Shivanandalahari – Verse 31
31 – விடியும் வரம் தந்த விடகண்டன் அடி போற்றி!
पश्यन् कुक्षिगतान् चराचरगणान् बाह्यस्थितान् रक्षितुम् |
सर्वामर्त्यपलायनौषधमतिज्वालाकरं भीकरं
निक्षिप्तं गरलं गले न गिलितं नोद्गीर्णमेव त्वया ||३१ ||
பஶ்யன் குக்ஷிக₃தான் சராசரக₃ணான்
பா₃ஹ்யஸ்தி₂தான் ரக்ஷிதும் |
ஸர்வாமர்த்யபலாயனௌஷத₄மதிஜ்வாலாகரம் பீ₄கரம்
நிக்ஷிப்தம் க₃ரலம் க₃லே ந கி₃லிதம்
நோத்₃கீ₃ர்ணமேவ த்வயா ||31 ||
வதியுவெளி யாதுமிடர் – அடையாமல்
உயிருலக மாயுலவ உண்டுவுமி ழாமலுனுள்
எரியுவிட மானகொடு – எழுதீயை
பயமுமதி பீதிபட அயனுமம ராதிதடம்
பதியப்பதி யாதுவெகு – தொலைவோட
தயவுமருந் தாயிளகி உயருங்கழுத் தாலிறுகி
பயனுமது போலெதுவோ – பசுநாதா
(31)
போதாதோ இப்பெரும் உதவி, உயிர்களின் அரசே, உமது வயிற்றுள்ளே இருக்கும் அசையும் அசையா உலகங்களையும், உம்மால் படைக்கப்பட்ட வெளி உலகங்களையும், அழிவிலிருந்து காக்க வேண்டும் என்ற நோக்கத்தினாலாயே, கடுமையான தீயினால் வளர்வதும், அச்சத்தைக் கொடுப்பதும், எல்லாத் தேவர்களையும் ஓடச் செய்வதும், எல்லா நோய்க்கும் மருந்துமாயும் ஆன, (ஆலகாலம் எனும்) விஷம், உம்மால், உமது கழுத்திலேயே, வெளியில் உமிழப்படாமலும், உள்ளே உண்ணப்படாமலும் நிறுத்தப்பட்டது!
குறிப்பு:
தேவரும், அசுரரும் பாற்கடலைக் கடைந்த போது, கிடைத்த சுகப் பொருட்களை எல்லாம் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு பகிர்ந்து கொண்டனராம். ஆனால், அங்கே ஆலகால விஷம் எழுந்த போது, அனைவரும் அஞ்சி ஓட, சிவபெருமான், எல்லா உயிர்ளையும் பொருட்களையும் காக்கும் கருணையால், அக்கொடிய விஷத்தை எடுத்து விழுங்கிட, அதனைப் பார்த்த அன்னை உமை அஞ்சிப் பிரார்த்திக்க, சிவபெருமான் அக்கொடிய விடத்தைக் கழுத்திலேயே வைத்து, உலகங்களை எல்லாம் காத்தாராம்.
இப்பாடலில் ‘ஔஷதம்’ அதாவது எல்லா நோய்க்கும் மருந்து என்றும் அவ்விஷம் காட்டப்பட்டிருப்பதால், வேறொரு உண்மையும் சுட்டிக் காட்டப்படுகிறது.
ஆலகால விஷம் என்பது, சிவஞானமாகிய பேரறிவு. வேறுபாடுகள் இல்லாத, அத்வைதமான பேரறிவுத் தீ அது. அவ்வறிவினைக் கைக்கொள்வது எளிதல்ல. அவ்வறிவினால், ‘நான்’ என வேறுபட்டிருக்கும் எல்லா உயிர்களும், அவ்வாணவத்தை இழந்து, பரம்பொருளுடன் ஒன்றாகிவிடும். அப்புறம் அங்கே, முதலும் முடிவுமான ஆனந்தம் ஒன்றே இருக்கும். அப்புறம், உலகங்கள் ஏது, உயிர்கள் ஏது, உலகங்களையும் உயிர்களையும் பரமாரிக்கும் தெய்வங்களும், தேவர்களும் ஏது! எல்லாம் ‘தான்’ எனும் தன்மையற்று, சிவமாகிய உண்மைக்குள் உறைந்து விடும். அதனாலேயே எல்லாத் தெய்வங்களும் அஞ்சி ஓடினர்.
பரம்பொருளை சாக்ஷியாகக் கொண்டு, லலிதா எனும் பெயருடன் உலகங்களையும், உயிர்களையும் படைத்து விளையாடிக் கொண்டிருக்கும், பரம்பொருளின் சக்தியாக உமை, தனது திருவிளையாடலும் நின்று விடுமோ எனும் அச்சத்தில், விடத்தை, சிவபிரானின் கண்டத்திலேயே நிற்கப் பிரார்த்தித்தார்.
இப்பாடலில், சிவபிரானின் வயிற்றுக்குள் இருக்கும் அசையா, அசையும் உடல்கள், ‘குக்ஷிகதான் சர அசர கணான்’ என்றும், வெளியில் இருப்பவை எல்லாம் ‘பாஹ்யஸ்த்திதான்’ என்றும் காட்டியிருப்பதை, நாம் எப்படிப் பொருள் கொள்வது? எல்லா உலகங்களையும் தன்னுள் கொண்டிருப்பவர் பரம்பொருள் என்றால், அவருக்கு வெளியில் இருக்கும் வேறு உலகங்களும், உயிர்களும் எப்படி இருக்க முடியும்?
எனவே, தன்னுள் இருப்பவை என்பதற்கு, அவரால் இனிமேலும் படைக்கப்படக் காத்திருக்கும் காலமும், தேசமும், உயிர்களும், உலகங்களும் என்றும், தனக்கு வெளியில் இருப்பவை என்பதற்கு, ஏற்கனவே படைக்கப்பட்ட காலம், தேசம், உயிர்கள், உலகங்கள் என்றும் பொருள் கொள்வது பொருத்தமாகத் தோன்றுகின்றது. அதனாலேயே, அவ்விதமே தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. (31)