Shivanandalahari – Verse 4
4 – தெய்வத்துள் தெய்வத் திருவே சிவம் போற்றி!
न मन्ये स्वप्ने वा तदनुसरणं तत्कृतफलम् |
हरिब्रह्मादीनामापि निकटभाजामसुलभं
चिरं याचे शंभो तव पदांभोजभजनम् ||४ ||
ந மன்யே ஸ்வப்னே வா தத3னுஸரணம் தத்க்ரு2தப2லம் |
ஹரி ப்3ரஹ்மாதீ3னாமபி நிகடபா4ஜாம் அஸுலப4ம்
சிரம் யாசே ஶம்போ4 ஶிவ தவ பதா3ம்போ4ஜ ப4ஜனம் ||4 ||
சேவியர் சுகம்புவி தந்தாலும்
காயென அவையே தூரென விலகிக்
கனவிலும் அவையான் – விழையேனே
தீயென அருகே நீயிருந் தாலும்
திருமா லயனார் – அறியானே
நேயருட் தேடி நினதடிப் பதுமம்
நினைமனம் நிறைவேன் – சிவசம்போ
(4)
(விரும்பிக் கேட்போருக்குப்) பல நிலையற்ற பயனைத் தர, உலகில் ஆயிரக்கணக்கான தெய்வங்கள் இருக்கின்றனர். (அக்கீழ்நிலைப் பயனெதுவும் உண்மைச் சுகம் தராது என உணர்ந்து) கனவிலும் அவற்றை விரும்பி அத்தகைய வழிபாடுகளை நான் செய்ய மாட்டேன். அயனும், அரியும், அவர்கள் அருகிலேயே (அதாவது அவர்களுள்ளும் புறமும்) தீச்சுடராக விரிந்து நின்ற போதும், அவர்களால் முற்றும் அளவிட முடியாத பெருமானாகிய நினது திருவடித் தாமரை மலர்களையே எப்போதும் என் மனதில் நினைத்திருப்பேன், சிவசம்போ!
குறிப்பு:
சிவனே என் தெய்வம் எனக்கூறும் இந்த நான்காம் பாடல், மேலெழுந்த வாரியாகப் படிக்கையில், ஆயிரம் கடவுள் இருந்தாலும், அவர்கள் பல பொருட்களை எல்லாம் அருளினாலும், அவர்களைக் கனவிலும் வணங்கமாட்டேன், அவர்கள் தரும் பலன் எதுவும் விழையமாட்டேன் என்று பொருள் வரும். ஆதிசங்கரர் ஜகத்குரு அல்லவா? அவரின் வாக்கு எப்படிப் பொய்யாகும்? சிவனைத் தவிர வேறு யாரையும் கனவிலும் நினைக்க மாட்டேன் என்றால், அன்பினால் அம்பாள், முருகன், விஷ்ணு, அல்லா, ஏசு என்று மற்றதொரு வகையிலே ஒன்றேயாகிய கடவுளைப் பணிபவர்களின் நிலை என்ன? அதனால், ஆதிசங்கரர் சொல்வதன் பொருள் ஆழமான வேறொன்றாக இருக்க வேண்டும்.
கனவு என்பது நமக்கு வருவது! கனவினை நாம் ஏற்படுத்திக் கொள்ள முடியாது. அல்லாவை வணங்கி வருபவர் கனவில் அல்லா வருவது இயலும், சிவன் எப்படி வரமுடியும்? அதேபோல சிவனையே வணங்கி வருபவர் மனதில், சிவனைத் தவிர வேறு எந்த வடிவம் வரமுடியும்? இங்கே ஆதி சங்கரர், தான் எப்பொழுதும், சிவச் சுகப் பெருவெள்ளத்திலேயே இருப்பதால், கனவில் கூட வேறு தெய்வ வடிவங்கள் தமக்கு வருவதில்லை என்று சொல்கிறார். எனவே, இப்பாடலின் பொருளை வழிபாட்டு பேதங்களுக்கும், வாதங்களுக்கும் வித்திடுவதாகக் கொள்ளல் தவறு.
‘விபுதா க்ஷூத்ர பலதா’ என்பது, அற்பப் பயன் அளிக்கும் தெய்வங்கள் எனப்பொருள் தருகிறது. எது அற்பப் பயன்? நிலையற்ற சுகம் தரும் எல்லாமே, அது சொர்க்கப் பதவி என்றாலும் கூட, அதுவும் ஒரு சமயத்தில் முடிந்து மீண்டும் பூமியில் பிறக்க வேண்டும் என்பதால், அற்பமே! அதனால் நிலையான சுகம், மரணமிலா (அதனால் மறு பிறவியிலாப்) பெருவாழ்வு ஒன்றே ஆகும்.
மார்க்கண்டேயருக்கு அளித்த மரணமிலாப் பலனைப்போல, நிலையான பலனைத் தருபவன் சிவன் என்பதாலேயே, சிவனே எந்தன் சிந்தை என்று சொல்கிறார் ஆதி சங்கரர்.
மேலும் ‘விபுத:’ எனும் சொல்லுக்கு அறிவாளி, தெய்வம், மற்றும் நிலவு எனப் பல பொருட்கள் உண்டு. இங்கே தேய்மானமடையும் பலனை அளிக்கும் தெய்வங்கள் (அல்லது குறையான அறிவுடையவர்கள், தேயும் நிலவு) என்பதைக் குறிப்பதாக, ‘தேயுறுங்கடவுள்’ எனத் தமிழிலே மொழி பெயர்க்கப்பட்டது. (4)