Sivapuranam by Manickavasagar (72-78)
72. சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
எங்கிருந்து இருள் வருகின்றது? எங்கெல்லாம் ஒளி இல்லையோ, அங்கெல்லாம், இருள் சூழ்கிறது. இருள் என்பது மறைத்தல் எனும் இறைவனின் ஐந்தொழிலில் ஒன்று. அது ஜீவனின் நிலையில், ஜீவனுடைய அறியாமை எனும் மயக்கத்துக்கு ஒப்பு. அது உலகத்தின் நிலையில், ‘மாயை’ எனும் தோற்றப் போர்வைக்கு ஒப்பு.
வேதாந்த அறிவின் படி, எல்லா உலகங்களும், மாயையினாலேயே மூடப்பட்டிருக்கின்றன. ‘ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்’ என்னும் வேத வாக்கியத்தின் பொருள், எல்லா உலகங்களும், இறைவனின் மாயையினால் நிரப்பப்பட்டிருக்கின்றன என்பதே.
‘மயம்’ எனும் சொல், ‘ஒன்ன் மாற்றம்’ அல்லத் ‘ஒன்றினால் நிரப்பப்பட்டது’ எனும் பொருளைத் தருவது ஆகும். பரம்பொருளின் மாயா சக்தியியே விஷ்ணு. அச்சக்தியை, சிவனுடைய துணையான பராசக்தியாகவும் நாம் வழிபடுகின்றோம்.
பரவியிருக்கும் மாயா சக்திக்கும் எது ஆதாரம் எனில், அது பரமாத்வாகிய ‘சிவம்’. எனவேதான் ‘சிவமயம்’ எனச் சொல்கின்றோம்.
சிவமயம் எனச் சொல்லும்போது, ‘ஜகத்’ எனும் உலகங்கள் ஏதும் இல்லை. ஏனெனில், சிவம் ஒன்றே யாவுமாய், ஈரற்றதாய் இருப்பது.
73. ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
74. ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
75. கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில்
76. நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
77. போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
மேலும், ஈரற்றதான பரமாத்மாவுடன் கலப்பதற்கு வேறு எப்பொருளும் இல்லை அல்லவா! எனவே ‘புனர்வும் இல்லாத தூயவன்’ எனக் கலப்படமில்லாப் பொருளே இறைவன் என மாணிக்கவாசகர் காட்டுகின்றார்.
அப்படியானால், நற்கதி அடைகின்ற உயிர்கள் எல்லாம் இறைவனுடன் கலக்கின்றன எனும் திருமறைக்கு என்ன பொருள்? எல்லா உலகங்களும் இறைச்சக்தியுடன் விளங்குகின்றன என்பதற்கு என்ன பொருள்?
இறைவனின் திருவிளையாட்டில் விளையும் மாயா சக்தியினாலேயே, உலகங்கள், உயிர்கள் எனும் எல்லாத் தோற்ற வேறுபாடுகளும் எழுகின்றன. ஈரற்ற உண்மைத் தத்துவம் மட்டுமே உண்மை என உணரப்படும்போது, உலகங்கள் ஒரு கனவு என்பது உணரப்பட்டு, அக்கனவிலிருந்து உண்மை விழிப்பு ஏற்பட்டு, அவ்வாறு விழித்த நிலையில், ஈரற்ற ஒன்றான இறைச்சக்தியாய் மட்டுமே விளங்குவது, பரஞானிக்குத் தெளியும். கலப்பில்லாத் தெளிவாகவே பரம்பொருள் எப்போதும் இருக்கின்றது என்ற நுணுக்கமான வேதாந்த உண்மை இங்கே சுட்டிக்காட்டப்பட்டது.
78. காக்கும் என் காவலனே காண்பரியப் பேர் ஒளியே
பார்க்க முடியாத பேரொளி என்பதன் பொருள் என்ன?
சூரிய ஒளியையே முழுதாக, நேரடியாக நாம் பார்க்க முடிவதில்லை, அப்படியாயின் கோடி சூரியனாக இருக்கும் பரம்பொருளைப் பார்க்க, நமது கண்களால் எப்படி முடியும்!
விழிக்கும் விழியாய் இருப்பது ஆத்ம சக்தி. விழியின் விழியை எவ்விழியால் பார்ப்பது! அறிபவன் யாரென, அறிவினால் எப்படி அறிய முடியும்!
பார்ப்பவன், பார்க்கப்படுவன, பார்வை இவையாவும் ‘நான்’ எனும் ஆத்மா. எனவே தந்நிலை உணர்வு மட்டுமே இறுதியான உறுதியாக முடியும்.