Shivanandalahari – Verse 81
81– முற்றுணர்வார் உள்ளத்தின் முக்திப்பயன் போற்றி!
कंचिद्ध्यानसमाधिभिश्च नतिभिः कंचित्कथाकर्णनैः |
कंचित् कंचिदवेक्षनैश्च नुतिभिः कंचिद्दशामीदृशीं
यः प्राप्नोति मुदा त्वदर्पितमना जीवन् स मुक्तः खलु ||८१ ||
பாதா₃ரவிந்தா₃ர்சனை:
கஞ்சித்₃த்₄யானஸமாதி₄பி₄ஸ்₂ச நதிபி₄:
கஞ்சித்கதா₂கர்ணனை: |
கஞ்சித் கஞ்சித₃வேக்ஷனைஸ்₂ச நுதிபி₄:
கஞ்சித்₃த₃ஸா₂மீத்₃ருஸீ₂ம்
ய: ப்ராப்னோதி முதா₃ த்வத₃ர்பிதமனா
ஜீவன் ஸ முக்த: க₂லு || 81 ||
கொஞ்சிப் பூசனை – உமையீசா
கொஞ்சத் தியானமு மெஞ்சத் தூரியங்
கொஞ்சச் சேவித – சிவகாதை
கொஞ்சக் காதுற கொஞ்சத் தேயுரு
கொஞ்சப் பாமறை – மகிழ்வாலே
நெஞ்சத் தாலெவன் உஞ்சத் தாவுவன்
செஞ்சொற் ஜீவித – சிவமுக்தன்
(8)
உமையீசா, கொஞ்ச காலம் உமது திருவடி மலர்களைச் சரணடைந்து தொழுதல், கொஞ்சம் தியானம், கொஞ்சம் சமாதி நிலை அனுபவம், கொஞ்சம் துதி வந்தனம், கொஞ்சம் சிவ புராண மகிமைகளைக் கேட்டல், கொஞ்சம் உருவ தரிசனம் செய்தல், கொஞ்சம் பாடலிசைத்தல், கொஞ்சம் மறைமொழி நினைத்தல், மேலும் மகிழ்ச்சியுடன் தமது உள்ளத்தை முற்றுமாக உமக்கு அர்ப்பணித்தல் ஆகிய நிலைகளை அடைந்தவன் எவனோ, அவன் ஜீவன் முக்தன் எனும் உடலாலிருக்கும் போதே உயர்முக்தி பெற்றவனாக ஆகிறான்.
குறிப்பு:
ஜீவன் முக்தி என்பது, உலகில் உடலுடன் இருந்து வாழும் போதே, உண்மை உணர்ந்த காரணத்தினால், ஒட்டுதல் அறிந்தும் ஒட்டாதிருக்கும் திட்டம் நடத்தி, வெறும் சாட்சியாகவே இருந்து வரும் ஞானியரின் நிலை என்பது ஆகும். அத்தகு ஜீவன் முக்தர்கள், உடலிருக்கிறது எனும் எண்ணமற்று ஒரிடத்தில் நிலைத்தோ அல்லது எங்கும் திரிந்தோ, பிராரப்த கரும வினையின் விளைவுகளை (அதாவது முன்செய்த கருமத்தின் பயன்) எல்லாம் உடலால் முடித்து விட்டு, அவை முடிந்த கணமே, உடலாகிய கூட்டினை உதறித் தள்ளிவிட்டு, பரவெளியாகிய சிவமயத்துள் ஒன்றிவிடுவர். அதற்கு விதேஹ முக்தி என்பது பெயர்.
இப்பாடலில், பகவான் ஆதி சங்கரர், முற்றிய பக்தனின் நிலையைக் காட்டுகின்றார். அப்பக்தன், ஒரு சமயம் துதி, ஒரு சமயம் பாடலிசை, ஒரு சமயம் பூசை, ஒரு சமயம் தவம் எனப் பல வகையிலும் தனது நேரத்தைச் செலவிட்டாலும், தன் உள்ளத்தை முற்றுமாக, எல்லாச் சமயத்திலும் பரம்பொருளிடம் நிலையாக வைத்து (அதாவது ஆத்ம சிந்தனையிலேயே இருந்து) அந்நிலையினால் ஜீவன் முக்தன் எனும் உயர் பதவியை அடைகிறான். இதுவே இப்பாடலின் உட்கரு. (81)