Shivanandalahari – Verse 68
68 – பக்தியெனும் பால்சுரந்த பசுபதியின் அடி போற்றி!
विमलभवत्पदगोष्ठमावसन्तीम् |
सदय पशुपते सुपुण्यपाकां
मम परिपालय भक्तिधेनुमेकाम् ||६८ ||
விமலப₄வத்பத₃கோ₃ஷ்ட₂மாவஸந்தீம் |
ஸத₃ய பஸு₂பதே ஸுபுண்யபாகாம்
மம பரிபாலய ப₄க்திதே₄னுமேகாம் || 68 ||
மித்துற மிகசுக – மிகையாகி
நட்டிரு வுறவடிக் கொட்டிலி லிருவள
நட்டுள மிடப்பெரு – நலமேகாண்
முற்றகு செயலருட் பற்றவு முயரிய
நிற்றவ மனமா – நிரையாகும்
பற்றுறு பரசிவ முற்றருட் பசுவினைப்
பசுபதி யேயருள் – பரிபாலா
(68)
அமிழ்திலும் அமிழ்தான அளவற்ற சுகத்தைத் தொடர்ந்து விளைவிப்பதும், தூய்மையான உமது திருவடிகளாகிய கொட்டிலிலே (எப்போதும்) மகிழ்ச்சியுடன் இருப்பதும், முன் செய்த நல்வினையின் பயனாக விளைந்ததுமான என்னுடைய பக்தியாகிய பசுவினை, கருணை மிக்கவரே, உயிர்களின் தலைவரே, காப்பீராக.
குறிப்பு:
பசுவானவன் ஜீவன் என்பது ஒரு ஒப்புமை. பசுக்களின் தலைவன் எனக் காட்டும் பசுபதியே சிவம்.
இப்பாடலிலே பசுவானது, பக்திக்கு ஒப்புமை கூறப்பட்டது. அமைதியும், எப்போதும் ஒன்றையே அசை போட்டுக் கொண்டிருப்பதும், இனிய பாலினைத் தருவதுமான பசுவினைப் போன்றதே பக்தி. அது இறைவனது திருவடிகள் எனும் கொட்டிலே கட்டப்பட வேண்டும். எப்போதும் சிவத்தியானத்தை அசை போட்டுக் கொண்டிருக்க வேண்டும். அதனால், பரசிவ சுகப்பெரு வெள்ளமாகப் பாலமுது சுரக்கும்.
அத்தகு பக்தியாகிய பசு நமக்குள் இருக்கின்றது என்றால், அது நாம் முன் செய்த நல்வினையின் பலன். அப்பசுவாகிய பக்தி இப்பிறவியில் நன்கு வளர்க்கப்பட வேண்டும் என்பதால், அதற்கான வளத்தையும், திடத்தையும் இறைவனிடம் கேட்கிறது இப்பாடல். (68)