Shivanandalahari – Verse 14
14 – எளியோர் உயிரான இனியோன் அடி போற்றி!
प्रमुख्योऽहं तेषामपि किमुत बन्धुत्वमनयोः |
त्वयैव क्षन्तव्याः शिव मदपराधाश्च सकलाः
प्रयत्नात्कर्तव्यं मदवनमियं बन्धुसरणिः ||१४ ||
ப்ரமுக்2யோ(அ)ஹம் தேஷாமபி கிமுத ப3ந்து4த்வமனயோ: |
த்வயைவ க்ஷந்தவ்யா: ஶிவ மத3பராதா4ஸ்1ச ஸகலா:
ப்ரயத்னாத் கர்தவ்யம் மத3வனமியம் ப3ந்து4ஸரணி: ||14 ||
எழிலும் அருளான – பரமேசா
எவரில் அரிதான ஏழை அதனாலே
எமது உறவாழம் – அறிவேனே
தவறும் எம்பாதை எதுவும் தன்னாலே
விலகும் படியாள – தயையாலே
தரும வழிகாட்டிக் கரும வினைமாற்றி
தருவ துன்வேலை – உறவோனே
(14)
இறைவா, வள்ளலாகிய நீவிர் எளியோரின் இனிய உறவு அல்லவா? (எல்லா விதத்திலும் வறியவனான) யான், ஏழைகளிலும் ஏழை அல்லவா? அதனால், நம்மிருவருக்கும் உறவு மிகவும் ஆழமானது எனச் சொல்லவும் வேண்டுமா என்ன! ஆகையால், தவறான எனது வழிகள் யாவும் நினது கருணையால் மன்னித்து விலகும்படியானவையே! என் குற்றங்கள் நீங்கி, அறவழியிலே யான் செல்வதற்கான வழிகாட்டியாய், என் வினையினை மாற்றுவது உமது பொறுப்பு. அதுவே நல்லுறவுக்கு அடையாளம்.
குறிப்பு:
முந்தைய பாடலில், ஏழைக்கு உதவல் இறைவன் கடமை எனக் கூறிய பகவான் ஆதி சங்கரர், இப்பாடலிலே, இறைவன் ஏழைக்கு உறவு என்பதால், நல்ல உறவின் அடையாளமாக, நம்முடைய தவறுகளைப் பொருட்படுத்தாமல், அருளை அள்ளித் தரவேண்டும் என்று கேட்கிறார்.
ஏழையிலும் ஏழை என நம்மை உணர்ந்தால், அவ்வேழ்மைக்குச் செல்வம் சிவானந்த வெள்ளம் என விழைந்தால், ஏழைப் பங்காளனுமான பரம்பொருளுடன் நம் உறவு மேலும் ஆழப்படுகிறது. நல்உறவின் அடையாளமாக, சிவபெருமானே நம் வறுமையை நீக்கி, நிலையான செல்வம் அளிப்பார். ‘மத் அவனம்’ எனும் சொல்லால், அப்பரம்பொருளே நமது காப்பு என்பதும் காட்டப்பட்டது. (14)