Shivanandalahari – Verse 30
30 – ஆராதனை கடந்து ஆள்விப்பான் அடி போற்றி!
गन्धे गन्धवहात्मताऽन्नपचने बर्हिर्मुखाध्यक्षता |
पात्रे काञ्चनगर्भतास्ति मयि चेद् बालेन्दुचूडामणे
शुश्रूषां करवाणि ते पशुपते स्वामिन् त्रिलोकीगुरो ||३० ||
புஷ்பார்சனே விஷ்ணுதா
க₃ந்தே₄ க₃ந்த₄வஹாத்மதா(அ)ந்னபசனே
ப₃ர்ஹிர்முகா₂த்₄யக்ஷதா |
பாத்ரே காஞ்சனக₃ர்ப₄தாஸ்தி மயி சேத்₃
பா₃லேந்து₃சூடா₃மணே
ஶுஶ்ரூஷாம் கரவாணி தே பஶுபதே
ஸ்வாமின் த்ரிலோகீகு₃ரோ ||30 ||
கண்மலர்ப் பூஜைதரும் – கரிமாலாய்
கவியுமண மாய்வளியாய் அவியுவுண வாயொளியாய்க்
கண்டமரர் விண்டதிறம் – கையேகக்
கலனெவையு மாக்கபல வுலகையுரு வாக்குமயன்
கைவலிமை ஆகுமெனின் – மெய்யாகக்
கதியுநிறை துதிமுறையும் மதிசிரனே நிதியுறுவேன்
கலையுமூ வுலகினருட் – குருசீலா
(30)
உனக்கு ஆடைகளை அணிவித்து ஆராதிக்க, ஆயிரம் கரங்களுடைய ஆதவனின் திறமும், உன்னை மலர்களால் தொழ, திருமாலின் மாதவமும், நறுமணப் பொருளைத் தந்து வரவேற்க வளியின் வளமும், உனக்கு உணவைப் படைத்து உபசரிக்க அக்கினி வடிவமான தேவர்களின் திறமையும், வழிபாட்டுக் கலன்களைப் படைக்க உலகைப் படைத்த பிரம்மனின் தன்மையும் (ஆகிய இத்திறமைகள்), என்னிடம் நிலைத்து இருக்குமேயானால், உமது வழிபாட்டை யான் (சரியாகச்) செய்யக்கூடும், ஓ, இளம்பிறை தலையணிந்த, இறைவா, உயிர்களின் தலைவா!
குறிப்பு:
எங்கும் பரந்திருக்கும் பரம்பொருளுக்கு, படர்ந்திருக்கும் சூரிய ஒளியே தக்க ஆடையாகும் என்றால், அதனைத் தர எனக்கு எங்கே வலுவிருக்கிறது!
தனது கண்களையே மலர்களாகக் கொடுத்து அர்ச்சித்த, மாதவனைப் போன்ற தவம் எனக்கு எங்கே இருக்கிறது! வளியைப் போன்ற பரவும் திறன் இருந்தால் அல்லவா, நீ இருக்கும் இடமெல்லாம் சென்று, நறுமணம் காட்டி உன்னை வரவேற்க முடியும்! அறிவாகிய தீயினை முகமாகக் கொண்ட தேவர்கள், அத்தீயினால் சமைத்து அளித்த தூய ஞானமல்லவா நினது பிரசாதமாகப் படைக்கப்பட வேண்டும்!
வழிபாட்டுக்கு உதவும் கலன்கள் எல்லாம், உலகில் உள்ள எல்லா உடல்களும் என்றால், அவற்றைப் படைத்த பிரமனின் வலிமை அல்லவா, எனக்கு இருக்க வேண்டும்! இவை எல்லாம் என்னுள் இருந்தால், என்னாலும் உனக்குத் தக்க வழிப்பாட்டினைப் படைக்க முடியும்.
இப்படி ஆதி சங்கரர் கூறியிருப்பது, இத்திறமைகளுக்கெல்லாம் விளக்காக இருக்கின்ற மனதையும் அறிவையும், நாம் இறைவனுக்காக முற்றுமாய் அர்ப்பணிப்பதாலேயே அடங்கும் என்று முன்பு 27ம் பாடலில் கூறிய உண்மைக்குச் சான்று கூறுவதாகத் தோன்றுகிறது. (30)