Shivanandalahari – Verse 9
9 – மனமலரை ஏற்றென்னை மாற்றும் அருள் போற்றி!
विशाले शैले च भ्रमति कुसुमार्थं जडमतिः |
समर्प्यैकं चेतः सरसिजमुमानाथ भवते
सुखेनावस्थातुं जन इह न जानाति किमहो ||९ ||
விஸா1லே ஸை1லே ச ப்4ரமதி குஸுமார்த2ம் ஜட3மதி: |
ஸமர்ப்யைகம் சேதஸ்ஸரஸிஜம் உமாநாத2 ப4வதே
ஸுகே2னாவஸ்தா2தும் ஜன இஹ ந ஜானாதி கிமஹோ ||9 ||
ஆகும் பானமலை – எனவோடி
ஆகத் தூயமல ராகத் தேடியலைந்
தோயப் பாடுநிலை – உமைநாதா
காயப் பாரம்அலை யாமற் பூமனது
சாயப் பாதமலர் – சார்ந்தேகி
நேயத் தாலுயர யோகத் தானதறி
யாரப் பாபுதிராய் – நெகிழ்வேனே
(9)
(நின்னைத் தேடித் துதிக்க) அறிவற்ற மனிதர்கள், ஆழமான பள்ளங்கள், அடர்ந்த, ஆட்கள் இல்லாத காடுகள், உயரமான மலைகள் என்று பல இடங்களிலும் ஓடி அலைந்து, அங்கிருந்தெல்லாம் பூக்களைப் பெற்றுக் களைப்படைகிறார்கள். (அதாவது, வெளிப்பூச்சாக, பகட்டுக்காக, உண்மை தன்னுள்ளே இருப்பதை உணராமல், அலைந்து துதிக்கிறார்கள். இத்தகைய வெளி வேடத்தை விட்டு), தன்னுள்ளேயே, அமைதியான மனமாகிய தாமரை மலர் ஒன்றையே, அன்புடன் உமக்கு அளித்துவிட்டு, அங்கும் இங்கும் ஓடாமல், ஒன்றிய மனத்தால் நிலையான சுகத்தை அடைய முடியுமே! இதனை அறியாது இருக்கும் இந்த உலக மனிதரை நினைத்து, நான் வியக்கிறேன், உமையின் பதியே!
குறிப்பு:
உருவங்கள் பல என்று மட்டுமல்லாமல், உபசரித்து வணங்குவதற்கும் பல பொருட்கள் தேவை என்று, பல இடங்களுக்கும் சென்று அலைந்து, அர்ச்சனைப் பொருட்களைப் (பூக்களைப்) பெற்று வர அலைகின்றான், அறிவற்ற மனிதன்.
அன்பினால் எல்லாப் பொருளையும் இறைவனுக்குப் படைக்கின்ற தூய பக்தியினை, இங்கே பகவான் குறையாகக் கூறவில்லை. ஆனால், உண்மை எது என்பதை உணராமல், வெளிப் பொருளும், பகட்டும், எல்லோரும் பார்த்து வியக்கும் வண்ணம் ஆடம்பரம் செய்தும், அறியாமையால், காடு, மேடு, நதி என்று பயணித்தும் அலைவதை விட்டுவிட்டு, கடவுள் என்று உள்ளே கடந்து இருக்கும் இறைவனுக்கு, மனமாகிய ஒரு மலரை முற்றுமாய் அளித்தால் போதும் என்பதே பகவானின் நீதி!
ஸ்ரீ பாகவதம், பரம்பொருளை அர்ச்சிக்கத் தகுதியான மலர்கள் எட்டு எனக் காட்டுகின்றது.
ஸர்வபூ₄தத₃யாபுஷ்பம் க்ஷமாபுஷ்பம் விஶிஷ்யதே||
ஜ்ஞானபுஷ்பம் தப:புஷ்பம் த்₄யானபுஷ்பம் து ஸப்தமம்|
ஸத்யஞ்சைவாஷ்டமம் புஷ்பம் ஏபி₄ஸ்துஷ்யதி கேஶவ: ||
அஹிம்சை எனும் இடரிழையாமை, புலனடக்கம், எல்லா உயிர்களிடத்தும் கருணை, எதையும் மன்னித்து மறக்கும் பெருந்தன்மை, தனையுணரும் அறிவில் விழுப்பம், நந்நோக்கில் தவம், நிலையான தியானம், உண்மை ஆகிய எட்டுமே அர்ச்சனை மலர்களாக வேண்டும்.
இப்பாடல் காட்டும் மற்றுமொரு கருத்து, ‘சகுணப் பிரம்ம உபாசனை’’ அல்லது உருவ வழிபாடு என்பது நம்மை பக்தியினால் முன்னேற்றத்தை அடையச் செய்யத் தேவையான பாதைதான் என்பது ஆகும். உலகில், பல விதமான, பல எண்ணிக்கைகளாலான உருவங்களைக் கண்டு வாழ்கின்ற நமக்கு, படிப்படியாக மனதை ஒருமுகப்படுத்த, மனதுக்கு இதமூட்டும் ஓர் உருவத்தின் வாயிலாகத் துதிப்பது என்பது அவசியமான, மிகவும் பயனளிக்கும் ஒரு வழியே ஆகும்.
அப்பயணம் முதிர்ச்சி அடையும் பொழுது, ‘விஸ்வ உபாசனை’ என உலகில் அனைத்து உருவங்களுமே இறைவனே எனக் காணும் பரந்த நோக்கு விளையும். பிறகு ‘நிர்க்குணப் பிரம்ம உபாசனை’ எனத் தன்னுள்ளேயே உருவமற்று விளங்கும் ஆன்மனைத் தியானிக்கும் பக்குவமும் நமக்கு ஏற்படும். உள்ளத்துள் உறைவதை உணர்வதே உண்மைத் தியானம், பக்தி, ஞானம் எல்லாம்.
இதனையே ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் காட்டுகிறது. உதாரணமாக, ‘அந்தர் முக ஸமாராத்யா – பஹிர்முக ஸுதுர்லப:’ எனும் திருநாமங்கள், வெளிப் பூசைகளினால் அடைய முடியாததும், உட்தியானத்தால் மட்டுமே எளிதாக உணர முடிவதுமானவள் அன்னை பராசக்தி எனக் காட்டுவன. (9)