Shivanandalahari – Verse 94
94 – கவினறிவுப் பொறிபுலனாய்க் காணும் அடி போற்றி!
तावेव करौ स एव कृतकृत्यः |
या ये यौ यो भर्गं
वदतीक्षेते सदार्चतः स्मरति ||९४ ||
தாவேவ கரௌ ஸ ஏவ க்ரு2தக்ரு2த்ய: |
யா யே யௌ யோ ப4ர்க3ம்
வத3தீக்ஷேதே ஸதா3ர்சத: ஸ்மரதி ||94 ||
நற்பொறி நாவென – அறிவாகி
எப்பொழு துனையே முற்பர விழியே
நற்றறி தாமென – நயமாக
எப்பொழு துனையே அர்ச்சிடு முறையே
நற்கர மாமென – நலமாகி
எப்பொழு துனையே உட்படு பவனே
நற்பய னானவன் – நிறைவாக
(94)
எது எப்போதும் இறையருளைப் பேசுகின்றதோ அதுவே நாக்கு. எவை இறையருளை எங்கும் காண்கின்றதோ அவையே கண்கள். எவை இறைவனைத் தொழுதல் ஆகிய செயலைச் செய்கின்றனவோ, அவையே கரங்கள். எவன் எப்போதும், இறைச் சிந்தனையுடன் இருக்கின்றானோ, அவனே பிறவியின் பயனை அடைபவன்.
குறிப்பு:
நமது வாக்கு, காயம், மனம் எனும் எல்லாப் பொறி அறிவும், புலனறிவும், அந்தக்கரணங்களும் இறைச் சிந்தனையிலேயே எப்பொழுதும் ஈடுபட்டிருக்க வேண்டும். அப்படி இருப்பது, முற்றும் துறந்திருக்கும் முனிவர்களுக்கு மட்டுமே உள்ள தகுதி என்பது அல்ல. உலக வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் நாமும் அப்பேறு பெற்றவர்கள்தான்.
எப்படி என்றால், செய்யும் செயல்களை இறைவனின் பொருட்டுச் செய்வதாகிய கர்ம யோகமும், இறைச் சிந்தனை ஊட்டும் பக்தியோகமும்,
‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ எனும் வள்ளலார் வாக்கிற்கேற்ப, எல்லா உயிர்களிடத்தும் வைக்கும் மாசற்ற அன்பும், இனிய வார்த்தைகளினால், எல்லோருக்கும் நன்மை அளிக்கும் குணமும் கொண்டு நாம் விளங்கினால், நாம் இப்பாடலின் கருத்திற்கேற்ப நடப்பவர்கள் ஆகிறோம். அப்படி இருப்பதே, வாழ்வில் அடைய வேண்டிய எல்லாப் பயன்களையும் தருவித்துக் கொடுக்கும் வழியாகும் என்பது இப்பாடலின் இறுதி வரிகளில் உறுதி செய்யப்பட்டது. (94)