Shivanandalahari – Verse 42
42 – மனக்கோட்டை கடந்தாளும் மாயன் அடி போற்றி!
स्तोमश्चाप्तबलं घनेन्द्रियचयो द्वाराणि देहे स्थितः |
विद्यावस्तुसमृद्धिरित्यखिलसामग्रीसमेते सदा
दुर्गातिप्रियदेव मामकमनोदुर्गे निवासं कुरु ||४२ ||
க₄னத்₄ருதி: ப்ராகார உத்₃யத்₃கு₃ண-
ஸ்தோமஶ்சாப்தப₃லம் க₄னேந்த்₃ரியசயோ
த்₃வாராணி தே₃ஹே ஸ்தி₂த: |
வித்₃யாவஸ்துஸம்ருத்₃தி₄ரித்யகி₂ல
ஸாமக்₃ரீஸமேதே ஸதா₃
து₃ர்கா₃திப்ரியதே₃வ மாமகமனோ
து₃ர்கே₃ நிவாஸம் குரு ||42||
ஆழப் பெருவாழி – திடவேலி
சீலப் பெருங்கூறு சேனைத் துணையோடு
தேகப் புலனூடு – தடவாயில்
ஞானப் பெரும்பேறு ஆன மனமோடு
ஆளப் பெருவீடை – அடைவீரே!
காண முடியாத மோனக் குடிலேறி
தூரப் பொருளான – துரீயோனே
(42)
அடைவதற்கரிதான இடங்களில் இருத்தலை மட்டுமே விரும்பும் இறைவா! அளக்க முடியாப் பெருமையை அகழியாகவும், வலுவான உறுதியை மதிலாகவும், மேலான குணங்களால் உயர்ந்தவர்களின் கூட்டத்தை, பலம் பொருந்திய நட்பூட்டும் படையாகவும், உடலில் உள்ள புலன், பொறிகளை வழியாகவும், அறிவை, அடைந்த பொருள்களில் எல்லாம் தெரியும் நிறைவாகவும், இப்படி எல்லா விதத்திலும் தக்கதான உறுப்புக்களுடன் கூடிய என்னுடைய மனமாகிய கோட்டையில், எப்போதும் தாங்கள் இருந்து அருள் செய்க!
குறிப்பு:
விழிப்பு, கனவு, ஆழ்துயில் ஆகிய முந்நிலைகளையும் கடந்த, துரீயம் எனும் மறைவான இடத்தில், கடவுளாக (அதாவது எளிதில் நம்மால் உணர்ந்து அடைய முடியாத இடத்தில் விளங்கும் பரம்பொருளாக) சிவபிரான் இருக்கிறார். அவரை, எப்போதும் அடையும் இடத்தில் இருக்கும்படியாக, நம் மனதில் எப்பொழுதும் தெரியும்படியாக இருத்த என்ன செய்ய வேண்டும்? ஆழ்ந்த சிந்தனையாகிய அகழி சுற்றியிருக்க, உறுதியான மதியும், நற்குணங்களின் வரவேற்பும், புலனுணர்வாகிய கருவிகளின் வாயில்களில் தர்மத்திற்கு ஒப்பிய செயல்களையும், விளைவுகளையும் மட்டுமே அனுமதிக்கின்ற நமது மனதை இறைவனுக்குக் கொடுத்து, நம் உடற்கூறினையே தக்க இடமாக மாற்றி விடுவோம் என்பதே இப்பாடலின் கரு.
கரணங்கள் கட்டுப்பட்டு விட்டன என்றால், உடல் கோவிலாக மாறிவிட்டதற்கு அது ஒரு பெரும் அடையாளம். அதன் பிறகு, இறைவன் அங்கே எப்போதும் தெரியும்படி இருக்க வேண்டும் என்று கேட்பதுதானே முறை! வலுவான கோட்டையாகவும், வளமான குணங்களினாலும் சிந்தைனையாலும் சிறந்த இடமாகவும், மனது மாறிவிட்டால், இறைவன், நமது மனதையே தன்னுடைய இடமாக மாற்றிக் கொள்ள என்ன தடை இருக்கப் போகிறது? அப்படி இறைவன் வந்து மனதிலேயே நித்திலமாக அமர்ந்து விட்டால், பிறகு என்றும் சுக நிலைதானே! அதையே இப்பாடல் கேட்கிறது.
தம்மிடம் இருப்பதாக பகவான் ஆதி சங்கரர் காட்டும் நற்குணங்களை, நாமும் அடைவதற்கான வழியினைத் தேடுவதுதான், நம்முடைய ஆன்ம அறிவுப் பயணத்திற்கான முதற்படிகள். (42)