Shivanandalahari – Verse 44

44 – அரியாய்ப் பகையழிக்கும் அத்தன் அடி போற்றி!

करलग्नमृगः करीन्द्रभङ्गो
घनशार्दूलविखण्डनोऽस्तजन्तुः |
गिरिशो विशदाकृतिश्च चेतः-
कुहरे पञ्चमुखोस्ति मे कुतो भीः ||४४ ||
கரலக்₃னம்ருக₃: கரீந்த்₃ரப₄ங்கோ₃
க₄னஶார்தூ₃லவிக₂ண்ட₃னோ(அ)ஸ்தஜந்து: |
கி₃ரிஶோ விஶதா₃க்ருதிஶ்ச சேத:-
குஹரே பஞ்சமுகோ₂ஸ்தி மே குதோ பீ₄: ||44||
பிடியில் துடிமானும் பிறழும் கரிமேவும்
பிறகும் படியான – பெருவீரம்
கொடிய புலிமாளும் வடிவ முயிர்யாவும்
முடிவில் தனதாகத் – தகுவேகம்
மலையில் நிலையாகி வெளிவெண் நிறமாகி
மறைவில் நடமாடி – அகன்றூறி
மனதில் தடமேறு வதெனில் இனிமேலும்
மருட்சி எனக்கேது – பயமேது
(44)

கையில் மானைப் பிடித்திருப்பவராயும் (கையில் மானைப் பிடித்திருப்பதாயும்), யானைமுகனைக் கொன்றவராயும் (யானையைக் கொல்வதாயும்), புலி வடிவ அரக்கனைக் கொன்றவராயும் (புலியைக் கொல்வதாயும்), எல்லா உயிர்களையும் தன்னுள் ஆட்கொள்பவராயும் (எல்லா உயிர்களையும் கொல்வதாயும்), மலையின் அரசராயும் (மலையில் ஆளுமை செய்வதும்), வெண்மை உடலானவராயும் (வெண்ணுடல் கொண்டதாயும்), ஐந்து முகம் கொண்டவராயும் உள்ள சிவன் (அகன்ற முகமும், குறுகிய உடலும் உள்ள சிங்கமானது) என்னுடைய மனமாகிய குகையில் இருப்பதால், எனக்கு எங்கிருந்து பயம் வரும்?

குறிப்பு:
42, 43-ம் பாடல்களில் பரம்பொருளாகிய சிவபிரான், மனதில் இருப்பதாகக் காட்டிய பகவான் ஆதி சங்கரர், இப்பாடலில், அதன் பயனால், சிங்கத்தினை ஒத்த வீரம் தனக்குள் இருப்பதாயும், அதனால் கவலைகள் ஏதும் இல்லாதிருப்பதாயும் காட்டுகின்றார்.
சிங்கத்திற்கும் சிவனுக்கும் சிலேடையாக அமைந்த பாடல் இது.

மன அழுக்காகிய மலமே துள்ளித் திரிகின்ற மான். அது சிவபிரானின் அருட்கையில் பிடிக்கப்பட்டுள்ளது. சிவன் யானைமுகன் (கஜமுகாஅசுரன்), புலியசுரன் (வியாக்கிராசுரன்) ஆகியோரைக் கொன்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.

யானைத் தோலினை அணிந்தவர் எனவும் (யானையின் தோல் மெலிதும் மெலிதாம். அதனைப் பிரித்தணிதல் என்பது எல்லாக் கூறினையும் அறுப்பவர் என்பது ஆகும்), புலித்தோலில் அமர்பவர் எனவும் (அதாவது, கட்டுக்கடங்கா புலியாகிய மனதினைக் கட்டுப்படுத்தி ஆட்கொள்பவர் எனவும்) புராணங்கள் காட்டுகின்றன.

‘அஸ்தஜந்து:’ என்பதன் பொருள், உயிர்களை அழிப்பவர் என்பது ஆகும். சிங்கம் எல்லா மிருகங்களையும் அடக்கி, அழிப்பது போல, பரம்பொருள் எல்லா உயிர்களையும் தன் வயம் இழுத்துக் கொள்கிறார். சிவனுக்குப் ‘பஞ்சமுகம்’ அதாவது, ஐந்து முகங்கள் உண்டாம். ஆறாம் முகம் எனும் ‘அதோ முகம்’ ஊழியில் மட்டுமே வருமாம்.

‘பஞ்ச’ எனும் சொல்லுக்கு விரிந்த, அகன்ற எனும் பொருளும் வடமொழியில் உண்டு, சிங்கத்தின் முகம் அகன்றும் உடல் குறுகியும் இருப்பதனால், அதற்குப் பஞ்சமுக: எனும் பெயரும் உண்டு.

‘மறைவில் நடமாடி அகன்றூறி’ என மொழிபெயர்ப்பில், அகன்று என்னும் சொல் அகலத்தையும், அவ்வகலத்திலிருந்து ஊறி எடுத்த உருவம் என்று சிங்கத்தையும் குறிக்கிறது. அதேபோல, அகன்று என்றால் நமக்குத் தெரியாமல் மறைந்து இருப்பது என்றும், ஊறி என்றால், மறைந்தாற் போலிருப்பினும் நமக்குள்ளேயே ஊறியும் இருப்பது என்றும் அதுவே கடவுள் என்றும் காட்டப்பட்டது. மறையாகிய வேதங்களில் நடமாடி, அகன்ற மற்றும் ஆழமான உண்மையாக இருப்பவர் என்றும் தமிழில் பொருள்படும். (44)

43 – வேடுவனாய் மனமிருகம் வீழ்த்துவான் அடி போற்றி!

45 – மனப்பறவை கூட்டுவித்த மணியடிகள் திறம் போற்றி!

Share this Post

Leave a Comment