Shivanandalahari – Verse 28

28 – நந்நிலையால் நின்னுருவை நயக்கும் அடி போற்றி!

सारूप्यं तव पूजने शिव महादेवेति संकीर्तने
सामीप्यं शिवभक्तिधुर्यजनतासांगत्यसंभाषणे |
सालोक्यं च चराचरात्मकतनुध्याने भवानीपते
सायुज्यं मम सिद्धमत्र भवति स्वामिन् कृतार्थोऽस्म्यहम् ||२८ ||
ஸாரூப்யம் தவ பூஜனே ஶிவ மஹாதே₃வேதி ஸங்கீர்தனே
ஸாமீப்யம் ஶிவப₄க்திது₄ர்யஜனதாஸாங்க₃த்யஸம்பா₄ஷணே |
ஸாலோக்யம் ச சராசராத்மகதனுத்₄யானே ப₄வானீபதே
ஸாயுஜ்யம் மம ஸித்₃த₄மத்ர ப₄வதி
ஸ்வாமின் க்ருதார்தோ₂(அ)ஸ்ம்யஹம் ||28 ||
நின்னுருவ மாகுநிலை மன்னுமுயிர்ப் பூஜைமுறை
நின்னடியி லேகுவழி – நற்கீதம்
நேர்த்துசிவ தேவமஹா தேவனெனப் பாடுமறை
நூற்றுலகு சேருமிடம் – நற்போதம்
நின்னுலகு சேருவழி நன்னடியார் கூடமுரை
தன்னுளுனைக் காணுவழி – நற்தியானம்
மின்னுமசை யாமிசையில் நின்னையறி வாலிறையே
நந்நிலையை யானடைவேன் – உமைநாதா
(28)

நின்னை பூஜிப்பதால் சிவனுருவான அடியாராகவும், ‘மஹாதேவ மஹாதேவ’ எனும் சிவநாம தியானத்தினால் நின்னடியினை அடைபவராகவும், சிவச் சிந்தனையிலேயே இருக்கும் அடியார்களின் கூட்டத்திலேயே இருந்து அவர்களுடன் உரையாடுவதால், சிவனருகிலே எப்பொழுதும் நிலைப்பவராகவும், அசையும் அசையாப் பொருட்களால் விளங்கும் அகிலங்களின் வடிவமாக உமது அகண்ட திருமேனியினைத் தியானிப்பதாலேயே நினை அடைபவராகவும் ஆகிய எல்லாப் பயன்களையும் யான் இப்பிறவியிலேயே பெறுவதாகிறது. பவானியாகிய உமையின் நாதா, இறைவா, (நின்னருளால்) யான் அப்பெரும் பயனை அடைந்தவனாக ஆகின்றேன்.

குறிப்பு:
‘ஸாரூப்யம்’ என்பது சிவனடியார் வடிவாகிப் பெறும் சிவயோக முக்தி ஆகும். ‘ஸாமீப்யம்’ என்பது, சிவனடியினைப் பிடித்தடையும் முக்தி. ‘ஸாலோக்யம்’ என்பது, சிவனருகிலேயே நிலைக்கும் முக்தி. ‘ஸாயுஜ்யம்’ என்பது சிவனுடன் கலத்தலாகிய முக்தி.

இவை எல்லாம் அடைவதற்கு, மனிதப் பிறவி ஒன்றே வழி என்பதும், அதற்குத் தருமமும், ஞானமும் இயைந்த வாழ்வும், இறைவனிடத்து மாறாது நிலைக்கும் பேரன்பும் இருந்தால் போதும் என்றும், அப்படி இருப்பின், இறைவனே இந்த நான்கு வகையான முக்தியினையும் அளிப்பார் என்றும் இப்பாடல் காட்டி, மனித ஜன்மம் புனிதம் என்பது இதனால்தான் என அறிவுறுத்துகின்றது. (28)

27 – மனப்பொருளை ஏற்றென்னை மாற்றும் அருள் போற்றி!

29 – நெஞ்சாரப் பெருஞ்சுகத்தை நேர்க்கும் அடி போற்றி!

Share this Post

Leave a Comment