Shivanandalahari – Verse 86
86 – துதித்துணர அருள்பரவும் தூயன் அடி போற்றி!
पक्षित्वं न च वा किटित्वमपि न प्राप्तं मया दुर्लभम् |
जाने मस्तकमङ्घ्रिपल्लवमुमाजाने न तेऽहं विभो
न ज्ञातं हि पितामहेन हरिणा तत्त्वेन तद्रूपिणा ||८६ ||
பூஜாம் கத₂ம் குர்மஹே
பக்ஷித்வம் ந ச வா கிடித்வமபி ந
ப்ராப்தம் மயா து₃ர்லப₄ம் |
ஜானே மஸ்தகமங்க்₄ரிபல்லவமுமாஜானே
ந தே(அ)ஹம் விபோ₄
ந ஜ்ஞாதம் ஹி பிதாமஹேன ஹரிணா
தத்த்வேன தத்₃ரூபிணா || 86 ||
பூசிப்பது தானறியாமையும்
பூணத்தடை யாயவைமூடிடும் – மடமாக
ஆசைப்பற வாயயனாகியும்
ஆயத்தவ ராஹமுமாமென
ஆகத்திற னானவைசூடிடல் – அறியேனே
கூசப்பெரி தாமொளித்தேசிர
கேசத்தரு காமறியாதென
தாசத்தளி ராம்பதமேமலர் – தகையேனே
வாசப்பதி வாலயன்மாலனும்
வேஷப்பிர காரறியாமையும்
பேசப்பெரி தாமுமைநாயகா – பெருமானே!
(86)
பூசை செய்வதற்கான பொருட்கள் எல்லாம் (எப்படியோ) சேர்க்கப்பட்டு இருக்கின்றன. (எனினும்) பூசையை எப்படிச் செய்வது! பறவையினது திறனும் என்னால் அடையப்படவில்லை. பன்றியின் திறனும் அடையப்படவில்லை. (அதனால்) உம்முடைய (ஒளி பொருந்திய) முடியையோ, மென்மையான திருவடிகளையோ நான் உணர்வதும் மிகவும் அரிது. (பறவை, பன்றி) அப்படியான உருவங்களை எடுத்துக் கொண்ட எந்தையாலும் (பிரமனாலும்), திருமாலாலும் கூட (உமது முடியும், அடியும்) உணரப்படவில்லையே!
குறிப்பு:
85-ம் பாடலில் பூசைக்கான பொருட்களை அடைவது எப்படி எனக் கவலை கொண்ட பக்தன், இப்பாடலில், பூசைக்கான எல்லா ஏற்பாடுகளும் செய்து இருப்பினும், உண்மையான பூசையின் பலனான, இறைவனின் திருவுருவை உணரும் தகுதியை எப்படி அடைவது என வியப்பதாக, பகவான் ஆதி சங்கரர் கேட்கிறார்.
அயனும், அரியும் கண்ணால் பார்க்க இயலாத பரவொளியாக எழுந்த பரசிவத்தினை அளப்போம் எனத் துணிவு கொண்டு, அயன் அன்னமாக வானோக்கிப் பறந்தார் என்றும், அரி பன்றியாகக் கீழ் நோக்கித் துளைத்தார் என்றும், எப்படிச் சென்றும், பரம்பொருளின் முடி, அடி எதுவென இருவராலும் காண முடியாது போயிற்று என்றும் புராணங்கள் கூறுகின்றன. புலனறிவால், மனதால், மதி ஆய்வால் அடைய முடியாதது பரம்பொருளாகிய ஆன்மா. அது அடையப்படுவதில்லை. ஏனெனில் அது ஒன்றுதான் ஏற்கனவே அடைந்ததாக எப்போதும் இருப்பது. அது தானாகவே உணரப்பட வேண்டியது. தாம் வேறு, பரம்பொருள் வேறு என வேறுபடுத்துகின்ற வாசனையாகிய வினைப்பயனின் பதிப்பால் தான், அவ்வுண்மை உணரப்பட முடியாமல் இருக்கிறது. இதனை உணர்த்துவதே அயனும், அரியும் பரம்பொருளை அளக்க முயன்றதாகக் காட்டப்பட்ட புராணம். இதைக் காட்டவே. தமிழிலே ‘வாசப் பதிவால் அயனும் மாலனும்’ என்று மிகைப்படுத்திப் பொருள் அழுத்தம் தரப்பட்டது. (86)