Shivanandalahari – Verse 6
6 – ஆயுமதி அவித்து ஆண்ட சிவன் அடி போற்றி!
पटो वा तन्तुर्वा परिहरति किं घोरशमनम् |
वृथा कण्ठक्षोभं वहसि तरसा तर्कवचसा
पदाम्भोजं शंभोर्भज परमसौख्यं व्रज सुधीः ||६ ||
படோ வா தந்துர்வா பரிஹரதி கிம் கோ4ரஶமனம் |
வ்ரு2தா2 கண்ட2க்ஷோப4ம் வஹஸி தரஸா தர்கவசஸா
பதா3ம்போ4ஜம் ஶம்போ4ர் ப4ஜ பரமஸௌக்2யம் வ்ரஜ ஸுதீ4: ||6 ||
அணு புகையனலும் – மலையாகும்
துணி இல்லையது இழை என்றுபலத்
துயர் வாயரள – அதவாதம்
விதம் எங்குவிடும் விடம் அந்தகனின்
இடம் வந்தவுடன் – உதவாதே
நிதம் சிவபரனின் பதம் பதுமசுகம்
மனம் பதியவிடு – அறிவோனே
(6)
மண் குடத்தை அது குடம், இல்லை அது மண், இல்லை அது அணு என்றும், ஒளியைப் புகை, தீ, மலை என்றும், ஆடையைத் துணி என்றும் நூலிழை என்றும் என்றும் பலவாறாக, ஆய்ந்து பயனற்ற விவாதங்களை, நாக்கு வரளும் படியாகப் பேசி நாட்களைக் கழிப்பது (அதாவது அறிவு மற்றும் ஆணவத்தினால், விதண்டாவாதம் பேசி வாழ்நாட்களைச் செலவிடுவது) என்ன பயனைத் தரும்? மரணம் எனும் காலதேவன் நம்மைக் கொண்டு செல்ல வரும் போது, இவ்விவாதங்களா உதவும்! எனவே, அறிஞனே, மனத்திலே பரசிவனின் திருவடி மலரைப் பதியவைத்து, நிரந்தரமான சுகத்தினைத் தேடு.
குறிப்பு:
ஒன்றும் அறியேன் என்று பணிந்த ஆதிசங்கரர், எல்லாம் அறிந்ததாக எண்ணி, வாத விவாதங்களில் வாழ்க்கையைக் கழிக்கும் மனிதர்களை இந்த ஆறாம் பாடலில் வியக்கிறார். பகவான் ஆதிசங்கரர், கூர்மையும், நேர்மையுமான படைப்பினால், விஞ்ஞான விளக்கங்களையும் மிஞ்சும் வண்ணம், வாதித்து உண்மையை நிலைநாட்டும் பகுத்தறிவாளர். அதேசமயம், உள்ளத்தை உருக்கும் மொழியினால், பக்தி ரசம் சொட்டும் அன்பினையும் நிலைநாட்டும் தொகுத்துணர்வாளர்.
பானைக்கு மண் மூலம், பிண்டத்திற்கு அணு மூலம், புகைக்குத் தீ, துணிக்கு நூல் என்றெல்லாம் ஆய்ந்து கொண்டே வந்தால், உலகங்களுக்கு எல்லாம் இறைவன் மூலம் எனப் புரிகிறது. எனினும் விளைவுக்கு வினை மூலம் என்றும், வினையால் விளைவு ஆகும் என்றும் சுற்றிச் சுற்றி வாதிட்டு என்ன பயன்? தொகுத்துணர்வு இல்லாத பகுத்தறிவு வாதத்தால் என்ன பயன்? அதனால் இறப்பு வரும்போது, (அறியாமையால் பிறந்தும் இறந்தும் உழல்கின்ற) சுழலிருந்து யார் துணையாக முடியும் என்று ஆதி சங்கரர் இப்பாடலில் வியக்கிறார்.
ஐந்தாம் பாடலிலே ‘அறியாத பசு’ என்று தம்மைக் காட்டிக் கொண்ட பகவான் ஆதி சங்கரர், மெய்யறிவான ஞானத்தை உணர, பகுத்தறிவோ, அதை ஒட்டிய வாத விவாதங்களோ துணை தராது என்பதையும், அத்தகைய ஞானம், தொகுத்துணர்வால் மட்டுமே இயலும் என்பதையும், அதற்கு உறுதியான பக்தி எனும் சாதனமே பொருத்தமாகும் என்பதையும் இப்பாடலிலே சுட்டிக் காட்டுகின்றார். (6)