Shivanandalahari – Verse 37
37 – கடைந்தடையும் பேரமுதக் கற்பகத் தரு போற்றி!
मन्थानं दृढभक्तिरज्जुसहितं कृत्वा मथित्वा ततः |
सोमं कल्पतरुं सुपर्वसुरभिं चिन्तामणिं धीमतां
नित्यानन्दसुधां निरन्तररमासौभाग्यमातन्वते ||३७ ||
மந்தா₂னம் த்₃ருட₄ப₄க்திரஜ்ஜுஸஹிதம் க்ருத்வா மதி₂த்வா தத: |
ஸோமம் கல்பதரும் ஸுபர்வஸுரபி₄ம் சிந்தாமணிம் தீ₄மதாம்
நித்யானந்த₃ஸுதா₄ம் நிரந்தரரமாஸௌபா₄க்₃யமாதன்வதே ||37 ||
முனியுமன மேகருவி – மத்தாகி
உரியகுண மோடுமறை அரியகட லாழிகடைந்
துகளதரு தேனுமணிப் – பெரும்போகம்
அருளவுமை யோடுதவப் பொருளபய ஞானசுகம்
தருவதரு வானசிவ – பரமேசா
அரியபர மானநிதி விரியபிற வாதகதி
அருளபய மானதிரு -அடைவாரே
(37)
தெளிவான மனமுடையவர்கள், உறுதியான மதி எனும் கயிறும், நந்முயற்சியும் கொண்டிலங்கும் மனதை, கடைகின்ற மத்தாகப் பயன்படுத்தி, வேதமாகிய கடலை, திண்ணமுடன் கடைந்து, அதிலிருந்து உமையுடன் இருப்பவராய், கற்பக மரம், காமதேனு, சிந்தாமணி போல, வேண்டுவன அளிக்கின்றவராய், ஞானிகளுக்குள் விளங்கும் பெரும் சுக நிலையாய், நிலையான முக்தியெனும் செல்வமாய் விளங்கும் பரம்பொருளை அடைகின்றனர்.
குறிப்பு:
தெளிவான மனம் என்பது, காமம், குரோதம், லோபம் முதலான தீக்குணங்கள் அற்று, உயற்குணங்கள் விளங்க இருக்கும் நிலை. இதற்குக் கர்ம யோகம் என்பதே வழி. அதாவது, தனக்கெனப் பயன் எனும் எதிர்பார்ப்பு இல்லாமல், தர்மப்படி தமக்கான கடமையை மட்டும், இறைவழிபாடாகச் செய்து வாழ்தல். அவ்வாறு செய்வதன் பலனாகக் கிடைக்கும் தெளிவுடைய மனத்தினை, நாம் திடமான புத்தியினால் மேலும் பலப்படுத்த வேண்டும். இதற்கு மனதிலும், புத்தியிலும் ஒருநிலைக் கோட்பாடு ஏற்படுத்துவது தேவை. அதற்கு உதவத்தான் பக்தி யோகம், தியான யோகம் என நம்மை உயர்த்துவதற்கான படிகள் இருக்கின்றன. அப்படிகளில் ஏறி, அதனால் தெளிந்த மனமும், திடமான புத்தியும் அடைந்தவர்களாக இருப்பவர்களுக்கு ஞான வேட்கை ஏற்படுவது நியதி.
அதன் பயனாக, அவர்கள் எப்போதும் தங்கள் மனதில், ஆன்ம அறிவாகிய வேத உண்மைகளை அலசி ஆய்ந்து வந்தால், அழியாத பரம்பொருளாகிய சிவபெருமான், உமையின் கூட்டோடு அருள் தருவது போலப் பேரறிவும், பரசிவ சுகப் பெரு வெள்ளமும் தங்களுக்குளே விளைவதை உணர்வர். தருமத்தால் கடந்து வந்த வாழ்க்கைப் பாதை, இவ்வாறு ஞானத்தால் அலங்கரிக்கப்பட்டு, நம்மை சிவானந்த வெள்ளத்தில் நனைத்து முக்தி எனும் விடுதலையை நோக்கி நடத்திச் செல்லும். இவ்வரிய கருத்தே, இப்பாடலில் விளங்கும் கரு. (37)