Shivanandalahari – Verse 95

<

95 – உருகாத என்மனத்தை உய்விப்பான் அடி போற்றி!

अतिमृदुलौ मम चरणा-
वतिकठिनं ते मनो भवानीश |
इति विचिकित्सां संत्यज
शिव कथमासीद्गिरौ तथा प्रवेशः ||९५ ||
அதிம்ருது₃லௌ மம சரணா-
வதிகடி₂னம் தே மனோ ப₄வானீஶ |
இதி விசிகித்ஸாம் ஸந்த்யஜ
ஶிவ கத₂மாஸீத்₃கி₃ரௌ ததா₂ ப்ரவேஶ: || 95 ||
வெய்யக்கொடு வாகியதால்மனம்
கொய்யக்கடி தானதினாலதில்
உய்யத்துள வாகிடில்பூவடி – மெதுவாக
நையப்பட வாகிடும்பூவிதம்
ஐயப்பட லாகிடும்காரணம்
மெய்யப்ப னேயினிமேல்விடு – எனக்கூடி
செய்யப்பெரு சேவையதாற்சிவ
மெய்யப்பனருட் தேவையதாலினி
உய்யத்தவ மாகியதாலிது – ஒருகேள்வி
துய்யப்பெரு தூமலைப்பாறைகள்
செய்யக்கடு சேருயர்மேடுகள்
எய்யச்சிவ மாயருள்கூடுதல் – எதனாலே?
(95)

பவானி நாதா, ‘உன் உள்ளம் மிகவும் கடினமானது, என்னுடைய திருவடிகள் மிகவும் மென்மையானது’ என்று எண்ணுவாயானால் (அந்த ஐயத்தால் என் உள்ளத்துள் வராது போய் விடுவாயானால்), அந்த ஐயத்தை அறவே விடுக. பின் எதற்காக, மலைகளில் நிலவி வருகின்ற நிலை உங்களுக்கு ஏற்பட்டது?

குறிப்பு:
பக்தனுக்கு ஒருவேளை தனது இதயம் அன்பாலும் பக்தியாலும் உருகாத பாறையாக இருப்பதால்தான், இறைவன் தனது மென்மையான பாத மலர்களைத் தனது மனதில் இருத்த இன்னும் வரவில்லை எனும் ஐயம் எழுகின்றது. அந்த ஐயத்தை இறைவனின் மேல் திணித்து, ‘இறைவா, அப்படி ஒரு ஐயம் உமக்கு இருந்தால், அது நியாயம் அற்றது. ஏனெனில், தாங்கள் கடினமான பாறைகளிலும், மலைகளிலும் உலவிப் பழக்கப்பட்டவர் தானே!’ என்று கேட்கிறான்.

இப்படிக் கேட்க வைத்து, பகவான் ஆதி சங்கரர், நமது மன நிலை எப்படி இருந்தாலும், மதி முதிர்ச்சி எப்படி இருந்தாலும், அன்பு ஒன்றினாலேயே, ஆண்டவனின் அருளடிகளைக் கண்ணாரச் சுமக்கும் நற்கதியினைப் பெற முடியும் என்று இப்பாடலில் காட்டி இருக்கிறார்.
தமிழ் மொழி பெயர்ப்பில், இவன் மனம் கடினம் என்றால், இவன் இன்னும் கொடியன் என்ற அனுமானம் கொள்ளலாம் என்றும், இறைவனிடம் ஐயத்தை விட்டு நம்மை அடைய வரச் சொல்லும் உரிமைக்காக, ஶிவானந்த₃லஹரீ பயில்கின்ற பெரும் சேவைக்கு, இறையருள் தேவை என நினைவு படுத்திக் கொள்ளலாம் என்றும், இரண்டு அடிகள் அதிகமாகவே, பொருளுக்கு விளக்கமாத் தமிழிலே சேர்க்கப்பட்டிருக்கிறது.
இதனை பகவான் ஆதி சங்கரரது அருளனுமதியாகத் துதித்துப் பணிகிறேன்.

94 – கவினறிவுப் பொறிபுலனாய்க் காணும் அடி போற்றி!

96 – மன யானை தனையாளும் மாதங்கன் அடி போற்றி!

Share this Post

Leave a Comment