Shivanandalahari – Verse 40
40 – அல்லல் அறுக்கும் அரும்பயிர்நீர் வளம்போற்றி!
रानीतैश्च सदाशिवस्य चरिताम्भोराशिदिव्यामृतैः |
हृत्केदारयुताश्च भक्तिकलमाः साफल्यमातन्वते
दुर्भिक्षान् मम सेवकस्य भगवन् विश्वेश भीतिः कुतः ||४० ||
கவிதாகுல்யோபகுல்யாக்ரமை-
ரானீதைஶ்ச ஸதா₃ஶிவஸ்ய
சரிதாம்போ₄ராஶிதி₃வ்யாம்ருதை: |
ஹ்ருத்கேதா₃ரயுதாஶ்ச
ப₄க்திகலமா: ஸாப₂ல்யமாதன்வதே
து₃ர்பி₄க்ஷான் மம ஸேவகஸ்ய
ப₄க₃வன் விஶ்வேஶ பீ₄தி: குத: ||40 ||
தேற்றமுத நீர்ப்பரவி – அதுவாக
கூற்றசிவ னூற்றவுமை ஏற்றபரப் பேற்றினருட்
தோற்றமதித் தேவயலில் – பயிராக
நாற்றுவர வேற்றுயர மாற்றுமன மேற்றிணைய
மூற்றுலக நாயகனே – முழுதாக
சோற்றுவள மேற்றுயர தூற்றுவறி தேற்றயர
ஆற்றுபய மேனெனக்கு – அணுகாதே
(40)
மதியாகிய ஏற்றம் இறைத்துக் கொட்ட, கவிதை எனும் கால்வாய்களின் வழியாகப் பாயும் வெள்ளமாக வெளிப்படுத்தப்பட்ட சிவசக்தி வடிவான பரம்பொருளின் வரலாற்றுப் பெருமை எனும் அமிர்த நீர்ப் பரப்பினால், இதய வயலில், பக்திப் பயிர்கள் நன்றாகப் பயன் தர வளர்ந்துள்ளன. பகவானே, உலகநாதனே, அதனால், உனது அடிமையான எனக்கு, வறுமையினால் பயம் என்பது எப்படி வரும்! (வராது!)
குறிப்பு:
அறம், பொருள், இன்பம், வீடு (தர்ம, அர்த்த, காம, மோக்ஷ) எனும் இவை நான்கும், மனித நந்நோக்கங்கள் (புருஷார்த்தம்) ஆகும்.
தர்மம் என்பது அர்த்தம், காமம் எனும் அகப் புறப் பொருட்களை அடையும் வழியினைக் காட்டுகின்றது. இதில் அர்த்த எனும் அடிப்படைப் பொருள் வளம் இல்லை எனில், ஒருவரது வாழ்க்கை வறுமை வாட்டுவதாகிவிடும். அப்பொருள் புறப்பொருள் எனில் உடலால் ஏழ்மையும், அகப்பொருள் எனில் மனத்தினால் துயரமும் ஏற்படும்.
தர்மத்தின்படி நடந்து, தெளிவான மனமும் உறுதியான மதியும் கொண்டவர்கள், ஞானப் பாதையில் நாட்டமுடையவர்களாய், உலக வாழ்க்கையில் பண்பாளர்களாக, பழுதற வாழ்ந்து கொண்டே, சிவஞானமாகிய விடுதலைப் பேரின்பத்தை நாடிக் கொண்டிருப்பார்கள். எல்லாம் இறைமயம் எனும் உணர்வினில் இருப்பவர்களாக, அதனால், ஆசை எனும் கட்டில் அடைபடாதவர்களாக, அப்படி இருப்பதனால், இல்லாமை எனும் துயர் அற்றவர்களாக இருப்பார்கள்.
சிவானந்த3லஹரீ எனும் சிவசுகப் பெருவெள்ளத்தில், ஞானப் பயிரை நனைத்து, தம்முள்ளேயே வளமுற வளர்த்திருந்தார்கள். அதனால் அவர்களை எவ்விதமான வறுமையும் (பொருளாலும், மனதாலும்) வாட்டாது. இதுவே இப்பாடலின் உட்கரு. (40)