Shivanandalahari – Verse 5

5 – சிவநினைவாம் பரஅறிவுச் சீலன் அடி போற்றி!

स्मृतौ शास्त्रे वैद्ये शकुनकवितागानफणितौ
पुराणे मन्त्रे वा स्तुतिनटनहास्येष्वचतुरः |
कथं राज्ञां प्रीतिर्भवति मयि कोऽहं पशुपते
पशुं मां सर्वज्ञ प्रथित कृपया पालय विभो ||५ ||
ஸ்ம்ருதௌ ஶாஸ்த்ரே வைத்₃யே ஶகுனகவிதாகா₃னப₂ணிதௌ
புராணே மந்த்ரே வா ஸ்துதினடனஹாஸ்யேஷ்வசதுர: |
கத₂ம் ராஜ்ஞாம் ப்ரீதிர்ப₄வதி மயி கோ(அ)ஹம் பஶுபதே
பஶும் மாம் ஸர்வஜ்ஞ ப்ரதி₂த க்ருபயா பாலய விபோ₄ || 5 ||
அறமும் நெறியுமௌ டதமும் அறிகுறியும்
அறிகவியு மிசையும் – அறியாமல்
அயலர் மகிழுரவுந் துதியும் முதியகதை
அகட விகடநடம் – புரியாமல்
திறமை எதுவுமறத் திரிவர்க் கேதுபுகல்
திக்கும் அற்றவெனைத் – திசையீசா
திரியும் பசுவிதெனப் பரிந்து பரிசுகந்து
திறனும் அருள்தருக – பரமேசா
(5)

(யுக தருமம் உரைக்கின்ற ஸ்மிருதி எனப்படும்) நீதி நூல்களையோ, அறமுறைகளையோ, (உலக வாழ்வுக்கான) மருத்துவம் முதலியான அறிவியலையோ, சோதிடம், கவிதை, இசை தந்தும், புகழ்ந்தும் பிறரை மகிழ்விக்கும் திறமைகளையோ, புராணக் கதைகளைப் பிறருக்கு விளக்கியும், பலவிதமாகப் பேசிப் பலரையும் மகிழ்ச்சியடையச் செய்யும் திறமைகள் எதையுமோ யான் அறியேன். திக்கற்ற, திறமை எதுவும் அற்ற என்னை, (அறிவிலும், குணத்திலும் உயர்ந்த மனிதர்களாகிய) அரசர்கள் மதிப்பது எப்படி முடியும்? எங்கும் நிறைந்தவரே, ஏதுமற்ற என்னை (ஒன்றுமறியாத விலங்காகிய) பசுவாய் ஏற்றுக் கருணையால், பயனும் திறனும் அருள்க!

குறிப்பு:

மூன்றாம் பாடலில், பல உருவங்களாக சிவசக்தியினை வழிபடும் பக்தனாகவும், தொடர்ந்து, நாலாம் பாடலில், வேறு எந்த உருவினையும் கனவிலும் நினையாத திடமான உறுதியுடையவனாகவும் தம்மைக் கருதிய ஆதி சங்கரர், இந்த ஐந்தாம் பாடலில், அந்தோ, எனக்கு ஒன்றுமே தெரியாதே, எப்படிப் பிழைப்பேன் என்று சிவனருளே தமக்குத் துணையாக வேண்டுகின்றார்.
எல்லா வேதங்களும், சாத்திரங்களும், நியாயம் முதலான ஆயும் கலைகளும், யோகம் முதலிய நுண்கலைகளும், ஒப்பறிய தத்துவ விசாரணையும், ஞான விலாசமும், அரிய கவிதை, துதி, பாடல்கள் எனப் புனையும் திறமையும், குருவாய் அருளவும், கோவாய் ஆட்சி புரியவும் மாட்சிமை பொருந்தி விளங்கிடும் ஆதிசங்கரர், இவை எதுவும் அறியாத பசு யான், என்னைக் காப்பாய் பசுபதியே என்று விளிப்பது, அடக்கத்தின் உயர்வு.

பொருள், இன்பம் (அர்த்த:, காம:) ஆகிய குறிக்கோளினை அடையும் பொருட்டுச் செய்யும் செயல்களுக்கு எல்லாம் அறம் (தர்ம:) காட்டிய அறிவே ‘வித்தை’ எனவும் அத்தகைய அறிவினைத் தராத மற்ற எல்லாம் ‘அவித்தை’ எனவும் ஒரு நிலையிலே நமக்குக் காட்டப்பட்டது.
ஆனால், வீடு பேறு (மோக்ஷம்) எனப்படும் நிலையான சுகத்தை அடைய விழைவோருக்கு, மேற்கூறிய அறிவும், அறியாமையில் ஆழ்த்தும் ‘அவித்தை’ என்று ஆகி விடுகிறது. ஏனெனில், அடையப்படுவதெல்லாம், அவை உடலாயினும், பொருளாயினும், உறவாயினும், பகையாயினும், சொர்க்கப் பதவியே ஆயினும், அழிந்து விடும். எனவே அடைவதைக் கொடுக்கின்ற அறிவு அவித்தை என்றும், ஏற்கனவே அடைந்த ஆன்மனை உணர்த்தும் அறிவே வித்தை என்றும், வீடு பேறினை நாடும் ஞானியருக்கு விதிக்கப்பட்டது. அந்த ஞானமாகிய அவ்வுணர்வு முதிரும் போது, அடைவது ஏதுமில்லை. ஏற்கனவே தன்னுள்ளேயே இருக்கின்ற ஆன்ம ஒளியாக அமையும் நிலைதான் அத்தகைய ஞானத்தின் விளைவு. அவ்வழிப் பயணமே ‘ஆத்ம வித்தை’ எனப்படுகிறது.

அவ்வழியே செல்பவருக்கு, மற்ற எல்லா வித்தைகளும் (அறிவும்) அவித்தை (அறியாமை) தான். ‘அறியாத பசு’ என இப்பாடலிலே குறிப்பிட்டது, ஆத்ம வித்தையினைத் தெரிந்து கொள்ளாத மனிதரையே குறிக்கின்றது. (5)

4 – தெய்வத்துள் தெய்வத் திருவே சிவம் போற்றி!

6 – ஆயுமதி அவித்து ஆண்ட சிவன் அடி போற்றி!

Share this Post

Leave a Comment