Shivanandalahari – Verse 50

50 – மல்லிகார்ஜுன லிங்க மாவடிவம் தாள் போற்றி!

सन्ध्यारंभविजृम्भितं श्रुतिशिरस्थानान्तराधिष्ठितं
सप्रेमभ्रमराभिराममसकृत् सद्वासनाशोभितम् |
भोगीन्द्राभरणं समस्तसुमनःपूज्यं गुणाविष्कृतं
सेवे श्रीगिरिमल्लिकार्जुनमहालिङ्गं शिवालिङ्गितं ||५० ||
ஸந்த்₄யாரம்ப₄விஜ்ரும்பி₄தம்
ஶ்ருதிஶிரஸ்தா₂னாந்தராதி₄ஷ்டி₂தம்
ஸப்ரேமப்₄ரமராபி₄ராமமஸக்ருத்
ஸத்₃வாஸனாஶோபி₄தம் |
போ₄கீ₃ந்த்₃ராப₄ரணம் ஸமஸ்தஸுமன:
பூஜ்யம் கு₃ணாவிஷ்க்ருதம்
ஸேவே ஸ்ரீ கி₃ரிமல்லிகார்ஜுன
மஹாலிங்க₃ம் ஶிவாலிங்கி₃தம் ||50 ||
மாலையதி லேநடன கோலமறை யேசெவியிற்
மேவுமுயர் வாகுஞ்சிர – மேலாகி
சூழுமினி தேனிழைய தேனுமினி தாயணைய
சூடுபவ ராகுமணம் – இனிதாக
மேலரவ மாலையெனப் பூவில்முத லாமமரர்
பூஜைபெறு வாருமையின் – பொற்பேரே
ஸ்ரீ கிரியி லாளுமல்லி கார்ஜுனமா லிங்கமுரு
சேருமன மாகவுனைச் – சேர்வேனே
(50)

மாலையில் நடனமிடுபவரும் (மாலையில் மலர்வதும்), செவி மறைச் சீராயும், அதன் தலையான உபநிடத மேன்மையாய் இருப்பவரும் (செவியிலும், உச்சித் தலையிலும் சூடப்படுவதும்), தேனினிய தாயாகிய சக்தியினால் சேரப்பட்டவரும் (தேனீக்களால் சூழப்பட்டதும்), எப்போதும் நல்லடியார்களால் சூழப்பட்டவரும் (எப்போதும் நல்மணம் கமழ்வதாயும்), நல்லரவங்களை மாலையாகக் கொண்டவரும் (நல்லவர்கள் அணியும் மாலையானதும்), தேவர்களின் பூஜையில் முதலானவரும் (மலர்களிலே முதன்மையானதும்), நற்பேரானதும் (நற்குணம் கொண்டதும்), அன்னை உமையினால் அணைக்கப்பட்டதும், (மங்கையர்களால் சூடப்பட்டதும்) ஆகிய திருமலையில் விளங்கும் மல்லிகார்ஜுனரை (மல்லிகார்ஜுனராகிய மல்லிகை மலரை), யான் விழைகின்றேன்.

குறிப்பு:
இப்பாடல் மல்லிகை மலருக்கும், திருமலையில் விளங்கும் மல்லிகார்ஜுன லிங்கத்திற்கும் சிலேடையாக இருப்பதாக விளக்கப்பட்டது.
‘பிரதோஷம்’ எனும் மாலை நேரம், சிவபிரான் ஆனந்த நடனம் ஆடுவதை, மாலை நேரத்தில் மலரும் மல்லிகையுடன் ஒப்பிடப்படுகின்றது,
செவியால் கேட்கப்படுவது மறை. மறையில் தலையானது உபநிடதங்கள். அவற்றின் உச்சியில் விளங்குவது, பிரம்மமாகிய சிவப்பொருள். அதே போல, செவியிலும் தலையிலும் வைக்கப்படுவது மல்லிகை. நல்ல மணம், தூய வெள்ளை நிறமாகிய குணம், நல்லோரிடும் மாலை, அன்னை பார்வதியின் தலை அணி என்றெல்லாம் மல்லிகையை வர்ணிப்பது போல, மல்லிகார்ஜுன நாதராகிய சிவபிரானை, பகவான் ஆதி சங்கரர் விழைந்து பணிகின்றார். (50)

49 – முனையன்புக் கொடிகனிந்த முக்தி மழை போற்றி!

51 – மனத்தா மரைசுற்றும் சிவத்தேனீ அருள் போற்றி!

Share this Post

Leave a Comment