Shivanandalahari – Verse 47

47 – சிந்தைப் பூந்தோட்டச் சிவஞானக் கனி போற்றி!

शंभुध्यानवसन्तसंगिनि हृदारामेऽघजीर्णच्छदाः
स्रस्ता भक्तिलताच्छटा विलसिताः पुण्यप्रवालश्रिताः |
दीप्यन्ते गुणकोरका जपवचःपुष्पाणि सद्वासना
ज्ञानानन्दसुधामरन्दलहरी संवित्फलाभ्युन्नतिः ||४७ ||
ஶம்பு₄த்₄யானவஸந்தஸங்கி₃னி
ஹ்ருதா₃ராமே(அ)க₄ஜீர்ணச்ச₂தா₃:
ஸ்ரஸ்தா ப₄க்திலதாச்ச₂டா
விலஸிதா: புண்யப்ரவாலஶ்ரிதா: |
தீ₃ப்யந்தே கு₃ணகோரகா
ஜபவச:புஷ்பாணி ஸத்₃வாஸனா
ஜ்ஞானானந்த₃ஸுதா₄மரந்த₃லஹரீ
ஸம்வித்ப₂லாப்₄யுன்னதி: ||47 ||
சிவநினைவி லானவுயர்த் தவநிலையி லானவொளி
பவநினைவி லானமன – வனம்வீசி
பழுவினையி லானஇலை நழுவிநல மாய்விழுக
தொழுகநல மானதுளிர் – ஒளிவீசும்
நலமுடைய தானகுண தளிருமரும் பாகிஜப
மலருமகிழ் வானசுக – மணம்வீசி
பலமுடைய ஞானமதி அமிழ்துடைய தேனருவிப்
பழமுமனு பூதியொளிப் – பிரவாகம்
(47)

சிவசக்தியரின் நினைவாகிய இளம் தென்றல் காற்று, இதயமாகிய வனத்தில் வீசி, வினைகளாகிற முதிர்ந்த இலைகளை (அசைத்து) விழ வைக்கின்றது. அதனால், தொழுகின்ற பக்தி எனும் உட்தண்டு வெளிப்படுகின்றது. அதிலே நலம் எனும் துளிர்கள் தளிர் விடுகின்றன. அக்கொடி ஒளியுடன் திகழ்கிறது. நல்ல குணங்கள் அரும்பாக அதில் எழுகின்றன. அதிலிருந்து (சிந்தையில் பூக்கின்ற) ஜப மலர்கள் மலர்கின்றன. அவை சிவ ஞானமாகிய அறிவின் மணத்தை எங்கும் வீசுகின்றன. அவ்வறிவு உணர்வால், அமிழ்தாகிய தேனைப்போல் நிலையான இன்பம் சுரக்கிறது. அச்சிவானந்த சுகத்தினால், அனுபூதி அல்லது அனுபவமாகிய பெரும் கனி, பழுத்து ஒளியுடன் விளைகிறது.

குறிப்பு:
சிவத்தியானம் மனதிற்கு வினையுதிர் காலத்தை விளைக்கிறதாம். அதனால் மனமெனும் கொடியில் நலம் விளைகிறது. முக்திக் கனி பழுக்கிறது என்றெல்லாம் கூறி, பகவான் ஆதி சங்கரர், எவ்வாறு பருவம் பயிர்களுக்கு உதவுமோ, அதுபோல இறையருள் உயிர்களுக்கு உதவும் என்று காட்டுகின்றார்.

தீக்குணத்தால் சேர்ந்து விட்ட பாவங்கள் எல்லாம் இலைகளாக நிறைந்து இருந்தாலும், சிவசக்தியரின் நினைவு, தென்றலாக வீசி, இலைகளை உதிர்த்து ‘வினையுதிர்’ காலமாகச் செய்துவிடும். அப்படித் தீவினைகளும் அதற்குக் காரணமான தீக்குணங்களும் உதிர்ந்து விட்டால், எப்படி அந்த மரம் தெளிவாகத் தெரியுமோ, அதேபோல, நமது மனமும் தெளிவாக விளங்கும். அதன் விளைவாக, நன்மைகள் தளிர்களாக முளைவிடும். அதன் விளைவாக, நம்முள் குண மாற்றங்கள் ஏற்பட்டு, நற்குண அரும்புகள் பெருகி, அதன் விளைவால், சிவனைத் தியானிக்கும் தவம் பூக்கிறது. அப்பூவின் மணம், சுற்றிலும் நன்மையாகிய சுகத்தை வீசும். அம்மலரில் பெருகும் தேன் போல, நல்லறிவுச் சுகம் விளையும். அறிவு அனுபவமாவதுதானே முதிர்ச்சி, கனிவு! அதனாலயே, சிவானந்த அனுபூதி எனும் இறையருளனுபவநிலை, கனியாகி ஒளிரும் விளைச்சலுக்கு உவமானமாகக் காட்டப்பட்டது.

‘ஸம்புத்யான’ எனும் முதற்சொல், சிவசக்தியரின்பால் நிலைப்பித்த நினைவு எனப் பொருள் கொள்ளப்பட்டது. (47)

46 – மனமடையும் திருவடியாம் மாடம் அருள் போற்றி!

48 – சித்தம் தெளிவிக்கும் சிவஞானச் சுனை போற்றி!

Share this Post

Leave a Comment