Shivanandalahari – Verse 35

35 – உள்ளத்துள் உள்ளுயிர்த்து உள்ளான் அடி போற்றி!

योगक्षेमधुरंधरस्य सकलश्रेयःप्रदोद्योगिनो
दृष्टादृष्टमतोपदेशकृतिनो बाह्यान्तरव्यापिनः |
सर्वज्ञस्य दयाकरस्य भवतः किं वेदितव्यं मया
शंभो त्वं परमान्तरङ्ग इति मे चित्ते स्मराम्यन्वहम् ||३५ ||
யோக₃க்ஷேமது₄ரந்த₄ரஸ்ய
ஸகலஶ்ரேய:ப்ரதோ₃த்₃யோகி₃னோ
த்₃ருஷ்டாத்₃ருஷ்டமதோபதே₃ஶக்ருதினோ
பா₃ஹ்யாந்தரவ்யாபின: |
ஸர்வஜ்ஞஸ்ய த₃யாகரஸ்ய ப₄வத:
கிம் வேதி₃தவ்யம் மயா
ஶம்போ₄ த்வம் பரமாந்தரங்க₃ இதி மே
சித்தே ஸ்மராம்யன்வஹம் ||35 ||
காப்பவ ராகவுமின்னல் தீர்ப்பவ ராகவுகன்னல்
சேர்ப்பவ ராகவுமின்னும் – ஜெயமாக
நூற்பவ ராகிடக்கண்கள் நுழைபட தாயினநன்மை
வார்ப்பவ ராவெளியுள்ளும் – வழிகாட்டி
யாப்புல னாகியநன்மை வாய்ப்பவ னாகிடுமுண்மை
நேர்த்தனை யானினியென்ன – விழைவேனே
பூப்புல மேயெனதுள்ளம் காத்துறவே யெனஎண்ணம்
கோர்த்தறி வேனினிதிண்ணம் – குருவாக!
(35)

ஈட்டுவதும், காப்பதுமான செயல்களுக்கு ஆதாரமாகவும், எல்லாவித உயர் நன்மைகளை அளிக்கின்றவராகவும், காணுமுலகிலும், காணா உலகிலும் நந்நிலை அடையும் வழியினைக் காட்டுபவராக, உள்ளும் புறமும் நிறைந்திருப்பவராகவும், எல்லாம் அறிந்தவராயும், அருள் தருபவராயும் விளங்கும் தங்களிடம், யான் எதனை வேண்டும் எனக் கேட்பது? சம்போ, எனக்குள்ளே மிகவும் நெருக்கமாய் இருப்பவர் தாங்களே என எப்போதும் என் மனதிலெண்ணிக் கொண்டிருக்கிறேன்.

குறிப்பு:
ஒன்றை விழையும்போது, எது வேண்டும், எது நன்மை தருவது, எது நமக்குத் தக்கது என்று நம்மால் சரியாக உணர்ந்து கொள்ள முடிவதில்லை. ஒன்றை விரும்பச் செய்வது, நமக்குள் இருக்கும் இச்சா சக்தி எனும் விழையும் வலிமை. அச்சக்தி வளர வளர, நமது விருப்பங்களும், தேவைகளும் மாறும். நம்முடைய அறிவின் முதிர்ச்சியைப் பொறுத்தே, நம்முடைய ஆசைகளின் முதிர்ச்சியும் இருக்கும் அல்லவா? குழந்தைக்கு மிட்டாய் ஆசையானால், அதுவே வளர்ந்த இளைஞனாகும் பொழுது, மற்றொரு பொருளில் ஆசைப்படுகிறது. ஏனெனில், அது அறிவின் வளர்ச்சி.

அறிவின் சக்தியே ஞான சக்தி எனப்படும். எனவே ஞான சக்தி வளர வளர, இச்சா சக்தி வளரும். முயற்சியுடையவர்கள், அவ்வாறான இச்சையினால் செய்யும் செயலுக்குத் தேவை, ஆக்கும் திறமை. இதுவே கிரியா சக்தி எனப்படும்.

எனவே சரியான ஒன்று வேண்டும் என்று இறைவனிடம் கேட்க வேண்டும் என்றால், நமக்குச் சரியான அளவு ஞானசக்தி வளர்ந்திருக்க வேண்டும். அது நமக்கு இருக்கிறதா எனும் உறுதி இல்லாத காரணத்தால், நாமாக ஒன்றைக் கேட்பதை விட, இறைவனிடமே அப்பொறுப்பை விட்டு விட்டால், நமக்கு வேண்டிக் கொள்ள வேண்டிய பளுவும் கூட இல்லாமல் நமது வாழ்க்கை எளிதாகிவிடும்.

எப்படி அம்மா, தனது குழந்தைக்கு எது தேவையோ அதனை அவ்வப்போது கொடுத்துக் கவனித்து வருவாரோ, அப்படியே, இறைவன் நாம் கேட்காமலேயே தக்கன தக்க சமயத்தில் அளித்துக் காப்பது உறுதி. இதுவே இப்பாடலின் உட்கரு. (35)

34 – ஊழிப் பேராழி உண்டஒளித் தனி போற்றி!

36 – ஆலயம் ஆகுமுடல் ஆள்விப்பான் அடி போற்றி!

Share this Post

Leave a Comment