Shivanandalahari – Verse 51
51 – மனத்தா மரைசுற்றும் சிவத்தேனீ அருள் போற்றி!
ह्लादो नादयुतो महासितवपुः पञ्चेषुणा चादृतः |
सत्पक्षः सुमनोवनेषु स पुनः साक्षान्मदीये मनो
राजीवे भ्रमराधिपो विहरतां श्रीशैलवासी विभु: ||५१ ||
ஹ்லாதோ₃ நாத₃யுதோ மஹாஸிதவபு: பஞ்சேஷுணா சாத்₃ருத: |
ஸத்பக்ஷ: ஸுமனோவனேஷு ஸ புன: ஸாக்ஷான்மதீ₃யே மனோ
ராஜீவே ப்₄ரமராதி₄போ விஹரதாம் ஸ்ரீ ஶைலவாஸீ விபு₄: ||51 ||
மங்கைமல ரரிவதன மகிழ்ந்தேக
ரீங்குலவு ஒலியிதன நீங்குகரு வெளிர்வதன
தீங்கரும்பு முனைமதன முகிழ்வாக
புங்கவன ரிசையவுற துங்கதிரு மலைவளர
எங்குநிறைத் தேநீயிறை பதியாகி
தங்கமன மினிமலரப் பங்கயமுன் பரவியருட்
தும்பிவிளை யாடுகவே தம்பிரானே
(5)
பிருங்கி முனிவரின் ஆசைக்காக ஆடுபவரும் (பிருங்கி எனும் பெண் வண்டின் மனம் கவர ஆடுவதும்), யானை முக அசுரனை அடக்குபவரும் (மத யானையின் உமிழ்நீரைப் பருகுவதும்), பெண் வடிவான திருமாலைக் கண்டு மகிழ்ந்தவரும் (மங்கையர் சூடும் மலர் தரும் காலத்தில் களிப்பதும்), ஓம் எனும் ரீங்காரமாகிய நாதப்பிரம்மம் ஆனவரும் (உம் என்று ஓசையுடன் இருப்பதும்), இருள் நீக்கும் ஒளியான வெள்ளை நிறமானவரும் (இருளான கருமையை வெளி வண்ணமாகக் கொண்டதும்), காமன் கணையினால் குறிக்கப்பட்டவரும் (காமனைச் சூழ்ந்திருப்பதும்), தேவர்கள் நலமுற விழுப்புடையவரும் (பூவனங்களில் இருந்திட விரும்புவதும்), தூய ஸ்ரீசைலம் எனும் திருமலையில் வளர்பவராயும் (உயர்ந்த மலைகளில் பறப்பதாயும்), எங்கும் நிறைந்து தெய்வங்களின் தெய்வமானவராயும் (எங்கும் பறந்து, இறைந்து கிடப்பதும்) ஆக விளங்கும் சிவபெருமான் (தேனீ), எனது மனமாகிய தாமரையைச் சுற்றிப் பறந்து, அருள் விளையாட்டை நடத்தட்டும்.
குறிப்பு:
ஶிவானந்த₃லஹரீ ஆகிய பெருந்தேன் சுரக்க எனது மனமாகிய தாமரை மலர வேண்டும். அதனை சிவநினைவாகிய தேனீ எப்போதும் சூழ்ந்து பறந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே இப்பாடலின் முக்கியக் கருத்து. சிவனுக்கும் வண்டு அல்லது தேனீக்கும் சிலேடையாக அமைக்கப்பட்ட பாடல் இது.
தமிழ்ப் பதிவில், பிருங்கி எனும் வடமொழிச் சொல்லே பெண் வண்டுக்கும் சூட்டப்பட்டது. மேலும் கஜமுக அசுரன் என்பவனைக் கொன்றதான புராணக் கதைக்கு, ‘பொங்கு கரி மதம் அதம்’ எனக் கொண்டு, இருளாய்ப் பொங்குகின்ற ஆணவமாகிய மதத்தை, அதம் அல்லது அழித்தருள் செய்பவர் எனவும் காட்டப்பட்டது.
தூய வெண்ணிறமுடைய சிவபெருமான் கருநிற வண்டுக்கு ஒப்பு எனக் காட்ட வேண்டிய மொழி பெயர்ப்பு, ‘நீங்குகரு வெளிர்வதனம்’ என்பதன் மூலம், கருமையை அகற்றும் வெள்ளை நிற உடல் சிவனையும், நீங்கக்கூடிய வெளி உடல் கருமையானது என்பது வண்டினையும் காட்ட அமைக்கப்பட்டது. ‘எங்குநிறைத்தே நீ’ என்பது சிவனையும், ‘எங்கு நிறைத் தேனீ’ என்பது வண்டினையும் குறிக்கிறது. (51)