Shivanandalahari – Verse 69
69 – பாவக் குறை அழிக்கும் பரசிவனின் அடி போற்றி!
कुटिलचरत्वं च नास्ति मयि देव |
अस्ति यदि राजमौले
भवदाभरणस्य नास्मि किं पात्रम् ||६९ ||
குடிலசரத்வம் ச நாஸ்தி மயி தே₃வ |
அஸ்தி யதி₃ ராஜமௌலே
ப₄வதா₃ப₄ரணஸ்ய நாஸ்மி கிம் பாத்ரம் || 69 ||
சிறுகதிய சுத்தமெனச் – சிறிதாகிக்
குறுகவடி வுற்றபிறை உருவடிவ முற்றகுறை
பெறுகறைக ளற்றனெனைப் – பெருமானே
ஒருசமயம் மற்றநில வுருவமையப் பெற்றகுறை
இருகவுர முற்றெனினில் – இதுபோழ்து
திருமதியுஞ் சித்தமென சிரமடையும் புத்தணியாய்த்
திறமதிர நித்திலமாத் – திகழேனோ
(69)
மடமை கொண்டதும், மிருகத்திற்கு ஒப்பானதும், பல கறைகளுடன் விளங்குவதும், குறுகியும், வளைந்தும் இருக்கும் தன்மையுமான இக்குறைகள் எல்லாம் என்னிடத்தில் இல்லை. ஒருவேளை அப்படிக் குறைகளுடன் இருந்திருந்தால், பிறை சூடிய பெருமானே, உம்முடைய அணிகலனாக, ஏற்றுக் கொள்ளப்பட யானும் தகுதி உடையவனாக ஆகி விடுவேனே!
குறிப்பு:
உயர்வு நவிற்சி அணி போல் பொருள் கொள்ள வேண்டிய பாடல் இது. கவிஞர்களால் நிலவுக்குப் பெண்மையும், அதை யொட்டிய மடமையும் ஒப்பாகக் காட்டப்படும். நிலவு ஒளியற்றது என்பதால் மடமை கொண்டது என்றும் ஆகிறது. நிலவிலே கறைகள் தெரிகின்றன. வளைந்தும் தேய்வதுமானது நிலவு. அத்தகைய குறைகளுடைய நிலவைத்தான் சிவசக்தியினர் தமது தலையிலே அணிந்துள்ளனர்.
பக்தன் அறிவுடன் மடமை இல்லாமலும், தர்ம வழியில் நடந்து வருவதால் குறைகள் இல்லாமலும், நேர்மையினால் நிமிர்ந்து உலகத்தில் வாழ்ந்து வருவதால், அவனிடம் நிலவைப் போன்ற குறைகள் இல்லை என எண்ணியே, சிவபிரான், பக்தனையும் அணிகலனாகச் சேர்த்துக் கொள்ள வில்லையோ என பகவான் ஆதி சங்கரர் இப்பாடலில் வியக்கிறார். அறிவு, அறியாமை (வித்தை, அவித்தை) என்பன எவை? உபநிடதங்கள் காட்டும் பர அறிவினை ஒட்டிப் பார்த்தால், தர்மமும், தர்மப்படி வாழும் நெறி அறிவும் கூட ஒரு பருவத்தில், ‘அவித்தை’ அல்லது மடமை என்று ஆகிவிடுகிறது. அதை உணர்வதால், அறவோனும் தமக்குள் மடமை இருப்பதை உணர்வான்.
உடல் என்பது இருந்தாலே அது கறைபடிவதாகிறது. வல்லுடல், மெல்லுடல், காரணவுடல் மூன்றும் பெற்றதால், நமக்கும் கறை இருக்கிறது. மேற்கூறிய மடமையாலும், கறைகளாலும், நாமும் வளைந்தும், தேய்ந்தும் தான் இருக்கிறோம். அப்படி நாம் உணர்ந்து விட்டால், நிலவுக்கு நாமும் ஒப்பு அல்லவா? அதன் அடிப்படையில் நாம் முறையிட்டால், இறைவனின் திருவடியே கதி என்று இருந்து விட்டால், குறைகளுடைய நிலவாக நம்மையும் ஏற்று, அணிந்து கொள்ள வேண்டியது இறைவனின் கடன் அல்லவா! இப்படித்தான் இப்பாடலின் உட்கரு இருப்பதாகத் தோன்றுகிறது. மேலும், பகவான் ஆதி சங்கரர் பக்தனுக்கு இருப்பதாகக் காட்டும் நற்குணங்களை எல்லாம் நாம் அடைந்து விட்டோமா என்ன! இக்கேள்வியும் மனதில் தைக்கின்றது. (69)