Shivanandalahari – Verse 76

76 – பூமழையாய்த் தேன்மனதில் புலர்வான் அடி போற்றி!

भक्तिर्महेशपदपुष्करमावसन्ती
कादम्बिनीव कुरुते परितोषवर्षम् |
संपूरितो भवति यस्य मनस्त्तटाक-
स्तज्जन्मसस्यमखिलं सफलं च नाऽन्यत् ||७६ ||
ப₄க்திர்மஹேஸ₂பத₃புஷ்கரமாவஸந்தீ
காத₃ம்பி₃னீவ குருதே பரிதோஷவர்ஷம் |
ஸம்பூரிதோ ப₄வதி யஸ்ய மனஸ்தடாக
ஸ்தஜ்ஜன்மஸஸ்யமகி₂லம் ஸப₂லம் ச நா(அ)ந்யத் || 76 ||
பத்திபர சக்திசிவ சித்தவடி வொத்தவெளி
வித்தமதி லுத்தமுகில் – அதுவாகி
தத்துவமு மித்துசுக மொத்தமறி வித்துமழை
முத்துபொழி வித்தசெயல் – அதனாலே
எத்தகுள மொத்தமுள முத்தபரி சுத்தமடை
வித்துமதி யத்துவயல் – பயிராக
அத்தபிற வித்துயரு மத்தவுய ரத்தடையும்
மத்தமதி யத்தடைதல் – முடியாதே
(76)

சிவசக்தியாகிய மஹேஸ்வரனின் பாதங்களாகிய பரவெளியில் நிலவுகின்ற பக்தியாகிய மேகம், கருணை சுமந்த இன்ப மழையினைப் பொழிகின்றது. அதனால், எவனுடைய உள்ளமாகிய குளம், பரிசுத்தமான (அறிவாகிய) நீரால் நிரப்பப் பட்டிருக்கிறதோ, அவனுடைய பிறவியாகிய பயிர் (துயரின்றி வளர்ந்து உயர்ந்து) பயனை அளிக்கிறது. அவ்வாறு (உள்ளம் நிறைந்தவனாக) இல்லாதவனுக்கு, அப்படி (பயனேதும்) அமைவதில்லை.

குறிப்பு:
மனம் இறைவனது திருவடிகளை நினைத்திருக்கின்ற பக்தியால் நிரப்பப் பட்டிருந்தால், அதன் விளைவாக, செய்யும் செயல்கள் எல்லாம் இறைவனின் பொருட்டாகவே செய்கின்ற கர்ம யோகப் பலனும், இறைத் தியானம் ஆகிய பக்தியோகப் பலனும் நமக்குக் கிட்டும்.
இதன் முக்கியப் பயன், நற்குண மாற்றங்கள் ஆகும். நற்குண மாற்றங்களின் பயன், சித்த சுத்தி எனும் தெளிந்த அறிவு, திட புத்தி எனும் உறுதியான மனம். இவை இரண்டுமே ஞானப் பாதைக்கு நம்மை கூட்டிச் செல்லும் நற்தகுதிகள். அதனால், பிறவிப் பயனாகிய, முக்தி அல்லது வீடு பேறு அடைவது இயல்பாகிவிடும்.

இதுவே இப்பாடலின் உட்கரு. (76)

75 – புரவிமனம் ஓட்டிப் புகல்தருவான் அடி போற்றி!

77 – நாயகியாய் மனமேற்ற நாதன் அடி போற்றி!

Share this Post

Leave a Comment