Shivanandalahari – Verse 75

75 – புரவிமனம் ஓட்டிப் புகல்தருவான் அடி போற்றி!

कल्याणिनम् सरसचित्रगतिं सवेगं
सर्वेङ्गितज्ञमनघं ध्रुवलक्षणाढ्यम् |
चेतस्तुरङ्गमधिरुह्य चर स्मरारे
नेतः समस्तजगतां वृषभाधिरूढ ||७५ ||
கல்யாணினம் ஸரஸசித்ரக₃திம் ஸவேக₃ம்
ஸர்வேங்கி₃தஜ்ஞமனக₄ம் த்₄ருவலக்ஷணாட்₄யம் |
சேதஸ்துரங்க₃மதி₄ருஹ்ய சர ஸ்மராரே
நேத: ஸமஸ்தஜக₃தாம் வ்ருஷபா₄தி₄ரூட₄ || 75 ||
நலவடிவம் அசையும் நடையடிகள் அமையும்
அகமகிழ விரையும் – அதிவேகம்
களமறியும் குறியும் தடமறியும் நிறையும்
அறிவதிய முகிழும் – அடையாளம்
மனமதியம் புரவி அதிலுலவி அருளி
மதனுடைய உருவும் – மறைத்தாளும்
பவநிதியம் அருளும் பரசிவனே வருக
பசுபதியே இடபம் – அமர்வோனே
(75)

நற்சுக வடிவாயும், பலவிதமாக நல்ல நடைகள் காட்டி அமைதி அளிப்பதாகவும், அதி விரைவாகச் செல்வதாகவும், அனைத்து நோக்கங்களையும் அறிந்து அதற்கேற்பச் செயல்படுவதாயும், எவ்விதக் குறைகளற்றதாயும், நல்ல குணத்திற்கான அடையாளங்களை எல்லாம் கொண்டதாயும் விளங்கும் எனது மனமாகிய புரவியில் ஏறி, காமனை வென்ற காலனே, நாதனே, நீவீர், பயணம் செய்வீராக.

குறிப்பு:
நேர்மை அடைந்த மனம், இப்பாடலில், ஒரு குதிரையாகக் காட்டப்படுகிறது. நற்குணங்களும், தன்னை ஆள்பவனுக்குக் கட்டுப்பட்டதாயும், குறிப்பறிந்து நடப்பதாயும், நற்பண்புகளுடைய அடையாளங்களுடன் கூடியதாகவும் அது விளங்குகிறதாம்.
அப்படிப்பட்ட மனம் நமக்கு அமைந்து விட்டால், அதனைச் செலுத்த நாம் பரம்பொருளாகிய ஆன்மாவையே அதில் அமரச் செய்ய வேண்டும். அதாவது, மனம் இறைச் சிந்தனையிலேயே இருக்க வேண்டும்.
ஏன்?

ஆள்வான் வலுவற்றவனாகில், மனப்புரவி மனக்குரங்காக மாறி அங்கும் இங்கும் ஓடி விடும். அதனால், நாம், மனக்குதிரையில் இறைவனை அமரச் செய்து விட்டால், அப்புறம் எப்போதும் நமக்கு நல்ல நிம்மதிதானே!
இதனையே இப்பாடல் வலியுறுத்துகின்றது. (75)

74 – மனப்பேழை வனப்பேற மாற்றுவான் அடி போற்றி!

76 – பூமழையாய்த் தேன்மனதில் புலர்வான் அடி போற்றி!

Share this Post

Leave a Comment