Shivanandalahari – Verse 89

89 – தக்கார் அன்புக்குள் தழைக்கும் அடி போற்றி!

नतिभिर्नुतिभिस्त्वमीशपूजा-
विधिभिर्ध्यानसमाधिभिर्न तुष्टः |
धनुषा मुसलेन चाश्मभिर्वा
वद ते प्रीतिकरं तथा करोमि ||८९ ||
நதிபி4ர்நுதிபி4ஸ்த்வமீஸ1 பூஜா
விதி4பி4ர்த்4யான-ஸமாதி4பி4ர்ந துஷ்ட: |
த4னுஷா முஸலேன சாஸ்1மபி4ர்வா
வத3 தே ப்ரீதி-கரம் ததா2 கரோமி ||89 ||
வில்லால் இடிபடினும் கல்லால் அடிபடினும்
வல்லால் கழிபடினும் – அதுயாதும்
நல்லார் அடிபணியும் அல்லால் எதுஎனினுன்
உள்ளால் வடியருளும் – அதுஏனோ
சொல்லால் துதிபுரினும் கல்லாய் நிலைபெறினும்
எல்லாம் வழிவுருகி – இருந்தாலும்
வல்லாய் அடியருள்வ தில்லாய் எதுபிரியம்
சொல்லாய் சரியுருவேன் – சிவநேசா
(89)

வில்லாலும், கழியாலும், கற்களாலும் அடிக்கப்பட்ட போதும் (அவற்றை எல்லாம் அடியார்களின் பணிவாகக் கருதி) மகிழ்ச்சி கொண்ட தாங்கள், எனது வணக்கங்களாலும், துதி மொழிகளாலும், தவ நிலைகளாலும் ஏனோ மகிழ்ச்சி கொள்வதில்லையே! தங்களுக்கு எது விருப்பம் எனச் சொல்லுங்கள், அதன்படியே யான் செய்கிறேன், சிவபெருமானே!

குறிப்பு:
எப்படி நாம் இறையருளாகிய ஆன்ம தரிசனத்தைப் பெறுவது? முறையாக வீட்டிலும், வெளியிலும், பூசை, தியானம் ஆகிய பலவழிகளில் முயன்றும், ஆத்ம தரிசனமாகிய சிவயோக சித்தி கிடைக்கவில்லையே? ஆனால், இதிகாச புராணங்களில், அப்படியான வழிபாடுகள் ஏதும் இல்லாமல், இறைவனைத் தாக்குவது போன்ற செயல்களைச் செய்தவர்களுக்கும் கூட, இறைவன் கருணை விளைத்ததாகக் காட்டுகின்றனவே?

சிவபிரானே, அர்ச்சுனன் தங்களை வேடன் என நினைத்து வில்லால் அடித்தும், அவனுக்கு அருள் தரவில்லையா! பிட்டுக்கு மண் சுமந்து திருவிளையாடல் செய்யும் போது, கழியால் அடி வாங்கிக் கொண்டு, கருணை காட்டினீர்களே! சிவத் தொண்டரான சாக்கிய நாயனார், நாள் தவறாமல் உம்மைக் கல்லால் அடித்தும் அவருக்குக் கருணை பொழிந்தீர்களே! உமக்குப் பிடித்தது தான் என்ன? எனக்குச் சொல்லுங்கள், அப்படியே செய்கிறேன். இப்படி எல்லாம், இறையருளுக்கு ஏங்கும் பக்தனாக, பகவான் ஆதி சங்கரர் இப்பாடலிலே காட்டுகின்றார்.

தான் எனும் அகந்தை இருக்கும் வரை, தன்னுள் இருக்கும் பரம் பொருளாகிய ஆத்மா, தானாகவே இருப்பதை உணருதல் முடியாது. அப்படி உணருதலே பரசிவ சுக வெள்ளத்தில் திளைத்தல். எனவே கர்மம், பக்தி, தியானம், ஞானம் என எப்பாதையில் சென்றாலும், எவ்வளவு விரிவாக அதற்கான முறைகளைப் பின்பற்றினாலும், அதனால் பலவித நன்மைகளும், நற்குணங்களும் ஒருக்கால் விளைந்தாலும், ‘நான்’ எனும் அகந்தை இருக்கும் வரை, ஆன்ம தரிசனமாகிய சிவஞான சித்தி கிடைக்காது. இதனை நேரடியான உபதேசமாகப் பெறவே, இறைவனிடம், உனக்குப் பிடித்தது என்ன என இப்பாடல் கேட்பதாக நாம் எடுத்துக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. (89)

88 – தன்னுள்ளே தனையுணரத் தருவான் அடி போற்றி!

90 – எளியோன் அன்புக்குள் எழுவான் அடி போற்றி!

Share this Post

Leave a Comment