Shivanandalahari – Verse 59
59 – நோக்கும் மனத்தின் நுணுக்கன் அடி போற்றி!
कोकः कोकनदप्रियं प्रतिदिनं चन्द्रं चकोरस्तथा |
चेतो वाञ्छति मामकं पशुपते चिन्मार्गमृग्यं विभो
गौरीनाथ भवत्पदाब्जयुगलं कैवल्यसौख्यप्रदम् ||५९ ||
நீலாம்பு₃த₃ம் சாதக:
கோக: கோகனத₃ப்ரியம் ப்ரதிதி₃னம்
சந்த்₃ரம் சகோரஸ்ததா₂ |
சேதோ வாஞ்ச₂தி மாமகம் பஶுபதே
சின்மார்க₃ம்ருக்₃யம் விபோ₄
கௌ₃ரீனாத₂ ப₄வத்பதா₃ப்₃ஜயுக₃லம்
கைவல்யஸௌக்₂யப்ரத₃ம் ||59 ||
தருமழை சாதகம் – கதிராகப்
பூமலர்த் தீயொளி கோகனம் தின்னும்
புதுமதி சகோரம் – எனவாக
ஆமதித் தேபலர் அடைவுற ஒருபொருள்
அணுகுத லென்மனம் – அதுபோலே
நாமறைச் சூரண காரண கௌரிநந்
நாயக னடிதினம் – நயந்தேகும் (59)
அன்னப் பறவை தாமரை நிறைத்த ஏரியினையும், சாதகப் பறவை மழை மேகத்தையும், கோகனப் பறவை மலர்களை மலர்த்தும் சூரிய ஒளியையும், சகோரப் பறவை முழு நிலவின் ஒளியையும் நாடுகின்றன. அது போலவே ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பொருளுக்காக ஏங்குகிறார்கள். என் மனமும், அறிவினால் தேடி, முழு நிறைவான சுகத்தினை அருளும் கௌரி நாதனது மலரடிகளையே தினமும் நாடுகின்றது.
குறிப்பு:
எது தேவையோ அதனை நாடி இருப்பதே, ஒன்றை அடையும் குறிக்கோள் உடையவர்களது குணம். அது அன்னப்பறவை முதலான உயிரினங்களுக்கும் கூட இருக்கிறது.
நமது வாழ்வில் பெரும்பகுதி, தேவையற்றதைத் தேடி அலைவதிலும், தவறான வினாவிற்கு விடை தேடுவதிலுமே வீணாகிக் கொண்டிருக்கிறது. அதனால் எது சரியான தேவை என்பதை நாம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். அத்தேவைகளுக்குச் சரியான அறம் சார்ந்த அறிவு இருப்பின், பிறகு சரியான வழியில் நாம் அதை அடையச் செல்ல முடியும். இதனாலேயே அறத்தை முன்னிலைப்படுத்தி, அறம், பொருள், இன்பம் (தர்மம், அர்த்தம், காமம்) என மனிதர்களுக்கான குறிக்கோள்கள் (புருஷார்த்தம்) காட்டப்பட்டன.
எனினும், ஒரு நிலைக்குப் பின், இக்குறிக்கோள்கள் எல்லாம், இன்பத்தின் பொருட்டே இருப்பதால், எது நிரந்தரமான இன்பத்தைக் கொடுக்கும் என்று ஆயும் அவசியம் ஏற்படுகிறது. அப்படி ஆய்ந்து, அதன் பயனாக நான்காவது குறிக்கோளான வீடு பேறு அல்லது மோக்ஷம் என்று நமக்கு மறைகள் காட்டுகின்றன. அப்பேறினைப் பெறுவதற்குப் பர அறிவும், பரம்பொருளின் அருளும் தேவை. ஆகவேதான் ஞானியரது மனம், வீடு பேறு எனும் அத்தேவையினை மட்டுமே நாடி, அதனைத் தருகின்ற பரசிவனின் திருவடி மலர்களையே, தங்கள் மனதில் எப்போதும் தாங்குகிறது. இதனையே இப்பாடல் உணர்த்துகின்றது. (59)