Shivanandalahari – Verse 85
85 – துதியறியா என்துன்பம் துடைப்பான் அடி போற்றி!
न च वनमृगयायां नैव लुब्धः प्रवीणः |
अशनकुसुमभूषावस्त्रमुख्यां सपर्यां
कथय कथमहं ते कल्पयानीन्दुमौले ||८५ ||
ந ச வன ம்ரு2க3யாயாம் நைவ லுப்3த4: ப்ரவீண: |
அஸ1ன குஸும பூ4ஷா வஸ்த்ர முக்2யாம் ஸபர்யாம்
கத2ய கத2மஹம் தே கல்பயானீந்து3-மௌலே ||85 ||
பீடுஎது வுந்தெரியேன் – பிறகோடி
சூழுவன மும்மிருக வேடுவன னிந்திறனும்
ஈடுபட வுந்தெளியேன் – அதனாலே
சோறுமல ரும்பதிய ஊறுநகை யுந்துகிலும்
தேருபய முந்தரவும் – தெரியாமல்
சீருடைய நேசிவனே கீறுமதி யேசிரனே
ஏதுநய மேதுதுதி – எனக்கூறு?
(85)
யான் கடலைக் கடையவோ, பாதாள உலகத்தைக் குடையவோ திறனற்றவன். வனத்தில் விலங்குகளை வேட்டையாடும் திறனும் அற்றவன். எனவே, உணவு, மலர், நகைகள், ஆடைகள் எனப் படைத்து, நினது தொழுகையை எப்படிச் செய்யக் கூடியவனாவேன், ஓ, பிறை சூடிய பெருமானே, கூறுங்கள்.
குறிப்பு:
பாற்கடலைக் கடைந்தெடுத்த விடம் உணவாகவும், அதிலெழுந்த தண்ணிலவு மலராகவும், கீழுலகைக் குடைந்தெடுத்த அரவங்கள் அணிகலனாகவும், வேட்டையாடிப் பெற்ற யானை, புலி ஆகியவற்றின் தோல்கள் ஆடைகளாகவும் சிவபெருமான் ஏற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன. அத்தகைய பொருட்களை நாமும் அர்ப்பணமாகப் படைத்தே இறைவனைத் தொழ வேண்டும் என்றால், கடலைக் கடைவதும், உலகைக் குடைவதும், வேட்டையாடுவதுமாகிய பல திறமைகள் வேண்டுமே!
இவை இல்லாத பக்தனுக்கு என்ன வழி?
திறைகளாகிய ஆசை அலைகள் பரவிய மனமாகிய பெருங்கடலைக் கடைந்து, அதிலெழும் தெளிவான அறிவே மதியாகிய மலராகவும், அதனால் அவிழும் ‘நான்’ எனும் அகங்காரம் அழிக்கும் உணர்வையே ஆலகால விடமான உணவாகவும், தீயாசை, கோபம், மயக்கம் முதலான குணங்களை மிருகங்களாக வேட்டையாடி அதன் அடையாளங்களையே ஆடைகளாகவும் படைத்து, இப்படி எல்லாம், தன்னையே ஒரு தவ நிலமாக, தவப் பயனாக மாற்றி, பரசிவனைப் பணிவதற்கான தகுதியை நாம் பெற முடியுமே!
அதற்கான கருணையினைத்தான் இறைவனிடம் வைத்த கேள்வியின் மூலம் பகவான் ஆதி சங்கரர் சுட்டிக் காட்டுகின்றார் எனத் தோன்றுகிறது. (85)