Shivanandalahari – Verse 24
24 – கயிலையிலே பரசிவனைக் காணும் நாள் போற்றி!
र्वसन् शंभोरग्रे स्फुटघटितमूर्धाञ्जलिपुटः |
विभो साम्ब स्वामिन् परमशिव पाहीति निगदन्
विधातॄणां कल्पान् क्षणमिव विनेष्यामि सुखतः ||२४||
வஸன் ஶம்போ4ரக்3ரே ஸ்பு2டக4டித மூர்தா4ஞ்ஜலிபுட: |
விபோ4 ஸாம்ப3 ஸ்வாமின் பரமஶிவ பாஹீதி நிக3த3ன்
விதா4த்ரு3ணாம் கல்பான் க்ஷணமிவ வினேஷ்யாமி ஸுக2த: ||24 ||
கனியுமிட மேலினிமை – நிறைவாகி
கணமுமுனை யேயினிய கவியுமிசை யால்கனிய
கரமுசிர மேற்குவியப் – பணிவாகி
அகிலமுழு தாமிறையே அன்னையுமை யானேசிவ
அருளபய மேயெனவே – சுகமாக
அயனுடைய காலமென ஆகநொடி யாயுகத்தை
ஆக்கியடி யாலிருத்தல் – எப்போது?
(24)
எப்போது திருக்கயிலையில், பொன்னும் மணியும் இழைத்த இருக்கையில் விளங்கும் பரசிவனின் முன்னே, எங்கும் சிவகணங்கள் நல்லிசை எழுப்பியபடி விளங்க, எனது கைகளைத் தலைமேல் உயர்த்தி வணங்கி, நிறைபொருளே, அன்னையின் துணையோய், இறைவா, பரசிவமே எமைக் காத்து அருள்க என வேண்டிக்கொண்டு, பிரம்மாக்களின் யுகமாகிய காலச் சுமையைக்கூட ஒரே நொடியாக, சுகமாகக் கழிப்பேன்? (24)
குறிப்பு:
காலம், தேசம் எனும் இவ்விரண்டு பரிமாணங்களுமே பல உருவங்கள், உலகங்கள் எனவும், அவையும் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும் நிலைக்கும் அடிப்படைக் காரணங்கள். காலம் என்பது எண்ணங்கள் விளைப்பது. தேசம் அல்லது வெளி என்பது எண்ணங்கள் காட்டும் உருவங்களினால் விளைவது. எனவே காலமும் தேசமும், மனதினால் வருபவை.
ஆழ்ந்த தூக்கத்தில் நாம் உடலையும், மனதையும், அறிவையும் இழப்பதாலேயே, காலமும் தேசமும் கடந்தாற் போலிருக்கிறோம். மனதாலோ அறிவாலோ அறியப்பட முடியாத ஆன்மா, தூக்கத்தில் நாம் இருக்கும்போது, அவித்தை எனும் திரையினால் மூடப்பட்டு இருக்கிறது.
ஆனால், சமாதி எனும் ‘தனையுணரறிதுயில்’ நிலையில், ஆன்மா மட்டுமே ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. மனமற்ற நிலையினால், கால தேசக் கட்டுக்கள் அங்கு இல்லை. காலம், தேசம் எனும் இவ்விரு பரிமாணங்களுக்கு உள்ளேதான் எல்லா உலகங்களும், உயிர்களும் அகப்பட்டுள்ளன. காலத்தையும் தேசத்தையும் கடந்த நிலையே பரம்பொருள். பகவான் ஆதிசங்கரர், கயிலை மலையிலே கொலுவிருக்கும் சிவசக்தியினரை, மனமார தரிசித்துக் கொண்டிருந்தால், காலம் எனும் கரையாப் பொழுதும், சுகமாகக் கரைந்துவிடும் என்று கூறுகிறார்.
ஸாலோகம் (அதாவது இறைவனது உலகம் அல்லது இறையனுபவம்), ஸாமீப்யம் (அதாவது, இறைவனின் அருகாமை) எனும் இரண்டு நற்பயன்களும் – கயிலை மலைத் தரிசனம் என்றும், கயிலை மலையான் காலடியில் இருத்தல் என்றும் இப்பாடலில் காட்டப்படுகின்றது. அதாவது, சிவானந்த வெள்ளத்தில் முழ்கி இருக்கும்போது, சிந்தையில் வேறு எண்ணங்கள் இல்லை. எண்ணமே நேரத்திற்கு வித்து. மனம் நினைவு ஏதுமின்றி இருந்தால், கால, தேசக் கட்டுப்பாடுகள் அங்கே இல்லை. (24)
23 – அரி அயனும் அறியாத அண்ணல் அடி போற்றி!
25 – கண்ணாரச் சிவனுருவைக் கண்டுருகும் நாள் போற்றி!