Shivanandalahari – Verse 90

90 – எளியோன் அன்புக்குள் எழுவான் அடி போற்றி!

वचसा चरितं वदामि शंभो-
रहमुद्योगविधासु तेऽप्रसक्तः |
मनसा कृतिमीश्वरस्य सेवे
शिरसा चैव सदाशिवं नमामि ||९० ||
வசஸா சரிதம் வதா₃மி ஶம்போ₄-
ரஹமுத்₃யோக₃விதா₄ஸு தே(அ)ப்ரஸக்த: |
மனஸா க்ருதிமீஶ்வரஸ்ய ஸேவே
ஶிரஸா சைவ ஸதா₃ஶிவம் நமாமி || 90 ||
யோக முயர்வான பாதை வழியாகப்
போகு முறையாதும் – அறியேனே
லோக நலமான நாத சிவகாதை
ஓதி உரையாடி – மகிழ்வேனே
நாத னுருவான போத மனமாகச்
சீத னமுமான – சிவனேநின்
பாத மதிலாடிச் சேத னமுமாளச்
சாத னமுமாகும் – பெருமானே
(90)

யான் உயர்வான யோக நெறிகள் கற்று அவ்வழிகளை உணர்ந்தவன் அல்லன். உலகங்களின் நாதா, நினது கதைகளை யான் வாக்கினால் மொழிகிறேன். மனதில், இறைவனான நினது திருவுருவையே (பெரும் பயனாய்) ஏற்றிப் பணிகிறேன். சதாசிவமாகிய நின்னையே தலை வணங்கி (பாதங்களில் பணிந்து) வணங்குகிறேன்.

குறிப்பு:
89-ம் பாடலில், பல வழிகளிலும் தொழுதும், இறையருள் முழுமையாகக் கிடைப்பதற்கு இன்னும் என்ன வழி என்று கேட்ட பக்தன், இப்பாடலில், தனக்குச் சித்தர்கள் பழகும் சிவ யோக நெறிகள் எதுவும் தெரியாது என்பதால், எப்பொழுதும், சிவ புராணங்களை உரைப்பதும், மனதில் சிவனைத் தியானிப்பதும், தலை வணங்கிப் பணிவதுமான செயல்களை மட்டுமே செய்து கொண்டிருப்பாதாகக் கூறுவதாக, இப்பாடல் அமைந்துள்ளது.

கடினமான யோகங்களும், தவமும் முறையாகப் பழகாவிட்டால் என்ன! அன்பால் உருகும் மனதில் சிவனுருவும், நாவிலும், செவிகளிலும் அமுத மொழிகளிலே விரியும் சிவகதைகளும், அடைக்கலம் எப்பொழுதும் பரசிவமே எனப் பணியும் ஒழுக்கமும் கொண்டு நாம் இருந்தாலே போதுமே!

இப்படிக் காட்டி, எம் போன்ற எளியவர்களுக்கும், இறையருட் துணைக்கு வழி இருக்கிறது என்று பகவான் ஆதி சங்கரர் இப்பாடலில் உணர்த்தி இருக்கிறார். (90)

89 – தக்கார் அன்புக்குள் தழைக்கும் அடி போற்றி!

91 – மனச்சுழி அவிழ்த்தருளும் திருச்சுழி அடி போற்றி!

Share this Post

Leave a Comment