Shivanandalahari – Verse 88

88 – தன்னுள்ளே தனையுணரத் தருவான் அடி போற்றி!

यदा कृतांभोनिधिसेतुबन्धनः
करस्थलाधःकृतपर्वताधिपः |
भवानि ते लङ्घितपद्मसंभवः
तदा शिवार्चास्तवभावनक्षमः ||८८ ||
யதா3 க்ரு2தாம்போ4-நிதி4 ஸேது-ப3ந்த4ன:
கரஸ்த2 லாத4: க்ரு2த பர்வதாதி4ப: |
ப4வானி தே லங்கி4த பத்3ம-ஸம்ப4வ:
ததா3 ஸி1வார்சாஸ்தவ பா4வன-க்ஷம: ||88 ||
தத்துகடல் யுத்தமுந்தாவிட
கட்டுமணைத் திட்டமுந்தேறிட
வித்தனரு ளுத்தமராமென – அதனாலே
குத்துமலை மெத்தனமாகிட
வித்துகரம் அத்தரையாகிட
அத்தனகச் சித்தியராமென – அதுபோலே
பத்துமமும் நித்திலமாகிய
உத்தமுனுட் கப்பியநாபியில்
அத்தனயன் முத்திறமீறிட – அதுபோது
நத்துவமும் நற்றுதிஓதிடச்
சத்துவமும் சந்நிதிமீதுற
சிற்பரமுஞ் சித்தமிழ்தாகிட – சிவனேசா
(88)

எப்போது கடலில் அணை கட்டியவராகவும் (ராமபிரான்), கையினாலேயே மலையினை அழுத்தும் செயலைச் செய்தவராகவும் (அகத்தியர்), தாமரை உதரத்தின் நாபியில் உதித்தவரின் (பிரம்மா) திறமைகளையும் தாண்டியவராகவும் யான் ஆவேனோ, அப்போதுதான், சிவனே, உங்களுக்கு ஏற்ற பூசனை, துதி, தியானம் ஆகியன படைக்கும் திறமை உள்ளவனாக ஆவேன்.

குறிப்பு:
பக்தனுக்கு மீண்டும் தன் பக்தியின் முழுமையில் ஐயம் வருகின்றது. கடலுக்கு அணை கட்டிய ஸ்ரீ ராமன், கடற்கரை மண்ணிலேயே பரசிவப் பொருளை லிங்கமாக அமைத்து, தொழுது அதனால் பெரும் பேறு பெற்றார்.

சித்தராகிய அகத்தியர், தமது தவ வலிமையினால், கைகளாலேயே தடையாக நின்ற விந்திய மலையினைத் தரையில் அழுத்தினார். அவர்களைப் போலவும், பிறகு பரம்பொருளின் முடியைக் காண முயன்ற பிரம்ம தேவனை விடவும் திறமை அதிகமாக இருந்தால்தான், தம்மாலும் சரியான முறையில் பரசிவனை வழிபட முடியும் என்று பக்தன் கவலை கொள்வதாக இப்பாடலில் பகவான் ஆதி சங்கரர் காட்டுகின்றார்.

பிறவிப் பெருங்கடலாகிய பேராழியைக் கடக்கும் அணை, தர்மம் இயக்கிய வாழ்க்கை வழிமுறைகளும், ஞானம் உணர்த்திடும் நிலைப்பாடும் ஆகும். இதனையே ஸ்ரீ ராமபிரான் பின்பற்றி, மனிதரும் புனிதராகலாம் எனும் பெரிய உண்மையைக் காட்டினார். அவ்வாறான அறவழியிலே நடக்கும் போது, ஆசைகளும், அதனை ஒட்டிய குண வேற்றுமைகளும், நம்மைத் தடுக்கும் மலையாக இருக்கின்றன.

அத்தடைகளை உடைத்தெறிய விவேகம், வைராக்யம் (அதாவது நல்லன அறியும் தெளிவு, அல்லன விலக்கும் துணிவு) இவ்விரண்டும் இரண்டு கரங்களாக இருக்க வேண்டும். இதுவே, மலையினை அகத்தியர் கரங்களினால் அழுத்திக் களைந்த கதையின் கரு.

தர்மமும் ஞானமும் இயைந்த போதிலும், ‘தான்’ எனும் அகந்தையானது நம்மை விழுங்கிவிடக் காத்திருக்கும் பெருவிடம். அந்த ‘நான்’ எனும் அகந்தை ஒழியும் வரை, ஆன்மாவாகிய பரம்பொருளின் ஒளியினை உணர முடியாது. இதுவே முடியைத் தேடிச் சென்று, முடிவில் அடையாது தளர்ந்த பிரம்ம தேவனின் கதையில் காட்டப்படும் உண்மை.

எனவேதான், பகவான் ஆதிசங்கரர், ராமன், அகத்தியன், பிரமன் என மூன்று உதாரணங்களைக் காட்டியுள்ளார் எனத் தோன்றுகின்றது. (88)

87 – திருவடியைக் காட்டித் தீர்விப்பான் அடி போற்றி!

89 – தக்கார் அன்புக்குள் தழைக்கும் அடி போற்றி!

Share this Post

Leave a Comment