Shivanandalahari – Verse 79

79 – நமனார் உதைத்தருளும் நல்லான் அடி போற்றி!

नित्यं योगिमनः सरोजदलसञ्चारक्षमस्त्वत्क्रमः
शंभो तेन कथं कठोरयमराड्वक्षःकवाटक्षतिः |
अत्यन्तं मृदुलं त्वदङ्घ्रियुगलं हा मे मनश्चिन्तय-
त्येतल्लोचनगोचरं कुरु विभो हस्तेन संवाहये ||७९|
நித்யம் யோகி₃மன: ஸரோஜத₃ல
ஸஞ்சாரக்ஷமஸ்த்வத்க்ரம:
ஶம்போ₄ தேன கத₂ம் கடோ₂ரயமராட்₃
வக்ஷ:கவாடக்ஷதி: |
அத்யந்தம் ம்ருது₃லம் த்வத₃ங்க்₄ரியுக₃லம்
ஹா மே மனஶ்சிந்தய-
த்யேதல்லோசனகோ₃சரம் குரு விபோ₄
ஹஸ்தேன ஸம்வாஹயே ||79 ||
சிந்தைத்திற னுந்தத்தேவடி
யுந்தத்தவ ரந்தப்பூவிதழ்
புந்துத்தித முந்தும்பூவடி – அதனாலே
விந்தைத்திற மந்தர்க்கேவடு
நொந்துப்பட ருந்தும்மாரிடர்
அந்தக்கத வுந்துத்தூளிட – அறியேனே
எந்தைப்பத மோமிதமானது
சிந்திப்பத னாலவையானது
வந்தித்தொழ வேவிழிவாவெனின் – வருவாயோ
அந்தப்பதஞ் சிந்தப்போய்வலி
சந்தப்புது விந்தப்பூமழை
இந்தக்கை பந்தத்தாலிட – இறையோனே
(79)

எப்போதும் (தியானம் செய்கின்ற) யோகியரின் மனமாகிய மலரில் இருக்கும் உனது (மென்மையான) கால்கள், எப்படி வலியதும், பெரிய அரண் போன்றதுமான எமனுடைய மார்பிலே வடுவினை ஏற்படுத்தின! ஹா, உமது திருவடிகள் இரண்டும் மிகவும் மென்மையானதே என என் மனம் கவலைப் படுகிறதே! இறைவா, அக்கால்களை என் கண் முன்னே காட்டுக. எனது கைகளினால் பிடித்து விடுகிறேன்.

குறிப்பு:
பக்தர்களின் இதயத் தாமரையில் பதிக்கின்ற மலரினைப் போன்ற மென்மையான நினது கால்கள் எப்படி மார்க்கண்டேயனுக்காக, எமனின் வலுவான மார்பில் உதைத்து, அதனால் அவனுடைய மார்பில் வடுவினை ஏற்படுத்தின?

அப்படிச் செய்ததால், பரம்பொருளின் கால்கள் வலித்திருக்குமே எனும் மிக உயர்ந்த அன்பினால், பகவான் ஆதி சங்கரர், அந்தத் திருவடிகளைத் தன் முன்னால் காட்டினால், மெதுவாகப் பிடித்து விட்டு, வலி நீக்குவதாக வேண்டுகின்றார்.

இறைவனுக்கு வலி என்பது ஏது! மரண பயம் நீக்க, அந்தகனின் கால்களில் உதைத்த கால்களும், பக்தர்களின் இதயத்தில் நடனமாடும் கால்களும் வலிவும், இதமும் ஒரு சேரப் பெற்ற பேரடிகள் அல்லவோ!

ஆனாலும், பக்தனுக்கு எப்படியேனும் சிவபெருமானின் திருவடிகளைக் காண வேண்டும், கண்டால் மட்டும் போதாது, அதனைக் கட்டிப் பிடித்து இறுக்கி அணைக்க வேண்டும் என்ற பேரவா இருக்கிறது. அதனாலேதான், ‘வா, யானுனக்கு திருவடிப்பணி புரிகிறேன்’ என்று பக்தன் அழைப்பதாக இப்பாடலில் காட்டப்பட்டது. (79)

78 – புதுமணையாள் என்மனதுப் போகன் அடி போற்றி!

80 – கூடமாம் கல்மனதுள் கூத்திடுவான் அடி போற்றி!

Share this Post

Leave a Comment