Shivanandalahari – Verse 25
25 – கண்ணாரச் சிவனுருவைக் கண்டுருகும் நாள் போற்றி!
गणानां केलीभिर्मदकलमहोक्षस्य ककुदि |
स्थितं नीलग्रीवं त्रिनयनमुमाश्लिष्टवपुषं
कदा त्वां पश्येयं करधृतमृगं खण्डपरशुम् ||२५ ||
க₃ணானாம் கேலீபி₄ர்மத₃கலமஹோக்ஷஸ்ய ககுதி₃ |
ஸ்தி₂தம் நீலக்₃ரீவம் த்ரினயனமுமாஶ்லிஷ்டவபுஷம்
கதா₃ த்வாம் பஶ்யேயம் கரத்₄ருதம்ருக₃ம் க₂ண்ட₃பரஶும் || 25 ||
அன்பாலே ஓதஜெய – ஜெயமோத
அவரோடு கணமுவகை அவைசூழ பதுமநிதி
அடரான காளைமலைத் – திமிலேற
விடமான தாய்க்கழுத்தும் விழிமூல மூவிருத்தும்
உடலாக மாதுவுமை – உடனாக
மடமானுங் கானகர மழுவாக ஆனபர
சிவஞானங் காணுருகல் – எப்போது?
(25)
எப்போது பிரம்மன் முதலான தேவர்களின் வழிபாட்டுக்களோடும், முறை அறிந்த முனிவர்களின் ‘ஜய ஜய’ எனும் புகழோசையோடும், சுற்றிலும் களித்திருக்கும் கணங்களின் விளையாட்டுக்களோடும், சூழப்பட்டவராய், வலுவான பெரிய காளையின் திமிலின்மேல் அமர்ந்து, நீலம் பூத்த கழுத்தும், மூன்று விழிகளும், அன்னை உமாவினால் தழுவப்பட்ட உடலும், மானும் மழுவும் உடைய கரங்களும் கொண்டு விளங்குகின்ற பரசிவனைப் பார்ப்பேன்? (25)
குறிப்பு:
உருவற்றதே பரப்பிரம்மம் என்பதையும், தன்னுளே உள்ள ஆன்ம ஜோதியே பரப்பிரம்மம் என்பதையும், அத்வைதம் எனும் இரண்டற்ற ஒன்றான தத்துவமே சத்தியம் என்பதையும், ஆய்ந்து, அறிந்து, உணர்ந்து நிலை நாட்டிய பகவான் ஆதி சங்கரர், இங்கே உருவமும் எழிலும் கொஞ்ச, பரம்பொருளைச் சிவ சக்தியராகப் பார்க்கத் துடிப்பது என்பது, நம் போன்ற எளியரும் படிப்படியாக, உருவ வழிபாடு, அருவ வழிபாடு, உருஅருவ வழிபாடு என முன்னுயர வேண்டும் எனும் முனைப்பினாலேதான்.
எப்போது பார்ப்பேன் என்று ஏங்கும் மனதினால், நாம் வேண்டித் துதித்தால், மறைக்கும் திரைகள் மனதில் விலகி, சிவானந்த வெள்ளம் பெருகி, ஆன்ம தரிசனமாக, அருட்பரம்பொருளின் உருப்பெறல் முடியும். (25)