Shivanandalahari – Verse 8

8 – மாயம் மறுத்தமன மன்றத்தான் அடி போற்றி!

यथा बुद्धिः शुक्तौ रजतमिति काचाश्मनि मणि
र्जले पैष्टे क्षीरं भवति मृगतृष्णासु सलिलम् |
तथा देवभ्रान्त्या भजति भवदन्यं जडजनो
महादेवेशं त्वां मनसि च न मत्वा पशुपते ||८ ||
யதா2 பு3த்3தி4ஸ்1 ஸு1க்தௌ ரஜதமிதி காசாஸ்1மனி மணி:
ஜலே பைஷ்டே க்ஷீரம் ப4வதி ம்ரு2க3த்ரு2ஷ்ணாஸு ஸலிலம் |
ததா2 தே3வ ப்4ராந்த்யா ப4ஜதி ப4வத3ன்யம் ஜட3 ஜனோ
மஹாதே3வேஶம் த்வாம் மனஸி ச ந மத்வா பஸு1பதே ||8 ||
எப்படிச் சிப்பியில் தப்புணர் வெள்ளி
ரத்தினம் கல்லில் – உருகாணும்
கப்பிய மாவினில் கரப்பசுப் பாலும்
கானல் நீரெனத் – தடுமாறும்
அப்படி மனிதன் அறிவறி வாலே
அய்யா நினைமனம் – அடையாமல்
தப்பிய தாயிறை அவரிவ ரென்றே
தவிப்பதும் ஏனோ – பசுபதியே
(8)

சிப்பியின் ஒளியினை வெள்ளி எனவும், சாதாரணக் கல்லினை உயர்வான ரத்தினம் எனவும், வெளுத்த மாவுக் கரைசலைப் பசுவின் பால் எனவும், கானல் நீர்த் தோற்றத்தை உண்மை நீரோட்டம் எனவும் தவறாகக் காண்பது போலவே, உலகில் மனிதன், தெய்வத்தின் தெய்வமான நின்னை உணராமல், அது, இது எனப் பலவித உருவங்களையும் துதித்து அலைகின்றான், பசுபதியே!

குறிப்பு:

சிவம் ஒன்றே குறியாக (அதாவது, பரம்பொருள் ஒன்றினையே நிலையான சுகப் பெருவெள்ளமாக) அறிவது வேண்டும். அதனை விட்டு, சுகம் வேறு பிற இடங்களில் இருப்பதாகப் பல வேறு வழிகளிலும், பொருட்களிலும், தெய்வங்களிலும், நிலையான சுகம் எங்கே என்று தேடி அலைகின்றான் அறிவற்ற மனிதன்.

அவன் செயல், சிப்பியில் வெள்ளி என்றும், பளிங்குக் கல்லில் ரத்தினம் என்றும், வெண்மாவுக் கரைசலில் பால் என்றும், கானலில் நீர் என்றும் மயங்குவது போலாகும் என்கிறார் ஆதி சங்கரர். உண்மையை மறைக்கும் மதி மயக்கமே இதற்குக் காரணம். எனவே அம்மயக்கம் அறுக்கும் ஞானம் பெற, முதலில் மனத் தூய்மையும், தெளிவுடனும், திடமுனும் சிந்திக்கின்ற மதியும் தேவை. அதற்கு இறைபக்தி இன்றியமையாதது.
பக்தி சரியான முறையிலே தெளிவும், குறிக்கோளும் உடைய மனதினை ஆள்வதாக இருக்க வேண்டும். ‘ஒன்றே தெய்வம்’ எனும் உண்மையின் அடிப்படையில் பக்தி இருப்பின், சஞ்சலத்துடன் அது, இதெனப் பல தெய்வங்களையும் வழிமுறைகளையும் நாடி அலைகின்ற தேவை நமக்கு இல்லாது போகும் என்பது இப்பாடலின் உட்கரு. (8)

7 – சிவ நினைவால் பிறநினைவுச் சீர்மை அடி போற்றி!

9 – மனமலரை ஏற்றென்னை மாற்றும் அருள் போற்றி!

Share this Post

Leave a Comment