Shivanandalahari – Verse 65

65 – அடிபணியத் திருவருளும் அய்யன் அடி போற்றி!

वक्षस्ताडनशङ्कया विचलितो वैवस्वतो निर्जराः
कोटीरोज्ज्वलरत्नदीपकलिकानीराजनं कुर्वते |
दृष्ट्वा मुक्तिवधूस्तनोति निभृताश्लेषं भवानीपते
यच्चेतस्तव पादपद्मभजनं तस्येह किं दुर्लभम् ||६५ ||
வக்ஷஸ்தாட₃னஸ₂ங்கயா விசலிதோ
வைவஸ்வதோ நிர்ஜரா:
கோடீரோஜ்ஜ்வலரத்னதீ₃பகலிகானீராஜனம் குர்வதே |
த்₃ருஷ்ட்வா முக்திவதூ₄ஸ்தனோதி
நிப்₄ருதாஸ்₂லேஷம் ப₄வானீபதே
யச்சேதஸ்தவ பாத₃பத்₃மப₄ஜனம்
தஸ்யேஹ கிம் து₃ர்லப₄ம் || 65 ||
மாரிலுதைத் தானடியின் பாரமழுத் தாலெமனும்
ஓடியொளித் தானமரர் – முடிசூடும்
கூரிலுறைத் தானமணி ஆரமுயர்த் தாகுமொளிச்
சூடமணித் தீபமுய – ரடிபேண
நேரிலடி காணவுட னூறிபிற வாபதவி
கூடியணைத் தேமகிழும் – மலர்ப்பாதம்
யாருமன மேகுமவ ரேதுமடை வாரடையப்
பேறுமினி யேதுபசு – பதிநாதா
(65)

மார்பில் வலிய உதைத்ததால் எமன் ஓடி விடுகிறான். (அப்பாதங்களுக்கு) பணிகின்ற தேவர்களின் மகுடத்து மாணிக்கங்கள் கற்பூர தீப ஆராதனை செய்கின்றன. (அப்பாதங்களைக்) கண்டதும் முக்தியாகிய நங்கை இறுக அணைத்தின்பம் தருகிறாள். பவானியின் பதியே, எவனுடைய மனம் நினது திருவடித் தாமரையினைப் பணிந்து நாடுகிறதோ, அவனால் இங்கே அடைய முடியாத நற்பலன் ஏதும் இருக்கிறதா என்ன! (இல்லை).

குறிப்பு:
திருவடிகளே பெருந்துணை என்பது இப்பாடலின் கருத்து. அது மருள் அகற்றுவது. அதற்கு விளக்கமே, தம்மை அண்டிய மார்க்கண்டேயனுக்காக, அந்தகனாகிய எமனின் மார்பில் உதைத்து, மரண பயத்தை விரட்டிய திருவடிகள் என்று காட்டப்பட்டது. அது அருள் பெருக்குவது. அதனாலேயே எல்லாச் சுகங்களும் இருந்தும் தேவர்கள் சிவபிரான் திருவடிகளில் சிரம் பதித்துப் பணிகின்றனர். அது பேரின்பம் தருவது. நிலையான சுகமாகிய பேரானந்தம் இறைவனது திருவடிகளிலேயே கிடைக்கிறது. அப்படியானால், அத்திருவடிகளை மட்டுமே பணிந்து இருந்தால் போதுமே! எல்லாச் சுகங்களும் அடைந்து, எல்லாப் பயமும் நீங்கி, பெருநிலையை அடையலாமே! இப்படி வியக்கிறது இப்பாடல். (65)

64 – தாளுறையாய்க் கடிமனதைத் தந்தேன் அடி போற்றி!

66 – ஆட்டிவிளை யாடுகின்ற அத்தன் அடி போற்றி!

Share this Post

Leave a Comment