனால் விடுதலைப் பேறு, அவர்களுக்குக் கைகூடுவதில்லை.
மாணிக்கவாசகர் எப்போதும் இறைச்சிந்தனை மட்டுமே கொண்டு இருக்கிறார். அப்பண்பினால், அவருடைய உள்ளத்துள் இறைவன் கல்லையும் உருக்கும் கருணை மழையாகப் பொழிந்து, அவருக்குள் நிறைந்து, உயிரினும் உயிராக இருக்கின்றான்.
70. இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
இறையுணர்விலேயே இருக்கும் ஜீவன் முக்தனின் நிலை என்ன? அவன் உலகில் வாழும்போது, இன்ப, துன்பங்களின் பாதிப்பினை எப்படி ஏற்கிறான்? ஜீவன் முக்தனுக்கு, மற்றவர் தன்னை இகழ்வதும், புகழ்வதும் உணரப்பட முடியாததா? எவ்வித வெளியுலக அறிவும், உணர்வும் இல்லாது வெறும் சடமாக இருப்பவர்களா பரஞானிகள்!
அல்ல!
அவர்களுக்கும் தீச்சுடின், உடலில் வலி இருக்கும். ஆனால், அவ்வலியால் அவர்களுக்குத் துயர் இருக்காது. அவர்களை இகழ்ந்து ஒருவர் பேசினால், அப்பேச்சும் அவர்களுக்குக் கேட்கும். ஆனால் அப்பேச்சினால், துயர் இருக்காது. புகழ்ச்சியைக் கேட்பதாலும், இன்பம் இருக்காது.
நமக்மோ உலக நடப்புக்கள் எல்லாம் ‘விஷயமாக’ இருக்கின்றன. விஷயம் என்பது நம்மை பாதிப்பன. பர ஞானிகளுக்கோ, உலக நடப்புக்கள் எல்லாம் வெறும் ‘த்ருஷ்யமாக’ அதாவது ‘தோற்றமாக’ மட்டுமே இருக்கின்றன.
எப்படி ஒரு கண்ணாடி, தன் முன்னே இருப்பதை எல்லாம் தனக்குள் காட்டி, பிரதிபலித்தாலும், அவற்றால் பாதிப்பு அடையாமல் இருக்கிறதோ, அப்படியே பரஞானிகளும் இருப்பார்கள். அது போன்றதே, பரமாத்மாவின் இருப்பும்.
71. அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லவுமாய்
இறைவனே, நம்மால் அறியப்படாத பொருட்களாகவும் இருக்கிறான்.
நம்மைப் பொருத்தவரை, அறியப்படாதன எல்லாம், ‘இல்லாதவை’தானே! அப்படி இல்லாதனவாயும் இருப்பவன் இறைவனே. இங்கே இல்லாதவை என்பது ‘முயலின் கொம்பு’ என்பது போன்ற பொய் அல்ல. நமது அறிவினுக்குள் அகப்படாத அத்தனையும் என்பதே பொருள்.
அறிவும் அவனே; அறியாமையும் அவனே எனவும் பொருள் கொள்ளலாம்.
‘ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்’ எனும் சக்தி வழிபாட்டில், பராசக்தியை ‘வித்யா அவித்யா ஸ்வரூபிணி’ அதாவது, அறிவாயும், அறியாமையாயும் இருப்பவள் எனத் துதிக்கிறோம். அறியாமையாகிய இருளும், அவ்விருளை நீக்குகின்ற அறிவாகிய ஒளியும் இறைச்சக்தியே என்பது இத்துதியின் முதற் பொருள். மற்ற ஆழமான பொருளும் இவ்வரிகளுக்கு இருக்கிறது.
இத்துதியினைப் போன்றதே, மாணிக்கவாசகர், யாவையுமாய் அல்லவுமாய் என இறைவனின் சிறப்பைக் கூறுவது.