Shivanandalahari – Verse 29
29 – நெஞ்சாரப் பெருஞ்சுகத்தை நேர்க்கும் அடி போற்றி!
त्वामीशं शरणं व्रजामि वचसा त्वामेव याचे विभो |
वीक्षां मे दिश चाक्षुषीं सकरुणां दिव्यैश्चिरं प्रार्थितां
शंभो लोकगुरो मदीयमनसः सौख्योपदेशं कुरु ||२९ ||
த்வாமீஶம் ஶரணம் வ்ரஜாமி வசஸா த்வாமேவ யாசே விபோ₄ |
வீக்ஷாம் மே தி₃ஶ சாக்ஷுஷீம் ஸகருணாம் தி₃வ்யைஶ்சிரம் ப்ரார்தி₂தாம்
ஶம்போ₄ லோககு₃ரோ மதீ₃யமனஸ: ஸௌக்₂யோபதே₃ஶம் குரு ||29 ||
நினைவு முனதுகதி – நிறைவேளே
நிலையு மிறையுனது சரணமென முனைந்து
நிரவி மொழியுந்துதி – புகல்வேனே
அமரர் தவமுகந்து யுகமுற் படவிரிந்து
அபய விழியருளுந் – தருவாயே
அமைதிப் பெருநிதிய முயரத் தகுமதியும்
அருள்க ஜகத்குருவே – சிவசம்போ
(29)
நினது திருவடி மலரினை அர்ச்சிக்கிறேன். நிறைவான நின்னையே எப்பொழுதும் யான் நினைக்கிறேன். இறைவனாய் நின்னையே சரணடைகின்றேன். வாக்கினாலும் நின்னையே தொழுகின்றேன். சம்போ, அறிவொளி உடையவர்களால், பல காலமாக வேண்டப்படுவதும், அருள் வீசுவதுமாகிய நினது விழியினை, என்பால் திருப்புவாயாக! உலகோரின் குருவே, எனது அறிவுக்கும், மனதுக்கும், நிறைவை அளிக்கும் ஞானத்தை உபதேசம் செய்யுங்கள்.
குறிப்பு:
இறைவனே நமக்கு ஆசானாக இருந்து நமக்குப் பேரறிவினைத் தரவேண்டும். அப்பேரறிவு ஆழப் பதிய, அமரர்களும், ஆண்டாண்டு காலமாகத் தேடிவரும், ஆண்டவனின் அருட் பார்வையானது நம்மீது விழ வேண்டும்.
இறைவன் நம்மைப் பார்ப்பது என்பதன் பொருள், இறையருள் நமக்குக் கிடைப்பது என்பதே ஆகும்! எப்போதும் இறைவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதே உண்மை எனினும், நாம் இறைவனைப் பார்க்கும் பொழுதுதான், இறைவன் நம்மைப் பார்க்க மாட்டாரா, நமக்கு அருள்தர மாட்டாரா எனும் ஏக்கங்கள் நமக்கு வரும். எனவே, இறைவன் நம்மைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார் என்ற நந்நம்பிக்கை முதலில் நமக்கு வந்து விட்டால், நாம் இறைவனைப் பார்க்கத் தொடங்கி விடுவோம்.
அவரை எங்கே என்று பார்ப்பது?
இதைத்தான் முந்தைய பாடல்களில் காட்டியபடி, எல்லா உருவங்களிலும், உலகங்களிலும், உயிர்களிலும் பிறகு எல்லாம் கடந்து நம் உள்ளத்தில் கடவுளாகவும் நாம் பார்க்க வேண்டும். பார்க்கத் துடிக்கும் நோக்கமும், நுண்ணுணர்வும் வந்து விட்டால், பளிச்சென இறைவன் வெளிச்சத்தைக் காட்டி, நமது பார்வையில் கோர்வையாகிக் கனிவான். அப்பேறு பெறுவதற்கு எப்போதும், இறைவனையே சிந்திப்பதும், திருவடிகளில் பணிந்து தொழுவதுமாக நாம் இருக்க வேண்டும். அதனையே தாம் செய்து வருவதாக, ஆதிசங்கரர் முதல் இரு வரிகளிலே உறுதிப் படுத்திக் கொள்கின்றார்.
பக்தியின் குழந்தைகளாக, ஞானமும், வைராக்கியமும் (முறையே கொள்வன கொள்ளும் அறிவும், தள்வன தள்ளும் திடமும்) கருதப்படுகின்றன. அக்குழந்தைகள் பிறக்கவும், திடமாக வளரவும், இறையருளின் துணை மிகவும் அவசியம். (29)