Shivanandalahari – Verse 54
54 – சந்திப் பொழுதாடும் சடையன் அடி போற்றி!
ध्वानो वारिदगर्जितं दिविषदां दृष्टिच्छटा चञ्चला |
भक्तानां परितोषबाष्पविततिर्वृष्टिर्मयूरी शिवा
यस्मिन्नुज्ज्वलताण्डवं विजयते तं नीलकण्ठं भजे ||५४ ||
ஹரிகராகா₄தப்ரபூ₄தானக
த்₄வானோ வாரித₃க₃ர்ஜிதம்
தி₃விஷதா₃ம் த்₃ருஷ்டிச்ச₂டா சஞ்சலா |
ப₄க்தானாம் பரிதோஷபா₃ஷ்பவிததிர்
வ்ருஷ்டிர்மயூரீ ஶிவா
யஸ்மின்னுஜ்ஜ்வல தாண்ட₃வம் விஜயதே
தம் நீலகண்ட₂ம் ப₄ஜே ||54 ||
விந்தகர முந்துமொலி – இடியாளும்
சந்தகவி உந்தமரர் வந்தியிடச் சிந்துவிழிப்
பந்தசர முந்துமொளி – கொடிபோலும்
வந்தடிய ரன்புவிழிச் சிந்துமழைச் சந்தநடம்
சொந்தமயி லாயுமையே – துணையாக
அந்தமுத லானசிவ நுந்தநட நூதனமெய்ச்
சந்ததமு சிந்தைவிட – கரிகண்டா
(54)
கடும் வெயில் முடிந்து இதம் தருகின்ற பொழுதாகவும், திருமாலின் கரத்தால் அடித்து எழுப்பிய பறை ஒலி போல, இடிகள் இடிக்க, வானத்தில் தேவர்கள் வியந்து காணும் விழிகளின் சுடர்கள், எழும் மின்னல் கொடியாகவும், அடிபணிந்து உருகும் அன்பர்களின் கண்ணீர் மழையாகவும் நடக்கின்ற மாலைப் பொழுதில், அன்னை உமையாகிய பெண்மயிலைக் கண்டு ஆனந்தக் கூத்தாடும், நீலகண்டமுடைய சிவபிரானாகிய மயிலைப் போற்றிப் பணிகிறேன்.
குறிப்பு:
ஆடும் மயிலாக நடமாடும் சிவனைப் பார்க்கின்றது இப்பாடல். ஆனந்த நடனம் ஆடும் வேளை, இனிய சுகம் தரும் பொன் மாலைப் பொழுது.
வெயில் என்பது கொடுவினை விளைவுக்கு ஒப்பு. அது முடியும் காலம், இதமான மாலையாகிய சுகவேளை. அதுவே சிவன் நடனமிடும் காலம். ஶிவானந்த3லஹரீ எனும் ஆனந்தம் பெருகும் நேரம். அதைக் காண, எங்கும் பரந்த திருமால் மத்தளம் கொட்டி வரவேற்கிறார். அதுவே வானத்து இடி. பார்க்கக் கூடி இருக்கும் வானவர்களின் கண்ணொளி, மின்னும் மின்னல். பார்த்து உருகும் பக்தர்களின் கண்ணீர், தண்மழை. அம்மாலை நேரத்தில் ஆடுகின்ற ஒரு ஆண் மயிலைப் பார்க்கும் பகவான் ஆதி சங்கரருக்கு, அம்மயில், அன்னை உமையாகிய பெண்மயிலைக் கண்டு களித்தாடும், பரசிவனாகத் தோன்றுகிறது. (54)