Shivanandalahari – Verse 33

33 – எளியோர் நற்பணிவை ஏற்கும் அடி போற்றி!

नालं वा सकृदेव देव भवतः सेवा नतिर्वा नुतिः
पूजा वा स्मरणं कथाश्रवणमप्यालोकनं मादृशाम् |
स्वामिन्नस्थिरदेवतानुसरणायासेन किं लभ्यते
का वा मुक्तिरितः कुतो भवति चेत् किं प्रार्थनीयं तदा ||३३ ||
நாலம் வா ஸக்ருதே₃வ தே₃வ ப₄வத: ஸேவா நதிர்வா நுதி:
பூஜா வா ஸ்மரணம் கதா₂ஶ்ரவணமப்யாலோகனம் மாத்₃ருஶாம் |
ஸ்வாமின்னஸ்தி₂ரதே₃வதானுஸரணாயாஸேன கிம் லப்₄யதே
கா வா முக்திரித: குதோ ப₄வதி சேத் கிம் ப்ரார்த₂னீயம் ததா₃ ||33 ||
தொண்டு சிவனாரைக் கண்டுபணி பூண்டு
நன்று சிவபூஜைத் – துதியாலே
நின்று சிவத்யானம் என்று சிவகாதை
மென்று நினைவூடு – மதியாலே
ஒன்று முறைபோதும் அன்று தளைபோகும்
என்று அறிவாகும் – அதனாலே
நன்று குறைவான தொன்றைப் பிறதேவர்
மன்றப் பயனேது – பெருமானே
(33)

போதாதா இது, தேவதேவா, உமது தொண்டிலோ, உம்மிடத்தில் பணிவையோ, துதியையோ, பூஜையையோ, தியானத்தையோ, நினது கதைகளைக் கேட்பதையோ, நின்னுருவினை (மனக் கண்ணால்) பார்ப்பதையோ, ஒருமுறையேனும் நான் பெற்றவன் ஆனேன் எனில், இறைவா, அதுவன்றோ முக்தி! வேறு என்ன! இப்படியே முக்தி கிடைக்கும் என்றால், அப்புறம் வேறு எதனை வேண்டிப் பெறவேண்டியதாக உள்ளது? நிலையற்ற மற்ற பயனைத் தெய்வங்களிடம் கேட்டுப் பெறுவதால், என்ன லாபம் வந்துவிடப் போகிறது! (ஒன்றுமில்லை!)

குறிப்பு:
மிகவும் எளிய வழியிலேயே இறைவனது கருணையை நாம் அடைய முடியும் என்றும், அலைந்து திரிந்து பூக்களைக் கொண்டு வருவதைவிட, தனது தெளிந்த மனமாகிய பூவை அளிப்பது நலம் என்றும் முன்பு காட்டிய பகவான் ஆதி சங்கரர், சிவப்பணியாகப் பொதுப்பணி செய்வதும், இறைவனை மனதிலே ஏற்றி இருப்பதால், ஒருமுறை செய்யும் நற்பூஜையினாலும், துதியினாலும், ஆழ்ந்து சிவபுராணங்களைக் கேட்பதினாலும், அத்தகைய எளிய பக்தியினாலுமே சிவபெருமானின் அருளால் ஆளப்பட்டு, முக்தி எனும் விடுதலை அடைய நம்மால் முடியும் என்று இப்பாடலில் காட்டுகின்றார்.

‘அஸ்த்திர-தேவதா-அனுஸரண-ஆயாஸேன-கிம்-லப்யதே’ எனத் தரப்பட்ட சொற்றொடருக்கு நிலையற்ற தெய்வங்களைத் திரும்பத் திரும்ப வணங்கி என்ன பயன் என்று பொதுவாகப் பொருள் கொள்ளப்படுகிறது. எனினும், நிலையற்ற பயன்களுக்காக, தெய்வங்களைத் திரும்பத் திரும்ப வணங்கி எதை அடையப் போகிறோம் என்றும் பொருள் கொள்ளலாம். அப்படித்தான் இங்கே தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. (33)

32 – திருநீல கண்டத் தெய்வம் அடி போற்றி!

34 – ஊழிப் பேராழி உண்டஒளித் தனி போற்றி!

Share this Post

Leave a Comment