Shivanandalahari – Verse 52
52 – கருணை மழைமேகம் காட்டும் அடி போற்றி!
विद्यासस्यफलोदयाय सुमनःसंसेव्यमिच्छाकृतिम् |
नृत्यद्भक्तमयूरमद्रिनिलयं चञ्चज्जटामण्डलं
शंभो वाञ्छति नीलकन्धर सदा त्वां मे मनश्चातकः ||५२ ||
க₄னவிபத்₃க்₃ரீஷ்மச்சி₂தா₃கர்மட₂ம்
வித்₃யாஸஸ்யப₂லோத₃யாய
ஸுமன:ஸம்ஸேவ்யமிச்சா₂க்ருதிம் |
ந்ருத்யத்₃ ப₄க்த மயூரமத்₃ரினிலயம்
சஞ்சஜ்ஜடாமண்ட₃லம்
ஶம்போ₄ வாஞ்ச₂தி நீலகந்த₄ர
ஸதா₃ த்வாம் மே மனஶ்சாதக: ||52 ||
பெருகுவமு தேமகிழப் – பெருமேகம்
கருவுவிதை யேபதிய பெருகுவிளை வேவளர
தரவுழவ ரேதொழுகத் – தருவேளே
அருவுமுரு வேவிரிய அடிமயிலென வேபணிய
அசலமுய ரேசடையி – லலங்காரா
பருகவுய ரேதொழுது பறவுசாதக மேமனது
பணியுமுனை யேபொழுது – கருமேகா
(52)
அருள் மழை பொழிபவரும் (மழை தருவதும்), தகிக்கின்ற வினைச்சூட்டைக் குறைக்கும் செயலுடையவரும் (கோடையினை நிறுத்தும் குளிரினைத் தருவதும்), நல்லறிவாகிய விதை உயர் நிலையாகிய பயனைத் தர (நட்ட விதைகள் நற்பயிராய் வளர்ந்து பயன்தர) சிந்தனையில் ஆழ உழுபவர்களுக்கு அருள்பவராக (வயலில் ஆழ உழுபவர்களுக்கு உதவுவதாக), எப்படி வேண்டுமானாலும் உருவெடுப்பவராக (பல உருவங்களாகத் திரிவதாக), அடிமையெனவே பக்தர்கள் எல்லாம் பணிய விளங்குபவராக (மயில்கள் அடி திருத்தி ஆடும்படி செய்வதாக), மலையில் விளங்குபவராக (மலைகளில் புரள்வதாக), அசையும் சடைகளை முடியாகக் கொண்டவராக (ஓடும் முகிற் திரளுடையதாக) விளங்கும் கரிய கழுத்தினை உடைய சிவபிரானே (விளங்கும் கருமேகமே), உயர்வான அறிவினை நாடும் எனது மனம், வானில் விழும் மழை நீரையே உண்ண விழையும் சாதகப் பறவையாய், நின்னையே எப்போதும் பணிந்து இருக்கின்றது.
குறிப்பு:
சிவமாகிய கருணை மேகம் அருள் மழை தரவும், அவ்வருள் மழையால், மனவயலில், மதியாகிய உழவனால் ஆழப் பதியப்பட்ட சிவஞானமாகிய விதை பெரும்பயனாக விளையவும், நற்காலம் காத்துக் கொண்டிருக்கிறது.
அப்பயன், உலகத்தில் உள்ள எல்லா நன்மைகளையும் விட உயர்வானது என்பதும், அதனை மட்டுமே வேண்டி உயர்ந்து இருத்தல் திறமானது என்பதும், மழை நீரை வேண்டி இருக்கும் சாதகப் பறவைக்கு உதாரணம் காட்டி விளக்கப்பட்டது. (52)