Shivanandalahari – Verse 46
46 – மனமடையும் திருவடியாம் மாடம் அருள் போற்றி!
राधौतेपि च पद्मरागललिते हंसव्रजैराश्रिते |
नित्यं भक्तिवधूगणैश्च रहसि स्वेच्छाविहारं कुरु
स्थित्वा मानसराजहंस गिरिजानाथाङ्घ्रिसौधान्तरे ||४६ ||
ருத்₃யத்ஸுதா₄வைப₄வை-
ராதௌ₄தேபி ச பத்₃மராக₃லலிதே
ஹம்ஸவ்ரஜைராஶ்ரிதே |
நித்யம் ப₄க்திவதூ₄க₃ணைஶ்ச
ரஹஸி ஸ்வேச்சா₂விஹாரம் குரு
ஸ்தி₂த்வா மானஸராஜஹம்ஸ
கி₃ரிஜானாதா₂ங்க்₄ரிஸௌதா₄ந்தரே ||46||
யாகவொளி ஆனதினால் – வெளிராகி
தேஜமய மானபத ராகபது மானமணி
சூடசிவ மானடியர் – கதியாக
கூடுமன்ன மாகமலை வீடுடைய நாதனடி
தேடுமறை வானசுகம் – பெறவேண்டி
நீடுவளர் காதல்மன மாதுவெனச் சேதனமுள்
கூடிவிளை யாடிநலம் – கொள்வாயே
(46)
(கீழிருந்து) நிறைவான பாத நகத்தின் ஒளியும், (மேலிருந்து) தலையில் வளரும் மதியின் ஒளியும் வெள்ளியாய் நிறைக்க, பத்மராகமெனும் மணியாய்ச் சிவந்த பாதங்கள் மிளிர, அன்னப் பறவைகளாக அடியார்கள் அங்கேயே கதியென்று இருக்க, (அத்தகு) மலையரசனின் திருவடியாகிய மாளிகையில் இருந்துகொண்டு, பக்தியாகிய காதலியுடன் விருப்பப்படி கூடி, அறிவுடன் களித்து, மறை பொருளான அருளைச் சுகித்து, மனமே, நீ இரு.
குறிப்பு:
இப்பாடல் மனம் எனும் காதலன், பக்தி எனும் காதலியுடன் கூடி, சிவபெருமானின் திருவடியாகிய மாளிகையில் களித்து வாழட்டும் எனக் கேட்கிறது. 45-ம் பாடலில், திருவடிகள் மனப்பறவையின் கூண்டாகத் தோன்றியது. இப்பாடலிலோ, திருவடிகள் பக்தியுடன் கூடிய மனம் வசிக்கின்ற மாளிகையாக மாறுகின்றது.
பாத நகமும் (அதாவது அடியும்), உச்சித் தலை மதியும் (அதாவது முடியும்) வெண்மையான ஒளியினால் எல்லா இடத்தையும் நிரப்பி, சிவமாகிய சுத்த சைதன்யத்தை அல்லது சிவ ஞானமெனும் பர அறிவைக் காட்டுகின்றன. அவ்வெண்மையினூடே, சிவந்த பதும ராகக் கல்லினைப் போல, பாத கமலங்கள் காட்டப்படுகின்றன. அது சிவனுடன் இணைந்திருக்கின்ற சக்தியினைக் காட்டுகின்றது.
சிவசக்தியாகிய பரம்பொருளே மலையின் நாதன் என்பதன் மூலம், எல்லா உயர்வுக்கும் அதுவே உயர்வு எனவும் காட்டப்பட்டது. அவ்வுயர்வையினைத் தரும் பாத மலர்களையே அன்னப் பறவைகளான அறவோர்கள் நாடுவர்.
அன்னம் எப்படிச் சுத்தமான பாலைப் பகுத்துண்ணுமோ, அதுபோலவே சிவனடியார்கள், சிவஞானப் பெரும் பேற்றினைத் தெளிந்து பருகுவர். அதனால், திருவடிகளாகிய மாளிகையிலேயே, நம் மனமானது எப்பொழுதும் தங்கி இருந்து கொண்டு, பக்தி அல்லது அன்பு எனும் காதலியுடன் கூடிக் களிப்பதாக, நல்லறிவு காட்டும் வழியெல்லாம் சென்று சுகித்து இருக்க வேண்டும்.
மேலும் ‘ஸ்வ-இச்சா-விஹாரம்’ எனும் சொல்லுக்கு, ‘சேதனம் என்னும் நல்லறிவின் வழிப்படி எல்லாம்’ எனத் தமிழில் பொருள் அமைக்கப்பட்டது. (46)