Shivanandalahari – Verse 60

60 – ஏழையிடர் தீர்க்கும் எம்மான் அடி போற்றி!

रोधस्तोयहृतः श्रमेण पथिकश्छायां तरोर्वृष्टितो
भीतः स्वस्थगृहं गृहस्थमतिथिर्दीनः प्रभुं धार्मिकम् |
दीपं सन्तमसाकुलश्च शिखिनं शीतावृतस्त्वं तथा
चेतः सर्वभयापहं व्रज सुखं शंभोः पदाम्भोरुहम् ||६० ||
ரோத₄ஸ்தோயஹ்ருத: ஶ்ரமேண
பதி₂கஶ்சா₂யாம் தரோர்வ்ருஷ்டிதோ
பீ₄த: ஸ்வஸ்த₂க்₃ருஹம் க்₃ருஹஸ்த₂மதிதி₂ர்
தீ₃ன: ப்ரபு₄ம் தா₄ர்மிகம் |
தீ₃பம் ஸந்தமஸாகுலஶ்ச ஶிகி₂னம்
ஶீதாவ்ருதஸ்த்வம் ததா₂
சேத: ஸர்வப₄யாபஹம் வ்ரஜ ஸுக₂ம்
ஶம்போ₄: பதா₃ம்போ₄ருஹம் ||60 ||
வெள்ளம்விழ உள்ளம்கரைஎனத்
தள்ளும்களைப் புள்ளன்நிழலென
அள்ளும்மழை அல்லப்புகுமனை – தனியாகச்
செல்லன்வழி இல்லப்பயனுற
அல்லன்நிதி உள்ளன்தயவுற
கொள்ளும்இருள் தள்ளத்தகுவொளி – குளிராலே
துள்ளல்பெற மெல்லச்சுடுபொறி
கொள்ளத்தன துள்ளப்பெருவிழை
வுள்ளும்நிலை கொள்ளக்குறியென – அதுபோலே
அல்லல்விட தள்ளப்பயமறு
வல்லச்சுகங் கொள்ளப் பதமலர்
அள்ளித்தெளி உள்ளத்தினியே – சிவசம்போ
(60)

வெள்ளத்தில் வீழ்ந்தான் கரையையும், நடந்து களைத்தவன் நிழலையும், மழையில் நனைபவன் வீட்டினுள் புகுவதையும், வழிப்போக்கன் விருந்துண்ணலையும், வறியவன் வள்ளலையும், இருளில் இருப்பவன் ஒளி விளக்கையும், குளிரில் நடுங்குபவன் வெப்பத்தையும் எப்படி நாடுவானோ, அப்படியே, ஓ மனமே, அச்சம் தவிர்த்து, சுகத்தை அளிப்பதுமான, சம்புவாகிய சிவசக்தியினரின் பாதமலர்களை நாடுவாயாக.

குறிப்பு:
59-ம் பாடலில், சுகத்திற்காக நாம் தேடுகின்ற பண்பினைக் காட்டி, இறையடிகளே நிலையான சுகம் தரும், அதனால், அதையே, ஓ மனமே, நீ நாடுவாயாக, என்று காட்டிய பகவான் ஆதி சங்கரர் இப்பாடலிலே, அத்தகைய நாட்டம் எத்தனை ஆழமானதாக இருக்க வேண்டும் எனக் காட்ட, துன்பத்தை உதாரணமாகக் காட்டுகின்றார்.

ஒரு துன்பம் வரும்போது நமது மனதின் ஒரே குறிக்கோள் அத்துன்பத்திலிருந்து விடுதலை அடைவது தான். அதற்கு எடுத்துக்காட்டாக, வெள்ளம், களைப்பு, வறுமை, பசி, இருள், குளிர் எனக் காட்டி, இவை எல்லாவற்றையும் விடப் பெரிதான மரண பயம் மனிதர்களுக்கு மட்டுமே உள்ள குறை என்பதால், அக்குறையை நீக்க, பரசிவனின் பாதமலரினை, மிகவும் ஆழமான உறுதியுடன் நாட வேண்டும் என்று காட்டுகின்றார். ஒருமன முனைவு என்பது மனதினை ஒருமைப்படுத்தும் முயற்சி. மனதை ஆக்கிரமிக்கும் எந்த ஒரு குணமும், அக்குணத்தினால் நாடப்படும் பொருளின் மேல் குறியாய் இருக்கும். அக்குணம் நல்லதானாலும், தீயதானாலும் இது பொருந்தும். உதாரணமாக தன்னை நிந்திப்பதிலேயே ஒவ்வொரு பொழுதையும் செலவிட்ட சிசுபாலனை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அழித்து, தன்னுள் ஆட்கொண்டதன் காரணம், சிசுபாலனின் குறியான மனம். அதே போல, நட்பால் யுதிஷ்டிரனும், பயத்தால் கம்சனும், காதலால் கோபியர்களும் எனப் பலரும், மனதை ஒருமுகப்படுத்திப் பலனடைந்தனர்.

மனிதர்களுக்கே உரித்தான மரண பயம் எனும் குணத்தையே காரணம் காட்டி, அம்மரண பயத்தை நீக்க, மலர்ந்த சிவனுடைய திருவடிகளேயே நம்முடைய மனம் நாடட்டும் எனக் காட்டுகின்றது இப்பாடல். (60)

59 – நோக்கும் மனத்தின் நுணுக்கன் அடி போற்றி!

61 – பக்திவழி காட்டிப் பாவிப்பான் அடி போற்றி!

Share this Post

Leave a Comment