Shivanandalahari – Verse 43
43 – வேடுவனாய் மனமிருகம் வீழ்த்துவான் அடி போற்றி!
स्वामिन्नादिकिरात मामकमनःकान्तारसीमान्तरे |
वर्तन्ते बहुशो मृगा मदजुषो मात्सर्यमोहादय-
स्तान् हत्वा मृगयाविनोदरुचितालाभं च संप्राप्स्यसि ||४३ ||
போ₄ மய்யேவ வாஸம் குரு
ஸ்வாமின்னாதி₃கிராத
மாமகமன:காந்தாரஸீமாந்தரே |
வர்தந்தே ப₃ஹுஶோ ம்ருகா₃
மத₃ஜுஷோ மாத்ஸர்யமோஹாத₃ய-
ஸ்தான் ஹத்வா ம்ருக₃யாவினோத₃
ருசிதாலாப₄ம் ச ஸம்ப்ராப்ஸ்யஸி ||43 ||
ஆளு மலையுறு – அதியோனே
ஈது அதுயிடம் போத லறுமன
மீது நிலையுறு – வெகுவாக
தீது கொடுசின மீடு படுசெறுக்
கோடு கெடுவிலங் – குனதாக
ஏது மவையினி மீத மிலையழித்
தாளும் சுகப்படத் – தகுமாமே
(43)
மலையரசே! நீவிர் இங்கும் அங்கும் போக வேண்டாம்! இறைவா, என்னிடமே இருங்கள்! தொன்மையான வேடுவரே! என் மனக்காட்டிலே, பொறாமை, மயக்கம் முதலான ஆணவம் பிடித்த பல விலங்குகள் திரிகின்றன. அவைகளை எல்லாம் கொன்று, (வேடுவர்கள் விழைகின்ற) வேட்டையின் புதிரான இன்பத்தை நீங்கள் (என்னிடமே) நன்றாக அடையலாம்.
குறிப்பு:
42-ம் பாடலில், நம்முடைய மனம் வலுவாகவும், வளமாகவும் இருந்துவிட்டால், இறைவனை அழைத்து அங்கேயே இருத்தி விடலாம் என வேண்டிய பகவான் ஆதி சங்கரர், நமது மனம் அப்படி நற்தகுதியைப் பெறமுடியாமற் போய்விட்டால் என்ன செய்வது என ஐயப்பட்டு, இப்பாடலில், மனதினை ஒரு அடர்ந்த காட்டிற்கு ஒப்பிடுகிறார்.
ஒருவேளை தாம் நினைத்தது போல, மனத் தெளிவும், மதித் திடமும் இன்னும் நமக்கு வாய்க்கவில்லையோ? அதனால்தான் மனமானது இன்னும் வனம் போல் இருக்கிறதோ? இருந்தால் என்ன! எப்படியும் இறைவனை நமது மனதில் இருக்கச் செய்ய வேண்டும் என்றால், இந்த வனமாகிய மனமும், இறைவனுக்கு ஏற்றதாகத் தான் இருக்க வேண்டும். எனவே, வேடுவனாய் இறைவன் வரட்டும். வந்து என் மனதில் உள்ள விலங்கினமான கெடுகுணங்களை எல்லாம் ஒழிக்கட்டும்.
இப்படிக் கேட்பதால், குறைகளுடன் விளங்கும் நமக்கும், இறைவனை இதயத்துள் இருத்தும் உரிமையும் தகுதியும் இருக்கின்றன என்பதையும் இப்பாடல் சுட்டிக் காட்டுகிறது. (43)