Shivanandalahari – Verse 26
26 – என்முடியில் தன்னடியை ஏற்றியருட் சிவம் போற்றி!
गृहीत्वा हस्ताभ्यां शिरसि नयने वक्षसि वहन् |
समाश्लिष्याघ्राय स्फुटजलजगन्धान् परिमला-
नलभ्यां ब्रह्माद्यैर्मुदमनुभविष्यामि हृदये ||२६ ||
க்₃ருஹீத்வா ஹஸ்தாப்₄யாம் ஶிரஸி நயனே வக்ஷஸி வஹன் |
ஸமாஶ்லிஷ்யாக்₄ராய ஸ்பு₂டஜலஜக₃ந்தா₄ன் பரிமலா
நலப்₄யாம் ப்₃ரஹ்மாத்₃யைர்முத₃மனுப₄விஷ்யாமி ஹ்ருத₃யே ||26 ||
மலரினடியே கரங்கள் – பலமாக
மகிழுயரவே பிடித்து முகிழுசிரமே பதித்து
மனமுருகவே அணைத்து – நலமாக
கலையடிகளே மலர்ந்து சுகமணமுமே முகர்ந்து
கதியறியவே அயனும் – அறியாத
கருணையதுவே மதியில் பெருகுநிலையே உருகி
கனியுருகுவே னதுவும் – எப்போது?
(26)
மலையரசே, உம்மைத் தெளிவாய்க் கண்டு, நினது நிறைவான திருவடிகளை இரு கைகளாலும் இறுகப் பற்றிக்கொண்டு, எனது மார்பிலும், தலையிலும் பதித்து, ஆரத்தழுவி, இதழ்களாக மலருகின்ற இணையடிகளின் நறுமணத்தை முகர்ந்து, பிரம்மா முதலான தேவர்களுக்கும் கிடைக்காத நினது திருவடிகளை அடையும் மகிழ்ச்சியை, நினது கருணையினால், யான் அடைவது எப்போது?
குறிப்பு:
பரசிவனைக் கண்டு களிக்க வேண்டும் என்று 25-ம் பாடலில் துதித்த பகவான் ஆதி சங்கரர், கண்டவுடன் திருவடிகளை இறுகக் கட்டிக் கொண்டு, அணைத்து, உச்சி முகர்ந்து, மகிழ்ந்து இருக்க வேண்டும் என விழைகிறார்.
‘த்ருஷ்ட்வா’ எனும் சொல்லுக்குக் ‘கண்டு’ என்பது பொருள். எனினும், உருவாய், அருவாய், அருவுருவாய் இருக்கும் பரம்பொருளை, மனக் கண்ணால் மட்டுமே ஆய்ந்து தெளிய முடியும் என்பதனால் ‘மனது உணரவே’ என மொழி பெயர்க்கப்பட்டது.
கண்டு என்பது புலனுணர்வுகளை எல்லாம் குறிப்பதாகக் கொள்ளப்பட வேண்டும். எல்லாப் புலனிலும், இறையுணர்வே உணவாய்வரின், மனம் முழுதும் சிவத்தியானமே நிலை பெறும் அல்லவா! அந்த ஆராதனையே, இறைவனை ஆரத்தழுவி அணைக்கின்ற சுகப் பெருநிலை.
இறைவனை உடலாறத் தழுவும் சுகத்தை எப்படி அடைய முடியும்? அது உடலால் உயிர்த்த எல்லாப் பொருட்களையும் இறைவனாய்ப் பார்க்கும் பேராண்மை இருப்பதால்தான் இயலும்!
அத்தகுதியைப் பெறுவதற்குத்தானே அன்பும், அறமும் உடைய வாழ்க்கையால் மனத்தூய்மையும், பரந்த நோக்கமும் நாம் அடைவதற்கான படிக்கட்டுக்களாக இருக்கவேண்டும் என்று நமக்கு மறைகள் எடுத்து உரைக்கின்றன. (26)