Shivanandalahari – Verse 3

3 – உய்யப் பேரருளாய் உள்ளும் அருள் போற்றி!

त्रयीवेद्यं हृद्यं त्रिपुरहरमाद्यं त्रिनयनं
जटाभारोदारं चलदुरगहारं मृगधरम् |
महादेवं देवं मयि सदयभावं पशुपतिं
चिदालम्बं साम्बं शिवमतिविडम्बं हृदि भजे ||३ ||
த்ரயீவேத்₃யம் ஹ்ருத்₃யம் த்ரிபுரஹரமாத்₃யம் த்ரினயனம்
ஜடாபா₄ரோதா₃ரம் சலது₃ரக₃ஹாரம் ம்ருக₃த₄ரம் |
மஹாதே₃வம் தே₃வம் மயி ஸத₃யபா₄வம் பஶுபதிம்
சிதா₃லம்ப₃ம் ஸாம்ப₃ம் ஶிவமதிவிட₃ம்ப₃ம் ஹ்ருதி₃ ப₄ஜே || 3 ||
மறைமும் முடிவாமுவ் வுடலின் விடிவாகி
மனதுள் வதிமூன்று – விழியோனே

முடிகள் சடையாகிப் பிரள விடநாகம்
இடையில் கலைமானுன் – கரநேயா

அமரர் பதியாகி தமையுள் ஒளியாகி
அருளும் உயிர்நேயர் – தலைவோனே

உமையின் மணவாளன் ஒளிரும் நடிகோனை
உனையென் மனதார – நினைவேனே!

(3)

(ரிக்,யஜூர், சாம எனும்) மூன்று வேதங்களின் உட்பொருளாகவும், (வல்லுடல், மெல்லுடல், காரண உடல் எனும்) மூன்று உலகங்களையும் அழிப்பவராயும், மனதுள் விளங்குபவராயும், (கடந்த, நிகழ் மற்றும் வருங்கால அறிவான) மூன்று விழிகளுடையவராகவும், சடைகளான முடியுடையராயும், அசைகின்ற விஷ நாகங்களை உடலில் அணிந்தவராகவும், (மாயையாகிய) மானைக் கர நுனியில் பிடித்தவராயும், தெய்வங்களின் தெய்வமாயும், ஒளிக்கு ஒளியாகி, எம்மிடம் கருணைகாட்டி, உயிர்களுக்கெல்லாம் தலைவராகவும் விளங்கி, என் அன்னை உமையின் மணவாளனாக, (உலகங்களை அமைத்தும், விரித்தும், அழித்தும் நடத்துகின்ற நாடகத்தின்) நடிகராக ஒளிரும் சிவனை என்னுடைய மனதில் நினைத்திருப்பேனே.

குறிப்பு:

நிலையான சுகப்பெருவெள்ளம் தரும் பரசிவம் யாது? அதுவே பரம்பொருள். ‘மறை’ எனப்படும் மூன்று வேதங்களுள் மறைந்து இருக்கும் தெள்ளறிவு அது. வேதம் என்றால் எங்கும் விரிவது. வேதங்களுக்கு அப்பாலும் விரிந்தது என்றால், இறைந்து கிடக்கும் சக்தி, அதாவது இறைவன் என்றாகும்.

அடுத்த சொல் ‘ஹ்ருதயம்’ என்பதால், வெளி எல்லாம் இறைந்து விளங்கும் சிவமே, மனதுள்ளும் கடந்து ‘கடவுள்’ என்று இருக்கிறார் என்பதும் தெளிகிறது.

‘திரிபுரஹாரம்’ எனும் அடுத்த சொல்லினால், இரும்பு, வெள்ளி, தங்கம் ஆகியவற்றால் ஆன உலகங்களை ஆண்டு கொண்டிருந்த, தாராகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி எனும் முவ்வடிவான கொடிய அரக்கர்களைக் கொன்ற சிவன் என்று பொதுவான பொருள் கொள்ளப்படுகின்றது. சிவன், பூமியைத் தேராகவும், பிரம்மாவைச் சாரதியாகவும், மேருவை வில்லாகவும், திருமாலை அம்பாகவும், ஆதிசேடனை நாணாகவும் அமைத்து, தங்கம், வெள்ளி, இரும்பாலான மூன்று உலகங்களும் ஒரே கோட்டில் இணையும் போது, அம்பினைச் செலுத்தி, அல்லல் இழைத்து வந்த மூன்று அரக்கர்களையும் அழித்தார் என்பது புராணம்.

அதன் மறைபொருள் என்ன?

சம்ஸ்கிருத மொழியிலே ‘லோகம்’ என்பதற்கு ‘உலகம்’ என்பது சொற்பொருளாகினும், அதன் கருப்பொருள் ஆழமானது.

‘லோகம்’ என்பது ஒரு அனுபவ நிலை. உதாரணமாக ‘நரகலோகம்’ என்பது, மீளாத் துயராகிய அனுபவ நிலையைத்தான் குறிக்கும். அந்த நிலை எங்கு வேண்டுமானாலும் விளையும். அதுபோலவே, ‘திரிபுரம்’ எனும் சொல், மூன்று லோகங்கள் அல்லது மூன்று அனுபவ நிலைகள் என்பதைக் குறிக்கும். இவை ஒரு உயிரினைப் பொறுத்தவரை, விழிநிலை அல்லது ‘ஜாக்ரதா’, கனவுநிலை அல்லது ‘ஸ்வப்னா’, ஆழ்துயில் அல்லது ‘ஸுஷூப்தி’ என, அந்த ஜீவாத்மாவின் அனுபவ நிலைகள் என்று ஆகும். இந்த ஒவ்வொரு அனுபவ நிலையையும் ஜீவாத்மா தனித்தனியாக அனுபவிப்பினும், ஆத்மாவின் அருளால், இம்மூன்று அனுபவங்களுக்கும் ஒரு உறவு ஏற்பட்டு, நமக்கும் உலகில் வாழ்க்கை எனும் பயணம் கிடைக்கிறது.

மற்றொரு வகையில், வல்லுடல் (பூத சரீரம்), மெல்லுடல் (ஸூக்ஷ்ம சரீரம்), வினையுடல் (காரண சரீரம்) என ஜீவாத்மா உழலும் மூன்று உடல்களையும் இந்த ‘திரிபுரம்’ எனும் சொல் குறிக்கும். எல்லா உலகங்களின் தொகுப்பாகப் பார்த்தால், இவை முறையே அண்டங்கள் (விஷ்வா), அணுக்கூறாதிகள் (தேஜஸ்), அகண்ட மாயை (பிரக்ஞா) என மூன்று பரந்த அனுபவ நிலைகளையும் குறிக்கும்.

‘நான் இவ்வுடலே’ என அறிவில் கொண்ட மயக்கமும், ‘தான்’ எனும் ஆணவமும் நம்முள்ளே இருந்து கொண்டு, நம்மைப் பற்றிய உண்மையை மறைக்கின்ற காரணத்தினால், நாமும் இம்மூன்று அனுபவங்களையே மாறி மாறி அனுபவிக்கும்படியாகச் சிறைப்பட்டு, பிறகு எப்போதேனும் இருக்கும் உடலை விட்டு, மீண்டும் வேறொரு உடலைப் பெற்று, அப்படியான ‘சம்சாரம்’ எனும் சக்கரத்தில் சுழன்று கொண்டிருக்கும் ஜீவர்களாக இருக்கிறோம். இதற்குக் காரணமான நமது மயக்கமும், அறியாமையும், ஆணவமுமே புராணத்தில் சுட்டிக் காட்டப்பட்ட அந்த அரக்கர்கள்.

மூன்று அனுபவ நிலைகளையு தனித்தனியே அனுபவிக்கும் இம்மூன்று பேரும் ஒரே ஜீவன்தான் என்பதும், அம்மூன்று நிலைகளும் ஒன்றியநிலையில், அதாவது ‘துரீயம்’ எனும் ‘அறிவுணர்துயில்’ ஆகிய சமாதி நிலையில்தான், இந்த மயக்கம் முற்றும் தெளியும் என்பதும், அம்மயக்கம் தெளிய, பிறவி எனும் மாற்றங்களை விதைக்கும் பிரம்மனும், காத்தல் எனும் மாயத்தில் இருத்தும் மாலனும், இறப்பு என உடலுயிர் அறுக்கும் உருத்திரனும் ஒன்றான வடிவாகிய பரசிவமாகிய ‘பரஅறிவு’ எனும்அம்பினால், நமது ஆணவம் துளைக்கப்பட வேண்டும் என்பதும் இப்பாடலின் பொருள்.

அப்படி மயக்கத்தையும், அறியாமையையும், ஆணவத்தையும் அழித்து நமக்கு அருள் தர, சிவபெருமான் பூமியைத் தேராக வைத்துக் கொண்டார் என்பது எதனை வலியுறுத்துகிறது? பூமியிலே பிறந்தால் மட்டுமே, சம்சாரம் எனும் வலையினை அறுத்து வெளி வரமுடியும் என்பதே ஆகும். மனிதப் பிறவிக்கே அந்த மகத்தான விடுதலைக்கான சக்தி இருக்கிறது என்பது காட்டப்படுகிறது. அதனாலேயே, ‘த்ரிபுரஹாரம் எனும் சொல், ‘முவ்வுடலின் விடிவு’ என்று தமிழிலே மொழி பெயர்க்கப்பட்டது. (3)

2 – சிந்தை நிறை வெள்ளச் சிவானந்தம் போற்றி

4 – தெய்வத்துள் தெய்வத் திருவே சிவம் போற்றி!

Share this Post

Leave a Comment