Shivanandalahari – Verse 2
2 – சிந்தை நிறை வெள்ளச் சிவானந்தம் போற்றி!
दलन्ती धीकुल्यासरणिषु पतन्ती विजयताम् |
दिशन्ती संसारभ्रमणपरितापोपशमनं
वसन्ती मच्चेतोहृदभुवि शिवानन्दलहरी ||२||
த3லந்தீ தீ4குல்யாஸரணிஷு பதந்தீ விஜயதாம் |
தி3ஶந்தீ ஸம்ஸார ப்4ரமண பரிதாபோப ஶமனம்
வஸந்தீ மச்சேதோ ஹ்ரு2த3பு4வி ஶிவானந்த3 லஹரீ ||2||
அகலத் துயர்வினையின் – துகளோய
அருவிப் பெருகவருள் அறிவுச் சுனைபரவி
அவியப் பிறவியுழற் – சுழிதீர
விரிய நிறைமனது விரைய இதயமடு
விரியக் சுகவமுதக் – கடலாகி
விளையும் பரமசுக வமுத சிவநதியுன்
தயவு தகையொளிரும் – அருளாலே!
(2)
பொருள்:
சிவ சம்போ! பெருமைக்குரிய நினது சரித்திரமாகிய நதியிலிருந்து பெருகுவதாயும், பாவமாகிய அழுக்கினை நீக்குவதாயும், அறிவின் வழியே வழிந்தோடும் ஆறாக விளைவதாயும், பிறவியெனும் சுழலில் சிக்கித் தவிக்கின்ற துன்பத்தை அவித்து, மனதில் அமைதியைப் பரப்புவதாயும், எனது சித்தமாகிய இதயத்தின் இடுக்கெல்லாம் நிரப்பி, என்றும் நிறைந்திருக்கும் சுகக்கடலாயும் விளங்கும் சிவானந்தலஹரீ எனும் பரசிவ சுகப் பெருவெள்ளம், நினதருளால், வெற்றியுடன் விளங்கட்டும்.
குறிப்பு:
முதற்பாடலில், சிவசக்தி வடிவத்திற்குத் தமது படைப்பினை அர்ப்பணித்த பகவான் ஆதிசங்கரர், இரண்டாம் பாடலில், சிவானந்தலஹரீ எனும் பரசிவ சுகப் பெருவெள்ளம் என்பது, தன்னுள்ளும், வெளியும் பாய்ந்து ஓடிப் பரவிக் கிடக்கும் பரவச நிலையே என்று வாழ்த்திப் பணிகிறார்.
அப்பரவசநிலை எதனால் கிடைக்கத் தொடங்கியதாம்?
பகவான் ஆதிசங்கரர், ‘த்வச் சரித ஸரித’ என்னும் பதங்களின் மூலம், சிவனின் புனிதமான, தொன்மையான சரித்திரப் பெருமைகளை, உளமார அறிந்த காரணத்திலேயே, சிவானந்தலஹரீ எனும் இன்பம், நதியாகக் கடலாகத் தன்னுள்ளே பெருகுவதாகக் காட்டியுள்ளார். அதனால், இப்பாடல், சிவனின் நினைவில் மனம் உருகி, சிவனின் துதியில் மதி இளகி, சிவபுராண மகிமைகளைக் கேட்டு ஆனந்தித்து, அப்படியான முழுமையான, உண்மையான பக்தியிலே முற்றி இருப்பதனாலேயே, சிவானந்தப் பரவசம் ஏற்படும் என்று காட்டுகின்றது. ஆகவே, சிவானந்தலஹரீ எனும் இப்பேரமுதினைச் சுவைப்பதற்கு, நாமெல்லாம் பரம்பொருள் அறிவில் பக்தி கொண்டவராக, சிவ கதைகளைக் கேட்டு மனமும், மதியும் சிவமயமாய் இருத்தி வைக்கும் பக்குவம் உடையவர்களாக இருக்க வேண்டும். அப்பக்குவம் நமக்கு வரவேண்டும் என்ற ஆசையும், உறுதியுமாவது முதலில் நமக்கு இருக்க வேண்டும். (2)