Shivanandalahari – Verse 1
1 – சிவ சுகப் பெருவெள்ளச் சீலம் அடி போற்றி!
பொருள்:
பலவகைக் கலை வடிவானவர்களும், தலையில் சந்திரனைச் சூடியவர்களும், தவமும் பயனுமாய் ஒருவருக்கு ஒருவர் உரித்தானவர்களாகவும், அடியார்களுக்கு அன்புடன் அருட்பயனைத் தருபவர்களாகவும், மூவுலகிலும் நிறைவைத் தருபவர்களாகவும், உள்ளத்துள் கடவுளானார்களாகவும், நினைத்த போதெல்லாம் புதிராக மனதில் நிறைபவர்களாகவும், தன்னை உணர்தலாகிய பேரறிவிற்திளைத்து, சிவசக்தியாக ஒன்றி விளங்கும் பரம்பொருளுக்கு என்னுடைய இத்துதி, பணிவால் அர்ப்பணிக்கப்படட்டும்.குறிப்பு:
‘இயம் மே நதி: பவது’, அதாவது ‘இந்த என்னுடைய துதி உமக்கே உரித்தாகட்டும்’ என்ற பணிவு இப்பாடலிலே யாருக்கு அர்ப்பணிக்கப்படுகிறது? ‘சிவாப்யாம்’ எனும் சொல், ‘சிவமாகிய உங்கள் இருவருக்கும்’ என சிவனையும், சக்தியையும் சேர்த்தே குறிக்கின்றது. ‘ஆப்யாம்’ எனும் விகுதியினால், ஒருமையான சிவம் எனும் பரம்பொருளையே, ஒன்றுடன் ஒன்றாய் இணைந்த ‘சிவன்’, ‘சக்தி’ என இருவராகக் காட்டுகின்றது.
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம தோத்திரம் அன்னையைச் பிரம்ம சக்தியாகத் தொழுகின்றது. சிவ ருத்திரம், சிவனை ருத்திரப் பிரம்மமாகத் தொழுகின்றது. ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரஹநாமம், திருமாலை பிரம்மமாகத் தொழுகின்றது. அது போன்றே பல துதிகளும், ஒன்றேயான பிரம்மத்தின் ஒரு குறிப்பிட்ட வடிவத்தை மட்டுமே துதிப்பதாக அமைந்துள்ளன. ஆனால், ‘சிவானந்தலஹரீ’ எனும் இப்பேரமுதம், சிவசக்தி ஐக்கியத்தை முன்னிலைப்படுத்தி, மாறாத நிலையான பிரம்மமே சிவனாயும், மாற்றங்கள் விளைத்து விளையாடும் சக்தியுமாக இரண்டாயும், இரண்டும் கலந்த சிவசக்தியாயும் முந்நிலைப் படுத்திப் பணிகிறது.
‘உங்களுக்கே இத்துதி அர்ப்பணம்’ என்று பணிகின்ற பகவான் ஆதிசங்கரர், ‘கலாப்யம்’ எனத் தொடங்கும் பலவித சிறப்புச் சொற்களால், சிவசக்தியின் பெருமைகளையே கூறுகின்றார். சிறப்புச் சொற்கள் (adjectives) என்பன, இலக்கணப்படி ஒரு பொருளின் சிறப்புக்குணத்தைக் குறிப்பன என்றாலும், சில இடங்களில், சிறப்புச் சொற்கள், குணத்தைக் குறிக்காமல், அப்பொருளுக்கே விளக்கமாகவும் அமைகின்றன. ‘ஓளிரும் சூரியன்’ என்பதில், ஓளி சூரியனின் குணத்தைக் குறிப்பதல்ல, சூரியனையே குறிப்பது. அதுபோலவே, இப்பாடலில் ‘ஆனந்த3 ஸ்பு2ர த3னுப4வாப்4யாம்’ எனும் சிறப்புச் சொற்கள், சிவ சக்தியினரின் குணத்தை அல்லாமல், தம்மை முற்றும் உணர்ந்து எப்பொழுதும் ஆனந்தமான நிலையிலேயே இருக்கும் சிவசக்தியின் உண்மை நிலையையே குறிக்கின்றன. எப்போது தன்னை முற்றும் உணரும் நிலை வருமோ, அப்போது அங்கு சிவமே நிலைக்கிறது. அதனாலேயே ‘அஹம் ப்ரஹ்மாஸ்மி’ எனும் சித்தம் அடங்கிச் சிவமாகும் நிலையும் உறுதிப்படுகிறது. (1)
2 – சிந்தை நிறை வெள்ளச் சிவானந்தம் போற்றி!