Shivanandalahari – Verse 91
91 – மனச்சுழி அவிழ்த்தருளும் திருச்சுழி அடி போற்றி!
द्विद्या हृद्या हृद्गता त्वत्प्रसादात् |
सेवे नित्यं श्रीकरं त्वत्पदाब्जं
भावे मुक्तेर्भाजनं राजमौले ||९१ ||
த்₃வித்₃யா ஹ்ருத்₃யா ஹ்ருத்₃க₃தா த்வத்ப்ரஸாதா₃த் |
ஸேவே நித்யம் ஶ்ரீகரம் த்வத்பதா₃ப்₃ஜம்
பா₄வே முக்தேர்பா₄ஜனம் ராஜமௌலே || 91 ||
மடத் தனந்தொலைய – அருளாலே
படத் தறுந்தவிழு முடிச் சதுந்தனது
பகுத் தறிந்துணரும் – அறிவாலே
திருத் தருந்தகையு திடத் தருநிதியும்
நிதப் பெருநிலையு – நிதமேயான்
தரப் படவிரியும் பரப் பதமலரை
பெறப் பணிந்தடையும் – பிறையோனே
(91)
தொடக்கத்தில் இருந்தே இதயத்தில் தொடர்ந்து இருக்கும் அறியாமையானது, உமது கருணையினால் முற்றிலும் தொலைந்து போய் விட்டது. இதயத்தில் இருக்கும் (ஐயமாகிய) முடிச்சுக்களை அவிழ்த்து (அதனால் பேருண்மையை) உணர்த்தும் பேரறிவு நிறைந்து விட்டது. (அதனால்) நந்நலம் அளிப்பதும், நிலையான உண்மையான முக்தியை அளிப்பதுமான உமது திருவடி மலர்களை எப்போதும் பணிந்து துதிக்கிறேன், ஓ, பிறை அணிந்த பெருமானே!
குறிப்பு:
பரம்பொருளாகிய சிவமே, பரந்து, எல்லாப் பொருளிலும், உடலிலும், உயிர்த்து இருக்கும் ஆன்மாவாக விளங்குகிறது. இந்தப் பேருண்மையை புரிந்து கொள்ளத் தொடங்கிய உடனேயே, தன் உடலையே தான் என்றும், மற்ற ஒவ்வொன்றும் வேறென்றும் பேதமை கொண்டு வெகு காலம் இருந்து வந்த நமது மனம், ஒரு தெளிவினை அடைகின்றது.
வெளிச்சமாகிய அறிவு விளக்கு, நமது உள்ளத்துள் வரும் போது, அங்கு காலா காலமாக அடைந்து கொண்டிருந்த அறியாமையாகிய இருள் விலகிப் போகிறது. அகல் விளக்காய் உள்ளெழுந்த அந்த ஞானச் சுடரை அணையாமல் நாம் போற்றி வளர்த்தால், அதுவே அகவிளக்கமாய் ஆகி, எங்கும் நிறைத்திருக்கும் பேரொளியாகத் தன்னுள்ளேயே யாவும் இருப்பதை உணர்த்திவிடும். அதுவே ஆத்ம வித்தை எனும் சிவயோகப் பயணம். அந்தப் பயணத்தின் பலன், நிரந்தர சுகமாகிய வீடு பேறு அல்லது முக்தி ஆகும்.
அப்பாதையில் நம்மை ஈடுபடுத்திய பக்தியாகிய சாதனம், நமக்கு முழுப் பயனையும் தரும் வகையில் தொடர்ந்து, திடமாக நடத்திச் செல்ல உதவ வேண்டும் என்ற வேட்கையினாலேயே, நல்லருள் கூட்டுகின்ற பரசிவனின் பாத மலர்களை வழுவாது தொழவேண்டும் என்று காட்டுகின்றது. இதுவே இப்பாடலின் உட்கரு. (91)