Shivanandalahari – Verse 92
92 – மாற்றத்தால் தீதறுத்து மகிழ்விப்பான் அடி போற்றி!
दौर्भाग्यदुःखदुरहंकृतिदुर्वचांसि |
सारं त्वदीयचरितं नितरां पिबन्तं
गौरीश मामिह समुद्धर सत्कटाक्षैः ||९२ ||
தௌ₃ர்பா₄க்₃யது₃:க₂து₃ரஹங்க்ருதிது₃ர்வசாம்ஸி |
ஸாரம் த்வதீ₃யசரிதம் நிதராம் பிப₃ந்தம்
கௌ₃ரீஶ மாமிஹ ஸமுத்₃த₄ர ஸத்கடாக்ஷை: ||92||
கெட்டவிழி விடுக்கும் – கெடுயாவும்
கெட்டசெருக் கவிப்பும் கெட்டமொழித் தவிப்பும்
கெட்டபழி அனைத்தும் – வெகுதூரம்
எட்டயவை மறைக்கும் நட்டசுகம் நிறைக்கும்
கட்டவிழச் சிவத்தின் – கதைபேசி
திட்டமிட தினத்தும் இட்டமிழ்து உணர்த்தும்
உற்றகர முயர்த்து – உமைநாதா
(92)
கெட்ட வினைகளின் விளைவுகளும், கெடுதி தருவதான தலைவிதிகளும், கண்ணுக்குத் தெரியாமலே விளையும் கேடுகளும், தீயதான செருக்கும், வன்சொல் பேச்சும் ஆகிய எல்லாத் தீமைகளும், எட்ட முடியாத தொலைவில் போய்த் தொலந்து விட்டன. உமது (சிவ புராணமாகிய) கதைகளின் அமுதத்தைப் பேசியும் (கேட்டும்) எப்போதும் இருந்து வருவதற்காக, என்னை இப்பிறவியிலேயே கை தூக்கி விடுக, உமையின் நாதனே!
குறிப்பு:
மாறாத சிவ யோகத்தினால், தான் உடல் அல்ல, மனம் அல்ல, அறிவல்ல, இவை எல்லாவற்றுக்கும் ஆதாரமான, நிலையான ஆன்மா எனும் தெளிவு பிறக்கிறது. அதனால், கர்மத்தின் பலனால் விளையும் சுக துக்கங்களும் ஒரு பொருட்டல்ல எனும் முதிர்ச்சியும், அவற்றை ஏற்றுக் கொள்ளவும் முடிகிறது.
ஞானத் தீயினால், குவிக்கப்பட்ட முன் வினைகளின் விளைவுகளும், அதை விளைக்கும் தலை எழுத்துக்களும் முற்றிலும் அழிக்கப்படுகின்றன. ஆன்ம அறிவினால், யாவும் தானே என உணர முடிவதால், இனிமேல் எப்பொருளிலும், எவரிடத்திலும், நமக்கு விருப்பும், வெறுப்புமில்லை. அதனால் நமக்குச் செருக்கும் இல்லை. அப்படியானால், தீமை என எதுவுமே இனி இருக்கப் போவதில்லை.
அதுவே பிறவிப் பயன். அந்நிலையிலேயே என்றும் நிலைக்க, இப்பிறவியிலேயே, வீழ்ந்து கிடக்கும் நம்மை, கை கொடுத்துத் தூக்கிவிட இறைவன் வர வேண்டும். அந்த வரவு, ஒரு குரு வழியாகவோ, நல்லோர் மொழி வழியாகவோ, தானாகவோ எப்படியோ நடந்தாக வேண்டும். அதுவும் இப்பிறவியிலேயே நடக்க வேண்டும். இதனையே இப்பாடல் குறிக்கின்றது. (92)